செவ்வாய், 2 ஜூன், 2009

கருணாநிதியின் அயரவைக்கும் அயராத உழைப்பு



சமீப காலமாக தனது அரசியல் நிலை பாடுகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான தலைவர் என்றால் அது கருணாநிதி தான் என தமிழகத்தில் உள்ள குழந்தை கூட சொல்லும். இப்போது கூட இலங்கையில் தமிழ்ர்கள் துயரத்தின் உச்சத்தில் தள்ளாடும் போது கருணாநிதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என்ற கேள்வி முன்வைக்கப் படுகிறது..அதை முடிவு செய்யும் உரிமை அவருக்குத் தான் உண்டு. ஆனால் இந்த 86ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதியின் அதிசயக்க வைக்கும சில குணாதிசியங்களைப் பார்ப்போம். இதில் அரசியல் இல்லாமல் கருணாநிதி என்ற தனி மனித வளர்ச்சிக்கு கைகொடுத்த சில தன்மைகளைப் பற்றி நோக்குவோம்.

கருணாநிதியின் கடுமையான உழைப்பு, விடா முயற்சி, கட்சி நிர்வாகத்தை நடத்தும் திறன் (organaisational ability), பத்திரிகையாளர்களை கையாளும் முறை,இழையோடும் நகைச் சுவை மற்றும் எழுத்து, பேச்சுத் திறமைகள் போன்றவைகள் தான் இன்று அவரை பல லட்சம் பேர் "கலைஞர்" என்று அன்பாக அழைக்கும் நிலையில் உயர்த்தி இருக்கிறது என்பது என் கணிப்பு.ஒவ்வொரு தன்மைக்கும் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

எத்தனை மேடைகள், எத்தனை பொதுக் கூட்டங்கள், எத்தனை அறிக்கைகள்,எத்தனை போராட்டங்கள்.கணக்கில் அடங்காதவை.சில மாதங்களுக்கு முன்பு வரை பம்பரமாக சுற்றி வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த போது அரசியல் வாதிகளைப் பற்றி மிகக் கடுமையாக குறை கூறிய போது, கருணாநிதியை விமர்சிக்கும் "சோ" கூட அவரின் அயராத உழைப்பைப் பாராட்டி எழுதியது நினைவிருக்கலாம்.அத்தனை பெரிய பெயர்கள் கொண்ட ஓர் இயக்கத்தில் தலைமை ஏற்று இத்தனை ஆண்டுகள் தக்க வைத்துக் கொண்டது, அரசியல் தந்திரமாக இருந்தாலும், அதன் பிண்ணனியில் இருப்பது அவருடைய தொடர் உழைப்பு என்பதை மறுக்க முடியாது.




தோல்வியைக் கண்டு துவளாத குணம். 1980ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகி விடுவார் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். ஆனால் எம்.ஜி.யார் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.மிகப் பெரிய ஏமாற்றம்.(கிட்டதட்ட இப்போது ஜெயாவுக்கு ஏற்பட்ட நிலை).ஆனால் துவளாமல் மீண்டும் போராட்டம். 84ம் ஆண்டு தோற்றாலும்,89ம் ஆண்டு வென்று முதல்வர் ஆனார்.தோல்வியில் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது மிகக் கடினம்.அதில் மிகத் திறமை வாய்ந்தவர் கருணாநிதி.91ம் ஆண்டு வரலாறு காணாத தோல்வி.மீண்டும் வெற்றி.ஆட்சியில் நடந்த நல்லது கெட்டதுகளைப் பற்றி நான் சொல்ல வரவில்லை.ஆனால் வியப்பளிக்கும் அந்த விடா முயற்சி. மெச்சிக் கொள்ள வேண்டிய ஒன்று.

