செவ்வாய், 5 அக்டோபர், 2010
எந்திர(ன்) மயமான வாழ்வில் ஒரு வயலின் கச்சேரி
எந்திரன் மேனியா பிடித்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் எந்திரன் இல்லாமல் பதிவு எழுதுவது பொலிடிகலி சரியாக இருக்காது என்பதால் இந்த தலைப்பு. சரி. விஷயத்திற்கு வருவோம். வயலின் வித்வான்கள் கன்னியாகுமரி மற்றும் அவருடைய மாணவர் எம்பார் கண்ணன் அவர்கள் இணைந்து டேடிராய்டில் அக்டோபர் ஒன்றாம் நாள் வழங்கிய இசை விருந்தைப் பற்றிய என் அனுபவங்கள்.
என் கர்நாடக இசை அறிவு என்பது அனுபவப் பூரணமானது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக இசை கேட்டதில் பெற்ற ஞானம் (ஞானமெல்லாம் கொஞ்சம் ஓவர்?). கச்சேரிக்கு வரும் பாதி பேருக்கு மேல் இதே கதை தான். சில பேர் வர்ணம் வரைக்கும் கற்றேன், கீர்த்தனை வரும் போது கல்லூரி படிப்பு, கல்யாணம், வேலை, குழந்தை என்று ஏதாவது காரணத்தைச் சொல்லி மேலே கற்க முடியாமல் போன (சேஷ கோபாலனுக்கு போட்டியாக வந்திருக்கலாம் போல) பழைய நினைவுகளில் மூழ்குவதைப் பார்க்கலாம்.
ஒரு முறை கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நிற்கும் போது பக்கத்தில் நின்ற வயதான பெண்மணி ஒரு பச்சை நிற பஸ் வந்த உடன் திருவேங்கடம் செல்லும் பஸ் வந்து விட்டது என்றார். நான் வியந்து பார்த்த போது அந்த அம்மாள் எனக்குப் படிக்கத் தெரியாது ஆனால் பஸ்சின் நிறத்தை வைத்து எங்கு செல்லும் என கண்டறிவேன் என்று ஒரு போடு போட்டார்.
அது போல் ராகம் கண்டறிய "pattern matching" தான். இதில் பெரிய பிரச்சனை வித்வான்கள் அந்த மதி, இந்த நிதி என்று ஏதாவது ராகத்தை எடுத்து தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பித்தால் ஆட்டம் க்ளோஸ். சுற்றி முற்றி பார்த்து பிரம்மா படைப்பின் பிரமிப்பை ஆராய்ந்து அழகை ஆராதிக்க வேண்டியது தான்.
ஆனால் இந்த இசை விருந்து அப்படி இருக்கவில்லை. மிகவும் ரசிக்கும் படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.நாட்டக் குறிஞ்சி வர்ணத்தில் ஆரம்பித்த கச்சேரி விறுவிறுப்பான "மஹாகணபதிம்" நாட்டையில் பயணித்து ரசிகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. அடுத்து தேவ காந்தரியில் "ஷீரசாகர சயன" தென்றலாக வந்து மனதை வருடிச் சென்றது.
கச்சேரியின் உச்சகட்டமாக அமைந்தது சங்கராபரணத்தில் "ஸ்வரராக சுதாவும்" மற்றும் நட பைரவியில் MLV யின் மிகவும் பிரபலமான "ஸ்ரீ வள்ளி தேவ சேனாபதே" என்ற கீர்த்தனைகள். ஸ்வரராக சுதா கேட்க மிகவும் இன்பமாக இருக்கும். அதை வாசித்த விதம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
நட பைரவியில் கன்னியாகுமரியும் அதுவரை அடக்கி வாசித்த எம்பார் கண்ணனும் ஸ்வரப் பிரஸ்தாரத்தில் மிக மிக அருமையாக வாசித்து ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றார்கள் என்றால் மிகையாகாது.
ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ் அவர்கள் தான் மிருதங்கத்தில். தனியில் பின்னி எடுத்துவிட்டார். சில இடங்களில் "அதுருதில்லே" என்று இருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது.நல்ல கலைஞரான கஞ்சீரா கார்த்திக் அதிக வாய்ப்பில்லாமல் மேடையில் அமர்ந்திருந்தது வருத்தமாக இருந்தது.
துக்கடாவில் துஜாவந்தியில் ராமச்சந்திர வாசித்த பிறகு மனதிற்கு இதமான "மானச சஞ்சரரே" காற்றில் மிதந்து வந்தது. அடுத்து ராகமாலிகையில் "வெங்கடேச கோவிந்தா" தொடர்ந்த போது ஸ்ரீ முஷ்ணம் அவர்கள் ரசிகர்கள் எல்லோரையும் கைதட்டும் படி செய்ததில் ஏதோ கோவிந்தபுரம் விட்டல் தாஸ் நாம சங்கீர்த்தனத்தில் அமர்ந்து இருந்த உணர்வு ஏற்பட்டது.
இறுதியில் "மிஸ்ர சிவரஞ்சனி" தில்லானா எண்பதுகளில் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் சந்திரசேகரன் அவர்களின் வயலினுடன் கேட்டு ரசித்த நாட்களை நினைவில் கொண்டு வந்தது. ஆக மொத்தம் இனிமையான மாலைப் பொழுதாகக் கழிந்தது.
இந்த நிகழ்ச்சியை இணைந்து ஏற்பாடு செய்த நண்பர் கிருஷ்ணன் அவர்கள் நடத்தும் "iCarnatic.org" மற்றும் "Michigan Sahana" அமைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Labels:
கர்நாடக இசை அனுபவம் வயலின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)