1977ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல்.பாளையங்கோட்டையில் தி.மு.க தேர்தலில் நிற்கவில்லை. தராசு சின்னத்தில் நின்ற பாளை ஷண்முகத்தை ஆதரித்து பாளை ஜவஹர் மைதானத்தில் பொதுக் கூட்டம். கருணாநிதி உரையாற்றினர்.அதில் சிறப்பு என்னவென்றால், மேடையில் கிட்டத்தட்ட 30௦ முதல் 40௦ பேர் அமர்ந்திருந்தார்கள்.கருணாநிதி அத்தனை பேர்களின் பெயர்களையும் ஒன்று விடாமல் எந்த குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் வரிசையாக கூறியது தான். சந்திர பாபு நாய்டு தெலுங்கு தேச கட்சியில் சேர்ந்து அதை அமைப்பு ரீதியாக மாற்றி அமைத்து நிர்வகித்த போது, பல வட நாட்டு பத்திரிகைகள் சந்திர பாபுவிடம் கருணாநிதியின் கட்சி நிர்வாகத் திறன் வெளிப்படுவதாக எழுதியதை இன்று நினைவு கூறுகிறேன்.

பத்திரிகையாளர்களைக் கண்டாலே பயந்து ஓடும் பல அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்ந்து அவர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு மிகவும் சாதுர்யமாக பதில் அளிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சந்திக்காத நாட்களில் கேள்வி பதில் மூலம் மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது இவர் வழக்கம்.தலைவர்களுக்கு இந்த "communication" எவ்வளவு முக்கியம் என்பது இவர் அரசியல் பாதையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்கப் போகிறார்கள் என்றவுடன் ஒரு மாற்றுத் திட்டத்துடன் கருணாநிதியை சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவர் விஜயகாந்திடம் ஒரு "ப்ளானோடு" தான் வந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது என்று கூறியிருக்கிறார். அதே போல் ஒரு முறை பதவியில் இல்லாத போது, அவர் நடத்தி வைத்த திருமணத்தில் பேசும் போது "நான் ஆண்டவன்" என்று கூறி சபையோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.அதற்கு விளக்கம் கொடுக்கும் போது "நான் முன்னால் இந்த நாட்டை ஆண்டவன்" என்று கூறி சிரிப்பலையை வரச் செய்தார். இப்படி இவருடைய நகைச் சுவை உணர்விற்கு பல உதாராணங்கள் கூறலாம்.

இவர் பேச்சுத் திறமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று நினைக்கும் போது பேச்சை நிறுத்தி விடுவார்.மேலும் கூட்டத்திற்கு மற்றும் சபையோர்களின் ஆர்வத்திற்குத் தகுந்தாற்ப் போல் பேசும் திறன் உள்ளவர். எழுதுவது என்பது உள்ளங்கையைப் பார்ப்பது போல் இவருக்கு.வசனம் ஆகட்டும் தொண்டர்களுக்கு கடிதமாகட்டும் சொல்ல வேண்டியது மிகக் கச்சிதமாக இருக்கும். இருவர் உள்ளம் என்ற படத்திற்கு இவர் எழுதிய வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

40௦ வருடம் ஒரு கட்சியின் தலைவராக தொடர்ந்து இருப்பது என்பது அத்தனை சுலபமில்லை. இவர் குடும்பத்தார் வேண்டுமானால் இவரிடம் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து விசுவாசம் கட்டலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல் லட்சம் பேர் இவர் பின்னால் நிற்கிறார்கள் என்றால் அது ஓர் ஒப்பிடமுடியாத விஷயம் தான்.

3 கருத்துகள்:

  1. //பத்திரிகையாளர்களைக் கண்டாலே பயந்து ஓடும் பல அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்ந்து அவர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு மிகவும் சாதுர்யமாக பதில் அளிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை.//

    உண்மை என்னன்னா இவர பார்த்து தான் பத்திரிக்கையாளர்கள் ஓடுவார்கள். சமீபத்திய ஓட்ட பந்தய வீரர் NDTV.

    பதிலளிநீக்கு
  2. Indha vara blog punch for Karunanidhi

    பேசும் போது "நான் ஆண்டவன்" என்று கூறி சபையோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.அதற்கு விளக்கம் கொடுக்கும் போது "நான் முன்னால் இந்த நாட்டை ஆண்டவன்" என்று கூறி சிரிப்பலையை வரச் செய்தார். இப்படி இவருடைய நகைச் சுவை உணர்விற்கு பல உதாராணங்கள் கூறலாம்

    Good punch ...great

    பதிலளிநீக்கு
  3. நன்றி அஹோரி மற்றும் ஹாரிஸ் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு