அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2009

டின்னமன் சதுக்க (Tiananmen Square) நினைவு நாளும் இலங்கையில் தமிழர்களின் நிலைமையும்


சீனாவில் டின்னமன் சதுக்கத்தில் (Tiananmen Square) 20௦ ஆண்டுகளுக்கு முன் நடந்த அடக்கு முறையில் பல மாணவர்களும், பொது மக்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அங்கு உண்மையில் நடந்தது என்ன என்று இன்று வரை அதிகாரப் பூர்வமான தகவல் சீன அரசிடம் இருந்து வெளிவரவில்லை.மேலும் இந்த நினைவு நாளை கொண்டாடும் விதமாக மீண்டும் எந்த எழுச்சியும் ஏற்படாமல் இருக்க ஹாட்மைல்,ட்விட்டேர்,பின்கு மற்றும் பிலிக்கர் முதலிய தளங்களை சீனாவில் யாரும் உபயோகப் படுத்தமுடியாமல் அங்குள்ள அரசு தடுத்திருக்கிறது.
கடந்த 20௦ வருடங்களில் தான் எத்தனை மனிதபிமானமில்லாத அடக்கு முறைகள் உலகத்தில் பல அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ருவண்டா,போஸ்னியா,ஈராக்,டார்பார்,கொண்டனமோ பே, மற்றும் சமீபத்தில் இலங்கை. இவைகள் எல்லாம் செய்திகளாக வந்து போகின்றன.மனித இனமும் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டும்,ஜீரணித்துக் கொண்டும் வாழ்கையைத் தொடர்கின்றன.
போ டோங் (Bao Tong) என்ற மனித உரிமை பாதுகாவலர் மற்றும் ஜனநாயக விரும்பி 1989ம் ஆண்டு டின்னமேன் சதுக்கப் போராட்டத்தில் பங்கு கொண்ட முதன்மையானவர்களில் ஒருவர்.இந்த நினவு நாளை ஒட்டி அவர் ஆசைப் படும் விஷயங்களை பட்டியலிடிருக்கிறார்.

1. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக வந்து சீனாவில் மக்களைப் பேட்டி எடுக்கும் நிலை வரவேண்டும்.
2. நிலத்தை இழந்த விவசாயிகள் வக்கீல்களின் உதவி கிடைக்கப் பெற்று தங்கள் உரிமையை நிலை நாட்ட வழி வகுக்க வேண்டும்.
3. சீனாவின் கம்யூனிஸட் கட்சி பெரும்பான்மையர்களின் முடிவுக்குக் கட்டுப் படுவதை செயல் படுத்த வேண்டும்.
4. குறிப்பாக 1989ம் ஆண்டு போராட்டத்தில் பங்கு கொண்டு தவறு இழைக்கப் பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
இறுதியில் போ கூறுகிறார் "எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை" என்று.



இலங்கையில் இன்றுள்ள நிலைமையும் இதே தான்.போ ஆசைப்படும் அதே நிலை இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஏற்படவேண்டும்.
பத்திரிகையாளர்களும்,மனிதாபிமான உதவிக் குழுக்களும் போரில் பதிக்கப் பட்ட இடத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
தமிழர்கள் இனி மேலாவது சுதந்திரமாக வாழ வகை செய்ய வேண்டும்.
வேலிக்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
உண்மையாக பேரழிவு நாளன்று என்ன நடந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
எல்லா தமிழர்களையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
இதெல்லாம் நடக்குமா? போ போல் எனக்கும் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. உங்களில் யாருக்காவது இந்த நம்பிக்கை உண்டா?

செவ்வாய், 2 ஜூன், 2009

கருணாநிதியின் அயரவைக்கும் அயராத உழைப்பு



சமீப காலமாக தனது அரசியல் நிலை பாடுகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான தலைவர் என்றால் அது கருணாநிதி தான் என தமிழகத்தில் உள்ள குழந்தை கூட சொல்லும். இப்போது கூட இலங்கையில் தமிழ்ர்கள் துயரத்தின் உச்சத்தில் தள்ளாடும் போது கருணாநிதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என்ற கேள்வி முன்வைக்கப் படுகிறது..அதை முடிவு செய்யும் உரிமை அவருக்குத் தான் உண்டு. ஆனால் இந்த 86ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதியின் அதிசயக்க வைக்கும சில குணாதிசியங்களைப் பார்ப்போம். இதில் அரசியல் இல்லாமல் கருணாநிதி என்ற தனி மனித வளர்ச்சிக்கு கைகொடுத்த சில தன்மைகளைப் பற்றி நோக்குவோம்.

கருணாநிதியின் கடுமையான உழைப்பு, விடா முயற்சி, கட்சி நிர்வாகத்தை நடத்தும் திறன் (organaisational ability), பத்திரிகையாளர்களை கையாளும் முறை,இழையோடும் நகைச் சுவை மற்றும் எழுத்து, பேச்சுத் திறமைகள் போன்றவைகள் தான் இன்று அவரை பல லட்சம் பேர் "கலைஞர்" என்று அன்பாக அழைக்கும் நிலையில் உயர்த்தி இருக்கிறது என்பது என் கணிப்பு.ஒவ்வொரு தன்மைக்கும் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

எத்தனை மேடைகள், எத்தனை பொதுக் கூட்டங்கள், எத்தனை அறிக்கைகள்,எத்தனை போராட்டங்கள்.கணக்கில் அடங்காதவை.சில மாதங்களுக்கு முன்பு வரை பம்பரமாக சுற்றி வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த போது அரசியல் வாதிகளைப் பற்றி மிகக் கடுமையாக குறை கூறிய போது, கருணாநிதியை விமர்சிக்கும் "சோ" கூட அவரின் அயராத உழைப்பைப் பாராட்டி எழுதியது நினைவிருக்கலாம்.அத்தனை பெரிய பெயர்கள் கொண்ட ஓர் இயக்கத்தில் தலைமை ஏற்று இத்தனை ஆண்டுகள் தக்க வைத்துக் கொண்டது, அரசியல் தந்திரமாக இருந்தாலும், அதன் பிண்ணனியில் இருப்பது அவருடைய தொடர் உழைப்பு என்பதை மறுக்க முடியாது.




தோல்வியைக் கண்டு துவளாத குணம். 1980ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகி விடுவார் என்று ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். ஆனால் எம்.ஜி.யார் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.மிகப் பெரிய ஏமாற்றம்.(கிட்டதட்ட இப்போது ஜெயாவுக்கு ஏற்பட்ட நிலை).ஆனால் துவளாமல் மீண்டும் போராட்டம். 84ம் ஆண்டு தோற்றாலும்,89ம் ஆண்டு வென்று முதல்வர் ஆனார்.தோல்வியில் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது மிகக் கடினம்.அதில் மிகத் திறமை வாய்ந்தவர் கருணாநிதி.91ம் ஆண்டு வரலாறு காணாத தோல்வி.மீண்டும் வெற்றி.ஆட்சியில் நடந்த நல்லது கெட்டதுகளைப் பற்றி நான் சொல்ல வரவில்லை.ஆனால் வியப்பளிக்கும் அந்த விடா முயற்சி. மெச்சிக் கொள்ள வேண்டிய ஒன்று.

1977ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல்.பாளையங்கோட்டையில் தி.மு.க தேர்தலில் நிற்கவில்லை. தராசு சின்னத்தில் நின்ற பாளை ஷண்முகத்தை ஆதரித்து பாளை ஜவஹர் மைதானத்தில் பொதுக் கூட்டம். கருணாநிதி உரையாற்றினர்.அதில் சிறப்பு என்னவென்றால், மேடையில் கிட்டத்தட்ட 30௦ முதல் 40௦ பேர் அமர்ந்திருந்தார்கள்.கருணாநிதி அத்தனை பேர்களின் பெயர்களையும் ஒன்று விடாமல் எந்த குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் வரிசையாக கூறியது தான். சந்திர பாபு நாய்டு தெலுங்கு தேச கட்சியில் சேர்ந்து அதை அமைப்பு ரீதியாக மாற்றி அமைத்து நிர்வகித்த போது, பல வட நாட்டு பத்திரிகைகள் சந்திர பாபுவிடம் கருணாநிதியின் கட்சி நிர்வாகத் திறன் வெளிப்படுவதாக எழுதியதை இன்று நினைவு கூறுகிறேன்.

பத்திரிகையாளர்களைக் கண்டாலே பயந்து ஓடும் பல அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்ந்து அவர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு மிகவும் சாதுர்யமாக பதில் அளிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சந்திக்காத நாட்களில் கேள்வி பதில் மூலம் மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது இவர் வழக்கம்.தலைவர்களுக்கு இந்த "communication" எவ்வளவு முக்கியம் என்பது இவர் அரசியல் பாதையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்கப் போகிறார்கள் என்றவுடன் ஒரு மாற்றுத் திட்டத்துடன் கருணாநிதியை சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவர் விஜயகாந்திடம் ஒரு "ப்ளானோடு" தான் வந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது என்று கூறியிருக்கிறார். அதே போல் ஒரு முறை பதவியில் இல்லாத போது, அவர் நடத்தி வைத்த திருமணத்தில் பேசும் போது "நான் ஆண்டவன்" என்று கூறி சபையோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.அதற்கு விளக்கம் கொடுக்கும் போது "நான் முன்னால் இந்த நாட்டை ஆண்டவன்" என்று கூறி சிரிப்பலையை வரச் செய்தார். இப்படி இவருடைய நகைச் சுவை உணர்விற்கு பல உதாராணங்கள் கூறலாம்.

இவர் பேச்சுத் திறமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று நினைக்கும் போது பேச்சை நிறுத்தி விடுவார்.மேலும் கூட்டத்திற்கு மற்றும் சபையோர்களின் ஆர்வத்திற்குத் தகுந்தாற்ப் போல் பேசும் திறன் உள்ளவர். எழுதுவது என்பது உள்ளங்கையைப் பார்ப்பது போல் இவருக்கு.வசனம் ஆகட்டும் தொண்டர்களுக்கு கடிதமாகட்டும் சொல்ல வேண்டியது மிகக் கச்சிதமாக இருக்கும். இருவர் உள்ளம் என்ற படத்திற்கு இவர் எழுதிய வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

40௦ வருடம் ஒரு கட்சியின் தலைவராக தொடர்ந்து இருப்பது என்பது அத்தனை சுலபமில்லை. இவர் குடும்பத்தார் வேண்டுமானால் இவரிடம் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து விசுவாசம் கட்டலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல் லட்சம் பேர் இவர் பின்னால் நிற்கிறார்கள் என்றால் அது ஓர் ஒப்பிடமுடியாத விஷயம் தான்.

வியாழன், 28 மே, 2009

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் கருணாநிதியும்,வரலாறும்


தமிழ் நாட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும், குதுகலமாகவும் இருக்கும் நபர் முதலமைச்சர் கருணாநிதியாகத் தான் இருக்க முடியும். அதில் தவறு ஒன்றுமில்லை.சமீபத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் மகத்தானவைகள் என்றால் மிகையாகாது.வெற்றிகளின் பட்டியல் இதோ:

1. பாராளுமன்றத் தேர்தலில் பலமுனை எதிர்ப்பையும் முறியடித்து வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.குறிப்பாக அவர் மகன் அழகிரியின் வெற்றி அவரை இன்பக் கடலில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

2. கூடவே இருந்து கருணாநிதியையும்,தி.மு.கவையும் கடுமையாகத் தாக்கி வந்த ராமதாஸ் மண்ணைக் கவ்வியதில் பேரானந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தான் வேண்டுமா?

3. தன்னுடைய பரம எதிரியான எம்.ஜி.யாரின் கட்சி மத்திய அரசின் பக்கம் தலை வைக்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வரும் சாதனை மனதைக் குளிர வைக்காமல் என்ன செய்யும்?

4.பொது வாழ்வுக்காக தன் வாழ்கையையே அர்பணித்துக் கொண்டாலும், தன் குடும்பங்கள் மீது தீராத பாசம் வைத்திருக்கும் கருணாநிதிக்கு மகன்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பீடத்தில் அமருவதைக் கண்டு மனம் குதூகலிக்காமல் என்ன செய்யும்?

5. அத்தனை இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கருணாநிதியைத் தேடி வந்த போது, விடுதலைப் புலிகள் மட்டும் எம்.ஜி.யாரைத் தேடிச் சென்றனர். அந்த விடுதலைப் புலிகள் இன்று தோற்றது இவருக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருக்க முடியுமா?

வரலாறு இவரைப் பற்றி என்ன சொல்லும்?

1. கடந்த ஐம்பது வருடங்களாக தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவர் உண்டென்றால் அது கருணாநிதி தான்.இவர் இல்லாத வரலாறு நினைத்துக் கூட பார்க்க முடியாது

2. எத்தனையோ விதமான வேறு பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் (ஊழல்,அராஜகம்,தன குடும்பத்தை முன்னிறுத்துதல்), இவர் சாதாரண மக்களுக்கு செய்த உதவிகள் மறுக்க முடியாதவை.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் இவருக்கு பெருமை சேர்க்கும்.

ஆனால் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டத்தின் மீது தான் அவருக்கு மிகுந்த பற்று இருந்தது. அது இப்போது அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகும்.குறிப்பாக 1980 களில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவர் காட்டிய வேகம் அவரை "உலகத் தமிழர்களின் தலைவர்" என்ற பட்டத்தை நோக்கி இட்டுச் சென்றது. ஆனால் இன்று "அவர் இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்ட ஈழப் பிரச்சனைக்கு" கடிதம் எழுதுவது,தந்தி அடிப்பது,கவிதை எழுதுவது போதும் என்று நினைத்து விட்டார் போல் உள்ளது.இன்று பெற்ற பதவிகள் சுகம், நாளைக் கிடைக்கப் போகும் பட்டத்தை விட குதுகலமானது இல்லையா? பட்டம் கிடைக்கவில்லை என்றால் என்ன? ஆண்டவன் தீர்ப்பு என்று புலம்பாமல் அடங்கிப் போக வேண்டியது தான்.

வெள்ளி, 22 மே, 2009

"அரசை நான் நடத்த வேண்டாமா?" கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பதிலடி


தான் சொல்லிய படி எல்லாம் ஆடி வந்த பிரதமர் மன்மோகன் சிங் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறியது தான் கருணாநிதியை கோபத்தோடு சென்னை திரும்ப வைத்தது. இவர் இருக்கும் இடம் தேடி 2004ம் ஆண்டு வந்த காங்கிரசார், இன்று உடல் நிலை சரியில்லாத போதும் அவர்களைத் தேடி வரும் படி செய்தது பரிதாபம் தான்.

அப்படியாவது முறைத்துக் கொண்டு வந்தால் பதவி ஏற்பு விழா நடக்காது என்ற கனவு பொய்த்துப்போனது. "அரசை நான் நடத்த வேண்டாமா?" என்று மென்மையாக அதே நேரத்தில் கடுமையாக மன்மோகன் கூறியது தி.மு.கவை ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது. மேலும் சோனியா தன் பக்கம் இருந்து ஆதரிப்பார் என்று எதிர் பார்த்த கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது.

குறிப்பாக அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட இலாக்காகளை நேர்மையான,திறமையான நபருக்கு கொடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் நினைப்பது தவறில்லை.பாலுவும்,ராஜாவும் ஊழலின் இரு பக்கங்களாக சென்ற ஆட்சியில் இருந்ததாக எல்லா பத்திரிகைகளும்,குறிப்பாக வட நாட்டு ஊடகங்களும் பிரசாரம் செய்து வருகின்றன.

இப்போது உள்ள நிலையில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கவிதை எழுவதைத் தவிர கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியாது. கருணாநிதியின் "கருணையில்" சென்ற ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இன்று "கருணை" காட்டாமல் போனது காலத்தின் கோலம்.பொறுத்திருந்து பார்ப்போம் கருணாநிதி பொங்கி எழுகிறாரா அல்லது பதுங்கிப் போகிறாரா என்று?

செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரனின் மரபணு சோதனையும்,சில சந்தேகங்களும்


மரபணு சோதனை செய்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்ததாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் என்ன முறையில் இது செய்யப்பட்டது என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொடுக்கத் தவறி விட்டது.சரி எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

1. பிரபாகரனின் தாய் அல்லது தந்தையின் மரபணுக்களின் மாதிரிகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அது நிச்சியம் இலங்கை அரசிடம் இல்லை.

2. பிரபாகரனின் ஏற்கனவே எடுக்கப் பட்ட மரபணு மாதிரியை வைத்து சோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் மீண்டும் பிரபாகரனின் மரபணு மாதிரி திட்டவட்டமாக இலங்கை அரசிடம் இருக்க வாய்ப்பில்லை.

3. பிரபாகரனின் மகன் சார்லஸ் மரபணு மாதிரியைக் கொண்டு பிரபாகரனின் மரபணு சோதனை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதுவும் சார்லசின் மரணம் உண்மை மற்றும் அவர் உடல் இலங்கை அரசிடம் கிடைத்தது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.முதலில் சார்லசின் மரபணு மாதிரி சரியானது தான என்று நீருபிக்க வேண்டும்.

அதற்கு அவரின் தாய் மற்றும் தந்தையின் மரபணு மாதிரிகள் தேவை.கட்டாயமாக தாயின் மரபணு கிடைக்கவோ,அரசிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.அதனால் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் மரபணுவை உபயோகித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அந்த அளவிற்கு இவ்வளவு குறுகிய நேரத்தில் மரபணு சோதனை செய்யும் விஞ்ஞானக் கூடங்கள் இலங்கையில் இல்லை. இதை வைத்து தான் கருணாநிதியும் பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப் படவில்லை என்று கூறுகிறார் போல் உள்ளது.

இதுவரை இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை.அதனால் இலங்கை அரசு ஒன்று அறிவியல் பூர்வமான நீருபணத்தை வெளியிடல் வேண்டும் இல்லை என்றால் பிரபாகரனைப் பற்றி தங்களிடம் போதுமான தகவல் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெள்ளி, 15 மே, 2009

ஏ.கே..அந்தோணி அடுத்த பிரதம மந்திரியா?



காங்கிரஸ் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.மன்மோகன் சிங் என்றாலே இடது சாரிகளுக்கு கொஞ்ச நாளாக கசப்பாக இருக்கிறது.எல்லாம் 123 தான் காரணம்.ராகுல் காந்திக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்று நினைக்கிறார் சோனியா.அதனால் மற்றொரு நேர்மையான காங்கிரஸ் அரசியல் வாதியான ஏ.கே.அந்தோணியை பிரதமராக்க முயற்சி நடக்கிறது.இடது சாரிகளும், குறிப்பாக மேற்குவங்க இடது சாரிகள் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி பிரதிபா காங்கிரசைத் தான் முதலில் அரசு அமைக்க அழைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உடனே பெட்டிகள் கைமாறும். மேலும் ஒரு பொம்மைப் பிரதமரை வைத்து சோனியா ஆட்சி அமர்களமாக நடக்க வாய்பிருக்கிறது.ஏ.கே..அந்தோணி இராணுவ அமைச்சராக இருந்து தான் இலங்கைக்கு உதவினார் என்பதெல்லாம் தி.மு.க மற்றும் அண்ணா.தி.மு.க மறக்க ரொம்ப நேரம் ஆகாது.என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.இலங்கை தமிழர் பிரச்சனையை முற்றிலும் மறக்க இன்னும் ஓர் சந்தர்ப்பம்.

http://publication.samachar.com/pub_article.php?id=4239831&navname=General%20&moreurl=http://publication.samachar.com/newindianexpress/general/newindianexpress.php&homeurl=http://www.samachar.com&nextids=4247215|4239831|4239822|4243996|4247216&nextIndex=2

வெள்ளி, 1 மே, 2009

ஜெயலலிதாவின் நம்ப முடியாத ஈழ மோகம்

மாற்றி மாற்றி பேசுவது ஜெக்கும்,கருணாநிதிக்கும் கைவந்த கலை.ஜெக்கு தீடிரென ஏன் இந்த கரிசனம் ஈழத்தின் மீது? பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும்.இத்தனை நாள் இல்லாத சிந்தனை ரவி ஷங்கர் காண்பித்த வீடியோவினால் வந்ததா? நம்ப முடியவில்லையே.
ஈழம் பெற்றுத் தந்தால்,விடுதலைப் புலிகளின் இயக்கத்தை என்ன செய்வார்?ஈழத்தோடு புலிகளையும் ஆதரிக்கிறாரா?இந்திய இராணுவத்தை அனுப்பி, இலங்கையுடன் போர் நடத்தத் திட்டமா?

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல
என்ற திருக்குறளுக்கு ஏற்ப இந்திரா காந்தி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் பல உலகநாட்டுத் தலைவர்களை சந்தித்து,ரஷ்யாவுடன் ஓப்பந்தம் செய்து,மிகச் சாதுர்யத்துடன் பங்களாதேஷ் போரை நடத்தினார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் ராஜீவ் காந்தி இந்திய அமைதிப் படையை அனுப்பியதின் பலனை இன்றும் அனுபவிக்கிறோம்.தேர்தல், ஓட்டு,பதவி போன்றவைகளுக்கு ஆசைப் பட்டு நினைத்ததைப் பேசுவது,சிந்திக்காமல் உறுதி மொழி கொடுப்பது தலைவர்களின் பொழுது போக்காகிவிட்டது.
இதை எதிர்கொள்ள கருணாநிதி நாங்கள் 50௦ வருடமாக ஈழத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்.இந்தக் கூத்துக்களுக்கு நடுவே அங்கே இலங்கையில் மனிதர்கள் பட்டினியாலும்,பிணி யினாலும்,குண்டுகளுக்கும் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசு உடனடியாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பேசி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.தேர்தல் நேரம் என்று பார்க்கக் கூடாது.வெளி விவகாரத்தைக் கையாளும் முறையில் இந்த அரசு பெரிய அளவில் தோல்வியைக் கண்டுள்ளது.தமிழர்கள் என்று கூட பார்க்க வேண்டாம்.மனிதாபமான முறையில் உதவ வேண்டும்.இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தெரிந்தும், இந்த பதிவு இடுவது மன வேதனைக் குறைக்கும் சுயநலம் தான்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

கருணாநிதி அன்றும் இன்றும்


கல்லுக்குடி கொண்டாய் அன்று
காங்கிரஸ் "குடி" சென்றாய் இன்று

அண்ணா என்ற மூன்றெழுத்து அன்று
"ஆட்சி" என்ற மூன்றெழுத்து இன்று

தமிழ் உயிர் மூச்சு அன்று
மூச்சுக்குத் தமிழ் இன்று

கழகக் குடும்பத்தின் தலைவர் அன்று
கலகக் குடும்பத்தின் தலைவர் இன்று

சீறாமலே சிங்கம் என்றார் அன்று
சீறினாலும் சீண்டுவார் இல்லை இன்று

வீர வசனம் அன்று
மௌன மொழி இன்று

காலம் உன் கையில் அன்று
காலத்தின் கையில் நீ இன்று

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம்-3

உயிரோசை இதழில் வெளியானது
இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது.இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தில் பிராமணர்கள் பா.ஜ.கவுக்கும்,முஸ்லீம்கள் ஜனதா கட்சிக்கும் ஓட்டளித்தார்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறத் தவறியது. வி.பி.சிங், ஜனதா கூட்டணி இடதுசாரி மற்றும் பா.ஜ.க உதவியுடன் ஆட்சி அமைத்தார். ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்த போது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார் என்ற குற்றச் சாட்டு பிறந்தது. வட மாநிலங்களில் பெரிய அளவில் மண்டலை எதிர்த்து போராட்டம் நடந்தது. பா.ஜ.க தன்னுடைய இந்து ஓட்டுக்களைப் பிரிப்பதற்கு வி.பி.சிங் செய்த சதி என்று கருதியது. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். ரத யாத்திரை பீகார் வந்த போது அத்வானி கைது செய்யப்பட்டார். மதக் கலவரத்திற்கு வித்திட்டது. வட இந்தியாவில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. பா.ஜ.க, வி.பி சிங் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. ஆட்சி கவிழ்ந்தது. சந்திர சேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரானார். அந்த ஆட்சியும் அல்ப ஆயுளில் முடிந்தது. ஏதோ நொண்டிச் சாக்குச் சொல்லி காங்கிரஸ் சந்திரசேகர் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது
.தமிழ் நாட்டில் 1991ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணா. தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தேர்தலின் போது தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இருந்தாலும் காங்கிரஸ் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆனால் அதிக இடங்கள் வென்ற தனிக் கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் அதனை ஆட்சி அமைக்க வருமாறு அன்று ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் அழைத்தார். தேர்தலிலேயே நிற்காத நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகள் இந்தியப் பொருளாதாரத்தை மோசமாகக் கையாண்டதின் விளைவு, நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். நரசிம்ம ராவ் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை முழு வீச்சுடன் செயல்படுத்தினார். இன்று இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்டவர்கள் என்ற பெருமை மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவையே சேரும். மேலும் நரசிம்ம ராவ் ஆட்சியில்தான் பஞ்சாபில் நடந்து வந்த காலிஸ்தான் பிரிவினை வாதம் முழுவதும் அடக்கப்பட்டு,சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் பாபர் மசூதி இடிப்பு,ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், ஆட்சியைக் காப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்த சர்ச்சை என்று நரசிம்ம ராவ் ஆட்சி பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளானது.இருந்தாலும் நரசிம்ம ராவ் தொலை நோக்குப் பார்வையுடன் ஆட்சி செய்தார் என்பதை மறுக்க முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதாவின் மிகப் பெரிய ஊழல் ஆட்சி,தமிழ் நாட்டில் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு,காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் பெரிய தோல்வியைத் தந்தது. ஜெயலலிதா மற்றும் நரசிம்ம ராவ் இருவரும் பதவியை இழந்தனர். மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்ற காங்கிரஸ் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. முதல் முறையாக பா.ஜ.க வாஜ்பாய் தலைமையில் பதவி ஏற்று 13 நாட்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. அதற்குப் பின் மத்தியில் மூன்றாவது அணி கோம்முநிச்த்களின் ஆதரவுடன் தேவகவ்டா தலைமையில் ஆட்சி அமைத்தது. கோம்முநிச்ட்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட கவுடா அரசு நரசிம்ம ராவால் தொடங்கப் பட்ட புதிய பொருளாதரக் கொள்கையை, தொடர்ந்து கடைப்பிடித்தது குறிப்பிடத் தக்கது. தமிழ் நாட்டில் இருந்து முதல் முறையாக எட்டு மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றார்கள். அந்த ஆட்சி பெரிதாக ஒன்றும் செய்யாமலே கவிழ்ந்து, குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது. குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது
மீண்டும் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க போட்டியிட்டன. கணிசமான தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். ஆனால் அந்த அரசை நடத்த வாஜ்பாய் மிகவும் கஷ்டப்பட்டார். பிரமச்சாரியான வாஜ்பாய், ஜெயலலிதா,மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதியால் பட்ட துன்பம் சொல்லி முடியாது. ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்து 1999ஆம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது.
இந்த முறை தமிழ் நாட்டில் பா.ஜ.க, தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது. பா.ஜ.க மீண்டும் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பா.ஜ.க தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. பா.ஜ.க தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் இல்லாத ஓர் அரசு ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தது குறிப்பிடத் தக்கது. வாஜ்பாய் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடனான கார்கில் போர் மற்றும் கண்டகர் விமானக் கடத்தல் சம்பவங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரைச் சேர்க்காத விஷயங்கள். மிகப்பெரிய பணச் சேமிப்பு மற்றும் ஆங்கிலம் நன்கு படித்திருந்த இளைஞர்கள் அமெரிக்க மற்றும் பிற வெளி நாட்டு நிறுவனங்களைப் பலதரப்பட்ட வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பத் தூண்டின. அதில் அந்த நிறுவனங்கள் வெற்றியையும் சுவைத்தன. அதே நேரத்தில் இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்களுக்கு அதிக பணமும்,வசதி வாய்ப்பும் கிடைக்கச் செய்தன. ஆனால் கிராம மக்களுக்கும்,விவசாயிகளுக்கும் இதில் பெரிய அளவில் ஆதாயம் கிடைக்க வில்லை. இதை உணராத பா.ஜ.க "இந்தியா மிளிருகிறது" என்ற கோஷத்துடன் 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றது. தமிழ் நாட்டில் இந்த முறை தி.மு.க, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 40௦ தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
கம்யூனிஸ்ட்களும் இந்திய அளவில் 60௦ இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. லல்லு பிரசாத் கட்சி,தி.மு.க மற்றும் ஷரத் பவார் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்தன. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்ததற்கும் பிரதமராக கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. அவரால் பிரதமராக தன்னிச்சையாகச் செயல்பட முடியாது தான். எந்த விஷயத்திலும் சோனியாவின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.மு.க வின் எடுபிடிகள்.அமெரிக்காவுடனான 1-2-3 ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. பல சமயங்களில் மன்மோகன் சிங்கைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஆனாலும் இந்திய அரசியலில் மன்மோகன் சிங் ஒரு மிகச் சிறந்த பண்பாளர் என்பதை மறுக்க முடியாது.
இப்போது நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலருக்கு பிரதமர் பதவி மேல் ஆசை உள்ளது. ஆனால் ஒரு தொங்குப் பாராளுமன்றம்தான் வரும் போல் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாட்டில் ஒரு நல்ல தலைவர் கூடிய சீக்கிரத்தில் வருவார் என்று எதிர்பார்ப்போம்.
tlbhaskar@gmail.com

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் - 2


உயிரோசை இதழில் வெளியானது

முதல் முறையாக சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத ஓர் ஆட்சி மொரார்ஜி தலைமையில் 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி மத்தியில் பதவி ஏற்றது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள்.அவசர நிலை அத்து மீறல்களை ஆராய ’ஷா’ கமிஷன் அமைக்கப்பட்டது. அவசரத்தில் ஏற்பட்ட இந்தக் கூட்டணி நீண்ட நாளைக்குத் தாக்குப் பிடிக்கவில்லை.கட்சிக்குள் கௌண்டமணி-செந்தில் ரேஞ்சுக்கு சண்டை நடந்தது. மேலும் ஷா கமிஷன் விசாரணை,இந்திரா காந்தியை சிறையில் அடைத்தது எல்லாமாக அவர் மேல் மக்கள் மத்தியில் பரிதாபம் ஏற்பட வாய்ப்பானது. பத்திரிகையைத் திறந்தால் ஜனதா கட்சியின் உட்கட்சிச் சண்டை அல்லது இந்திரா காந்தி அவசரநிலைக் கொடுமைகள் பற்றிய விசாரணைதான் செய்தியாக இருந்தன. சரண் சிங்கின் பதவி ஆசையால் சொற்ப ஆயுளில் ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சரண் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். இந்த நேரத்தில் தமிழ் நாட்டை ஆண்டு வந்த எம்.ஜி.ஆரின் ஒரே குறிக்கோள் கருணாநிதியை எதிர்ப்பதுதான். அதற்காக மொரார்ஜி மற்றும் சரண் சிங் அரசை ஆதரித்தார். கருணாநிதியும் தன் மேல் உள்ள சர்க்காரிய கமிஷன் கண்டறிந்த ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்தார். மொரார்ஜி முடியாது என்று கூறிவிட்டார். இந்திரா மதுரைக்கு வந்த போது தி.மு.க வினர் கடுமையான வன்முறையில் ஈடுபட்டார்கள். 1979ஆம் ஆண்டு மத்தியில் கூட இந்திராவை எதிர்த்து மிகக் கடுமையான பேட்டியை கருணாநிதி கொடுத்தார்.

ஜனதாவின் உள்கட்சிச் சண்டையை இந்திரா காந்தி மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சரண் சிங் அரசை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கூறிவிட்டு,பாராளுமன்றம் சரண் சிங் தலைமையில் கூடுவதற்கு முன்பு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றார். சரண் சிங் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் விலகிச் சென்றதால் காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் தி.மு.க தேவைப்பட்டது. கருணாநிதிக்கும் ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பிக்க இந்திரா உதவுவார் என்று நினைத்தார்.


"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என்று தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் ஜனதா மற்றும் இடது சாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.எம்.ஜி.ஆர் தனக்கு அசைக்க முடியாத மக்கள் ஆதரவு இருப்பாக நினைத்தார். ஆனால் அவர் அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் அவருக்குக் கிடைத்த ஒரே தோல்வியாக அமைந்தது 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல். தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தமிழ் நாட்டில் அமோக வெற்றி பெற்றது. அகில இந்தியாவில் இந்திரா காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திரா மீண்டும் 1980ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். இந்திராவும் ஆட்சிக்கு வந்தார். கருணாநிதியும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்தார். இருவர் கனவும் நிறைவேறியது. கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் இருந்த வரையில் தேர்தலில் கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றி இந்தத் தேர்தலில்தான் கிடைத்தது.








1980ஆம் ஆண்டு இந்திரா பதவி ஏற்ற போது பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. முதல்முறையாக இந்தியா ஐ.எம்.ஃப் இடமிருந்து கடன் வாங்கியது. ஆர்.வெங்கட்ராமன் தான் மத்திய நிதி அமைச்சராக இருந்து இந்தக் கடனை வாங்க முற்பட்டார்.1982ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகள் இந்தியாவில் நடந்தன. தனி காலிஸ்தான் கேட்டு பிண்டரன்வாலே தலைமையில் நடந்த எழுச்சியை ஒடுக்க சீக்கிய பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது இந்திரா காந்தியின் முடிவுக்கு முக்கிய காரணமானது. தனக்கு காவலுக்கு இருந்த காவலாளிகளாலே இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.






இந்திரா காந்தி வெளிநாட்டில் இந்தியாவின் மதிப்பை அதிக அளவு உயர்த்தினார் என்றால் மிகையாகாது. ஆனால் உள்நாட்டில் அவர் எந்த விதமான எதிர்ப்பையும் தாங்கக் கூடியவராக இல்லாது இருந்தது ஒரு பெரிய குறை தான். கவர்னர்களையும்,முதல்வர்களையும் தன் விருப்பத்திற்கு மாற்றி வந்தார். ஜனாதிபதி பதவி ஒரு அலங்காரப் பொருளாக ஆக்கப்பட்டது. மிகத் துணிச்சலானவர். முடிவுகள் எடுப்பதில் தயக்கம் கட்டாதவர். ஒரு சிறந்த அரசியல் வாதியாக இருந்தார் என்பது மறுக்க முடியாதது. தலைவர்கள் முடிவு எடுப்பதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று முடிவுகளின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த முடிவைச் செயல்படுத்தி அதனை எதிர் கொள்வது. மற்றொரு வகை விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்துப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவை செயல் படுத்துவது. இந்திரா காந்தி முதல் வகையைச் சேர்ந்தவர். எத்தனை குறைகள் இருந்தாலும் இன்று இந்த அளவு இந்தியா முன்னேறி இருப்பதற்கு இந்திரா காந்தியின் பங்கு மறுக்க முடியாதது. இந்திரா காந்திக்குப் பிறகு அவரைப் போல ஒரு சக்தி வாய்ந்த,மக்களால் கவரப்பட்ட,துணிவான பிரதமர் இது வரை இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான்.





இதற்கு நடுவில் தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.கவும் காங்கிரசும் நெருக்கமாயின. எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரசும்,அண்ணா தி.மு.கவும் 1984ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

இந்திரா காந்தியின் மறைவு மற்றும் எம்.ஜி.ஆரின் மோசமான உடல்நிலை போன்றவற்றால் வீசிய அனுதாப அலையில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் அப்போது அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதி தேர்தலில் ஜெயித்தால் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் எம்.ஜி.ஆரிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகக் கூறி ஓட்டுக் கேட்டார். ஏழு ஆண்டு தண்டனை போதாதா என்றும்,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடினார். ஆனால் பலன் இல்லை. ராஜீவ் காந்தி பிரதமராகவும்,எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழக முதல்வராகவும் பதவி ஏற்றனர்.





ராஜீவ் காந்தியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மை அவரது ஆட்சிக்கு கூடிய விரைவில் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தியாவை நவீன மயமாக்க முற்பட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார் எனலாம். ஆனால் போபர்ஸ் ஊழல்,இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது,ஷா பானு விவகாரத்தில் கொண்டு வந்த சட்டத் திருத்தம்,ராம ஜன்ம பூமி கோவில் பிரச்சினையில் எடுத்த தப்பான முடிவு காங்கிரஸ் மற்றும் ராஜீவின் மீது கடுமையான எதிர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது..





தொடரும் .....

திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -1


உயிரோசை இதழில் வெளியானது
பொதுவாகத் தமிழ்நாட்டில் அந்த நாட்களில் நகரப் புறங்களில் இருந்த குடும்பங்களில் தவறாமல் மாநில மற்றும் அகில இந்திய செய்திகள் வானொலியில் கேட்பது,நடைமுறை அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி விவாதிப்பது,தினசரி பத்திரிகைகள் படிப்பது வாழ்க்கையின் அங்கமாக இருந்தது.எனவே சிறு வயது முதலே இயற்கையாகவே எனக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டானது. என் நினைவில் இருக்கும் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம் 1971. அப்போது நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளி ஈரோட்டில் உள்ள கருங்கல் பாளையத்தில் இருந்தது.ஒரு நாள் நடந்து செல்லும் போது,காமராஜ் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று மிகப் பெரிய கூட்டம் காத்திருந்தது. ஈ.வி.கே.சம்பத் தான் காங்கிரஸ் சார்பில் நின்ற வேட்பாளர்.சிவாஜியும் பிரச்சாரத்திற்கு வந்த போது முதன் முறையாக அவரைப் பார்த்தேன்.காமராஜுக்கும்,சிவாஜிக்கும் கூட்டம் வந்ததே தவிர தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து சந்தித்த முதல் தேர்தல். இந்திரா காந்தி ஒரு புறம். மற்ற காங்கிரசின் மூத்த தலைவர்களான காமராஜ்,நிஜலிங்கப்பா,மொரார்ஜி போன்றவர்கள் மற்றொரு புறம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திராவை முழுவதும் ஆதரித்தது.தமிழ் நாட்டில் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது. இந்திரா காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி அமைத்திருந்தது.தமிழ் நாடு சட்ட மன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் தி.மு.க சந்தித்தது. தி.மு.க எல்லா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட சம்மதித்து,இந்திரா காங்கிரஸ் 20௦ நாடாளு மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டதாக நினைவு.இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது.அகில இந்திய அளவில் இந்திராவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.தனிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் மத்தியிலும்,தி.மு.க மற்றும் கருணாநிதியின் மீது கடுமையான ஊழல் மற்றும் நிர்வாகச சீர் கேடுகள் கூறப்பட்ட போதும் 184 சட்டமன்றத் தொகுதிகள் வென்று தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சி அமைத்தன.பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு இறுதியில் நடந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதில்,இந்திராவின் மதிப்பு மக்கள் மத்தியில் பெருமளவு உயர்ந்தது.




இந்திராவின் ஆட்சியில் வெளிநாட்டுக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.பாகிஸ்தானுடனான போருக்கு முன்பு உலகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது மற்றும் ரஷ்யாவுடனான உடன்பாடு,போரில் வெற்றி அவருக்கு மிக நல்ல பெயரையும்,மக்கள் மத்தியில் ஆதரவையும் பெருக்கியது.பசுமைப் புரட்சித் திட்டத்தை அமல்படுத்தியதும் அவர் ஆட்சியின் சிறப்பு அம்சமாகும்.மிகவும் சர்ச்சைக்கு உள்ளான பொக்ரானில் 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடந்த அணுகுண்டு சோதனை இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் உயரச் செய்தது.

அதே நேரத்தில் 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி விலைவாசி ஏற்றத்திற்கு வித்திட்டது.பணவீக்கம் அதிகமானது.அரசின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன."ஏழ்மையை விரட்டுவோம்" என்ற முழக்கத்துடன் 1971ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும்,அது ஒரு கனவாகவே இருந்தது.இதற்கு நடுவில் குஜராத்தில் மொரர்ஜியும்,பீகாரில் ஜெயப்ரகாஷ் நாராயணனும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்களைத் திரட்டினார்கள். இந்தப் பலமுனைத் தாக்குதலை இந்திரா காந்தியின் அரசு தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டாடியது.பலவிதமான தொழிலாளர் போராட்டங்கள்,நிறுவன மூடல்கள் மற்றும் மிகப் பெரிய அளவிலான இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் என்று நாடே அல்லோகலப் பட்டது.வலுவான எதிர்கட்சி இல்லாத நிலையிலும்,விலைவாசி ஏற்றம்,பணவீக்கம் மற்றும் ஊழல் முதலியவைகளால் காங்கிரஸ் ஆட்சி மிகவும் தொல்லைக்கு உள்ளானது.

அதிகார பலம்,பதவி மோகம்,அவருக்கு எதிராக வந்த அலகாபாத் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,வேகமாக இழந்து வந்த மக்கள் ஆதரவு இந்திரா காந்தியை யாரும் நினைத்துப் பார்க்காத முடிவை எடுக்க வைத்தது.இந்திய ஜனநாயகத்தின் அனைத்துக் கதவுகளையும் மூடும் விதமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ‘அவசரநிலை பிரகடனத்தை’ அமல்படுத்தினர் இந்திரா.எல்லா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடுமையான பத்திரிகைத் தணிக்கை அமலானது.வானொலியில் சதா சர்வ காலமும் இந்திராவின் புகழ்தான். நல்ல வேளை அந்தக் காலத்தில் தொலைக்காட்சி இல்லை.20௦ அம்சத் திட்டம் என்ற ஒன்று தாரக மந்திரம் ஆன காலகட்டம் அது.ஆனால் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை.ஆண்டின் வளர்ச்சி 8% உயர்ந்தது.அரசு அலுவலங்களில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வந்தது மிகவும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது அந்தக் காலத்தில்.

அவசர நிலை பிரகடனத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்ப்ரயோகம் பெரிய அளவில் நடந்தது.சஞ்சய் காந்தி குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையை மக்கள் விருப்பத்திற்கு மாறாக பெரிய அளவில்,குறிப்பாக,வடஇந்தியாவில் செயல் படுத்தினார். மக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. கருணாநிதி இந்திராவையும்,அவசர நிலையையும் கடுமையாக எதிர்த்தார். ஜார்ஜ் பெர்னண்டோஸ் போன்ற இந்திரா எதிர்ப்பாளர்கள் தமிழ் நாட்டில் தங்கி இருந்தார்கள். மேலும் தமிழ் நாட்டில் அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியது.அப்போதுதான் படி (ஒன்றரைக் கிலோ) என்று விற்கப்பட்டு வந்த அரிசி கிலோ என்ற அளவுடன் மார்க்கெட்டில் வாங்கும் நிலை ஏற்பட்டது.1975ஆம் ஆண்டு கிலோ அரிசியின் விலை 8/= ரூபாய் அளவுக்கு விற்றது.எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார்.இந்திரா காந்தி கருணாநிதியின் அரசை 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கலைத்து,ஆயிரக்கணக்கான தி.மு.க வினரை ‘மிசா’ சட்டத்தில் சிறையில் அடைத்தார்.மத்தியத் தொகுப்பில் இருந்து இந்திரா காந்தி அரிசி கொடுத்து தமிழ்நாட்டில் நிலைமையை சீர் செய்ய முயன்றார். அப்போது இருந்த கருணாநிதியின் தைரியத்தையும்,போர்க்குணத்தையும் இன்று காங்கிரஸ் மற்றும் சோனியாவின் முன்பு பாதிரியார் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பக்தன் இருப்பதைப் போல் உள்ள கருணாநிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும்,வேதனையாகவும் உள்ளது.என்ன செய்வது காலத்தின் கட்டாயம்.



அவசர நிலையை ஜன சங்கம் (அன்றைய பா.ஜ.க.),இடது கம்யூனிஸ்ட்,தி.மு.க மற்றும் சோசலிஸ்டுகள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் துக்ளக்,பத்திரிகைத் தணிக்கையை மீறியும் அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டார்கள். ‘சர்வாதிகாரி’ என்று என்றோ வந்த படத்தின் விமர்சனம் வெளியிட்டு சோ தன் எதிர்ப்பைத் தெரிவித்தது இன்றும் மறக்க முடியாதது.

மொரார்ஜி தேசாய் தனிமைச் சிறையில் இருந்த போது பன்சிலால் என்ற காங்கிரஸ் அமைச்சர் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.அந்த அறை வசதி குறைவாக இருந்ததைப் பார்த்து மொரார்ஜியிடம் "இந்த அறையில் போதுமான வசதி செய்து கொடுக்கட்டுமா" என்று வினவியுள்ளார்.அதற்கு மொரார்ஜி எனக்குத் தேவையில்லை.ஆனால் நீங்கள் இன்னும் சிறிது நாளில் இங்கு வரப் போகிறீர்கள்.அறையை மேம்படுத்தினால் உங்களுக்கு வேண்டுமானால் அது உதவும் என்று கூறியதாகச் செய்திகள் வந்தன.

உலக நாடுகளின் அழுத்தத்தால் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி.அவசர நிலையை எதிர்த்த கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘ஜனதா கட்சி’ உருவானது.வட இந்தியாவில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியது.இந்திரா காந்தி ரேபரிளியில் தோற்றது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.அவசர நிலையின் அத்து மீறல்கள் பெருமளவு தென் மாநிலங்களில் இல்லாதது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. தமிழ் நாட்டில் அண்ணா தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.காமராஜ் இல்லாத பழைய காங்கிரஸ் தி.மு.க உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. வட சென்னையில் அன்று எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த நாஞ்சில் மனோகரனைத் தோற்கடித்ததுதான் ஒரே சாதனை.

தொடரும் ........

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

புஷ் விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா



மிகுந்த சர்ச்சைக்கும்,விமர்சனத்திற்கும் மற்றும் கேலிக்கும் உள்ளான ஜியார்ஜ் புஷ்ஷின் எட்டு ஆண்டு கால ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.ஒபாமா அதிபராக பதவி ஏற்றதை விட,புஷ் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது அமெரிக்கா மக்களுக்கும்,பல உலக நாடுகளுக்கும் மகிழ்ச்சியை தந்தது என்றால் மிகையாகாது. ஒரு விதமான பிடிவாதம்,முரட்டு சுபாவம் மற்றும் தொலைநோக்கு சிந்தனை இல்லாதது போன்ற குணங்களால் இவர் ஆட்சியில் எடுத்த பல முடிவுகள் அமெரிக்கா மக்களின் இன்றைய இக்கட்டான நிலைக்கும், பல உலக மக்களின் துன்பங்களுக்கும் காரணமானது.

தேர்தலில் நடந்த குழறுபடியால் 2001௦௦௦ம் ஆண்டு அமெரிக்கா அதிபராக புஷ் பதவி ஏற்றார்.செப்டம்பர் 11,2001ம் ஆண்டு நடந்த தீவிரவாதிகளின் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலால் இவருடைய ஆட்சியின் திசை திரும்பியது."தீவிரவாதிகளின் மீது போர்"(war on terror) என்ற அறைகூவலுடன் ஆப்கனிஸ்தானுக்கு அமெரிக்கா படையை அனுப்பினார்.பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலிபான் அரசுக்கு புஷ் வேண்டுகோள் விடுத்தார்.தலிபான் அரசு அதனை நிராகரித்தால் அமெரிக்காவும்,பிரிட்டனும் அப்கநிச்தனின் மேல் போர் தொடுத்தன.தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் என்பதால் ஜெனிவா கன்வேன்ஷுன் படி போரில் ராணுவத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு அளிக்க மறுக்கப்பட்டது.குண்டு மழை பொழிந்தது.தலிபான் அரசு நீக்கப்பட்டது.ஆனால் பின்லாடனையும் பிடிக்கவில்லை,அல்கொய்தா அழிந்த பாடில்லை.தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தாலும்,அவர்களை முற்றும் அழிக்க முடியாமல் போனது.இன்றும் ஆப்கனிஸ்தான் அமெரிக்காவுக்கு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

புஷ் ஆட்சியின் மிகப் பெரிய தவறுகள் இரண்டு. ஒன்று ஈராக்கின் மீது போர்.இரண்டாவது அபுகரிப் மற்றும் கோண்டனமொபே கொடுமைகள்.
2001 நவம்பர் மாதம் ஈராக்கின் மீது போர் தொடுக்க ஆயுத்தமாகுமாறு புஷ் ஆணையிட்டுள்ளார்.அதுவும் அன்று வெளியுறவு அமைச்சராக இருந்த காலின் போவெல்லுக்குத் தெரியாமலே.இதைப்பற்றி பாப் வொட்வர்ட் என்ற பத்திரிகையாளர் "Plan of Attack" என்ற புத்தகத்தில் விவரமாக கூறியுள்ளார்.அங்கு பிரச்சனையை தீர்க்காமல் ஈராக்கின் மீது போர் என்று அறிவித்தார்.ஈராக்கின் மீது போர் தொடுக்க உண்மையான காரணம் என்ன என்று இன்றும் தெரியவில்லை."மக்கள் தொகுதியை அழிக்கும் ஆயுதங்கள்"(weapons of mass diestruction) வைத்திருப்பதாக கூறி போர் தொடுக்கப்பட்டது.புஷ்ஷின் ஆட்சியில் துணை அதிபராக இருந்த சென்னியோ சதாமை எப்படியாவது அல்கொய்தா உடன் சம்பந்தப்படுத்த முடியுமா என்று பார்த்தார்.ஐநா சபை ஆதரவில்லாமல் தன்னிச்சையாக போர் தொடுக்கப்பட்டது.போரில் சதாம் ஆட்சி நீக்கப்பட்டதுடன் ஈராக்கில் ஏற்பட்ட குழப்பங்களை,பிரச்சனைகளை சந்திக்க எந்த ஆயுத்தமும் செய்ய தவறியது அமெரிக்கா அரசு.ஆப்கனிஸ்தாநிலோ,ஈராக்கிலோ மேற்கொண்ட போர் வழக்கமான நாடுகளுக்கு இடையேயான போர் இல்லை என்பதை புஷும்,அவர் ஆட்சியும் உணரவில்லை.

அதனால் பிரச்சனைகள் மேல் பிரச்சனை.அதனை தீர்க்க மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டியதாகியது.மக்களின் வரிப்பணம் எந்த உபோயோகமும் இல்லாமல் விரயமாகியது தான் மிச்சம்.4000௦௦௦க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.குறைந்தது ஒரு லட்சம் ஈராக் மக்களாவது கொல்லப்பட்டிருகிறார்கள்.புஷ்ஷின் மீது ஈராக் மக்களுக்கு இருந்த வெறுப்பு அவர் மீது செருப்பு எரியும் நிலைக்கு தள்ளியுள்ளது.மக்கள் தொகுதியை அழிக்கும் ஆயுதங்கள் ஈராக்கில் கிடைக்கவில்லை என்றவுடன் புஷ் "அதனால் என்ன.ஈராக் மக்களை விடுவிக்கவே போர் தொடுத்ததாக கூறினார்."மன்னிக்க முடியாத இரண்டாவது குற்றம் அபுகரை சிறையில் கைதிகளை கொடுமை படுத்தியது தான்.அதை அமெரிக்கா ஊடகங்கள் வெளிபடுத்திய போது,அதை மிகவும் அவமான கரமான விஷயம் என்றார் புஷ். ஆனால் புஷ் தான் அதற்கு உத்தரவிட்டார் என்பது உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி கவலை தெரிவிக்கும் அமெரிக்க அரசின் அதிபர் செய்த மிகப் பெரிய தவறு என்பதில் சந்தேகமில்லை.கோண்டனமொபே அநியாயம் பற்றி தனி கட்டுரை தான் எழுத வேண்டும்.

புஷ் தன்னுடைய ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகள் துணை அதிபர் செனி மற்றும் ராணுவ அமைச்சர் ரம்ஸ்பில்ட் ஆகியவரின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தது அவர் இன்று இந்த விமர்சனத்திற்கு உள்ளாக காரணமாகியது.சம்பத்தப் பட்டவர்களை ஒரு சேர வைத்து வெளிப்படையான விவாதங்கள் நடத்தாமல் புஷ் எடுத்த முடிவுகள் எல்லாமே தவறாக முடிந்ததில் ஆச்சிரியமில்லை.தன் ஆட்சியின் எட்டு ஆண்டு கால முடியும் நேரத்தில் ஊடகங்களுக்கு அளித்த "வெளியேறும் பேட்டியில்" ,அமெரிக்காவின் உளவுத் துறையின் தவறான தகவலால் தான் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டியதாகியது என்று பழியை திருப்பிவிடும் முயற்சி செய்துள்ளார்.ஆனால் தீர விசாரித்து முடிவு எடுக்கும் பொறுப்பு அதிபரின் முக்கிய கடமை என்பதை மறந்து விட்டார்.புஷ்ஷாவது பதவியை விட்டு வெளியேறும் நேரத்தில் தான் அதிபராக எடுத்த சில முடிவுகள் தவறானது என்று ஒப்புக்கொண்டார்.ஆனால் துணை அதிபர் செனி வருத்தம் தெரிவிக்காததுடன், லிங்கன் மற்றும் ரூஸ்வெல்ட் போன்றவர்கள் செய்ததைத் தான் புஷ் அரசு செய்ததாக கூறியது ஆணவத்தின் உச்சகட்டம் என்றால் மிகையாகாது.அதே போல் வடக்கு கொரியா,ஈரான்,சிரியா போன்ற நாடுகள் "தீவினையின் அச்சுகள்"(axis of evil) என்று நடத்திய கூத்து புஷ் அரசின் வெளியுறவுக் கொள்கையின் மற்றுமொரு தவறு.

இப்படி போர்,வெளி நாட்டுக் கொள்கையில் சொதப்பல் என்று ஆட்சியை நடத்தி வந்த புஷ்,உள்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய அளவு கவனம் செலுத்த முடியாமல் போனது.வரிக் குறைப்பு செய்தார்.அது பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவங்களுக்கும்,பணக்காரர்களுக்கும் சாதகமாக அமைந்தது.மத்திய வங்கி வட்டி விகிதத்தை மிகவும் குறைவாக வைத்து,தாரளமாக கட்டுபாடில்லாமல் கடன் கொடுப்பதை ஊக்குவித்தது.அதன் பலன் பல மக்கள் தங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்கினார்கள்.மேலும் வீட்டின் மீது கடன் வாங்கி,விடுமுறையைக் கொண்டாடினார்கள்.மக்களால் கடனைக் கட்டமுடியாமல் போனபோது,இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.வங்கிகள் நஷ்டமடைந்தது.பங்குச் சந்தை வீழ்ச்சி.மக்களின் வேலை இழப்பு.1929 ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பொருளாதார வீழ்ச்சியை நினைவூட்டும் இன்றைய நிலை.அமெரிக்கா அதிபர்கள் தங்கள் பதவியை விட்டு செல்லும் போது,அவர்களுடைய அதிபர் காலத்து நினைவுகளை புத்தகமாக எழுதியும்,பல இடங்களில் உரையாற்றியும் பணம் சம்பாதிப்பார்கள்.பில் க்ளின்டன் கடந்த ஏழு வருடத்தில் 90 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாக கூறுகிறார்கள்.ஆனால் புஷை எந்த பதிப்பாளரும் அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவர் பேசுவதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இரண்டு நடந்து கொண்டிருக்கும் போர்கள்,வரலாறு காணாத பொருளாதார விழ்ச்சி,வெட்கப்பட வைக்கும் மனித உரிமை மீறல்கள்,பல லட்சம் மக்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை போன்றவைகள் தான் புஷ் விட்டு சென்றிருக்கும் அமெரிக்கா..அமெரிக்கா அதிபராக முதல் முறையாக ஒபாமா என்ற கறுப்பர் தேர்தெடுக்க பட்டபோது,அவர் கூறியது"உலகிலேயே அமெரிக்காவில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்றார்".ஆனால் புஷ் போன்றவர்கள் இரண்டு முறை அமெரிக்கா அதிபராக தேர்ந்து எடுக்கப் படுவதும் அமெரிக்காவில் தான் நடக்கும்.

திங்கள், 26 ஜனவரி, 2009

இஸ்ரேல் பாலஸ்தீனிய தீராத பிரச்சனை


காஸா ஸ்ட்ரிப் என்பது 140 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட இஸ்ரேலுக்கும்,எகிப்துக்கும் இடையே உள்ள கடலோரப் பகுதியாகும். கிட்டத்தட்ட 15 லட்சம் பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.இந்த பகுதியில் பெரிய அளவு இயற்கை வளங்கள் இல்லை. அத்தியாவசப் பொருட்கள் வருவதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து மூலமாக தான் வரவேண்டும்.காஸாவிற்குள் நுழையும் எகிப்து எல்லை மூடப்பட்டுள்ளது..இஸ்ரேலோ 2005இல் காஸா வை விட்டு வெளியேறினாலும்,இஸ்ரேலில் இருந்து காஸாவிற்குள் நுழையும் எல்லையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதனால் காசாவில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை.இந்த சூழ்நிலையில் தான் ஹமாஸ் போன்ற ஆயுதம் ஏந்திய குழுக்கள் மக்களின் ஆதரவை பெற்றது.இஸ்ரேலை அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் மேல் ராக்கிட்டுகளை ஏவியது.அடிப்படை பிரச்சனையை தீர்க்காமல்,ஹமாஸை ஒழித்துக் கட்டுகிறேன் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் பயமும்,தன்நம்பிக்கை இழப்பும் தான் காரணம். மேலும் தன் நாட்டின் மீது இருந்த பயம் அண்டை நாடுகளுக்கு போய் விட்டது என்ற நினைப்பும் சேர்ந்து கொண்டது.2006ம் ஆண்டு ஹெசபெல்ல உடன் நடந்த சண்டையில் ஏற்பட்ட பின்னடைவு இஸ்ரேலை உறுத்திக் கொண்டே இருந்தது.
ஹமாஸின் முக்கிய கோரிக்கை காசாவின் எல்லை மூடலை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான்.இஸ்ரேல் இதை கடுமையாக எதிர்க்கிறது.குறிப்பாக எகிப்தின் எல்லையின் வழியாக ஆயுதம் கடத்தலை ஹமாஸ் செய்து,அதனை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது முக்கிய குற்றச்சாட்டு.எகிப்து காஸா எல்லையை உலக நாடுகள் கொண்ட குழு கண்காணிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது.இதனை எகிப்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

ஹமாஸை அமைதி படுத்திவிட்டோமே தவிர அதனை முழுவதும் அழிக்கவில்லை என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.இதிலிருந்து இந்த மாதிரி ஆயுதம் ஏந்திய குழுக்களை வழக்கமான போர் முறையில் முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும்..எகிப்தின் "RAFAH" வழியாக சுரங்கங்களைத் தோண்டி ஹமாஸ் ஆயுதங்களை தொடர்ந்து கடத்தி வந்தது இஸ்ரேலுக்கு பெரிய எரிச்சலையும்,தொல்லையையும் கொடுத்து வந்தது.அதனால் அந்த எல்லைப் பகுதியில் 60% சுரங்கங்களை அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

இஸ்ரேல் 27 நாட்களாக காஸா பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பெய்து,.20000 ஹமாஸ் இயக்கத்தினரில் 500 பேரை கொன்றிருக்கிறது.கிட்டதட்ட 700 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.5000 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்திருக்கிறார்கள்.இன்று தானாக முன்வந்து தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.இதை ஹமாஸ் ஆதரிக்கவில்லை.ஆனால் இஸ்ரேலுடைய படைகள் காஸாவை விட்டு வெளியேறுவதாக இல்லை.அதனால் இந்த பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது.தன்னுடைய அழிக்கும் சக்தியை மீண்டும் நிலை நாட்டியதாக இஸ்ரேல் கருதுகிறது.தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்ததால்,இஸ்ரேல் தற்காலிகமாக சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறது எனலாம்.இந்த கண்மூடித்தனமான காஸாவின் மீதான தாக்குதலினால் உலக நாடுகளின் குறிப்பாக அரபு நாடுகளின் கோபத்திற்கும்,எதிர்ப்புக்கும் உள்ளாகியது.அதனை தணிக்க இந்த முடிவு உதவும்.ஹமாஸை தான் அங்கீகரிக்கவில்லை என்ற நிலையை இஸ்ரேல் மீண்டும் நிலை நிறுத்திருக்கிறது.இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காஸாவில் இருக்கப் போவதால் ஹமாஸ் உடனான சண்டை தொடரும் வாய்ப்புள்ளது.மேலும் பாலஸ்தீனிய மக்கள் நிம்மதியாக் வாழ முடியும் என்று தோன்றவில்லை.மேலும் எகிப்து காஸா எல்லையையும் கண்காணித்து ஹமாஸை எதிர்த்து ஒடுக்க இஸ்ரேலுக்கு இந்த ஆக்ரமிப்பு ஏதுவாக இருக்கும்.

அரபுக் கூட்டமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை இப்போது அதையும் தாண்டி,ஈரான் நுழைந்ததில் இந்த நீண்ட நாளைய பிரச்சனைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை.ஈரானின் அதிபர் "ஹோலகாச்ட்" என்பதே ஒன்று நடக்க வில்லை என்று கூறியதோடு நில்லாமல்,இஸ்ரேலை அழித்து விடவேண்டும் என்று கூறியது எரிகிற விளக்கில் எண்ணையை ஊற்றிய கதை ஆகியது.ஈரான் ஹமாசுக்கும்,இசெபெல்லாவுக்கும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.அதனால் தான் ஈரானின் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் இடத்தை இஸ்ரேல் சென்ற ஆண்டு தாக்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்டது.நல்ல வேலை புஷ் மறுத்துவிட்டார்.ஆனால் அடுத்த கட்டமாக இஸ்ரேல் ஈரானைத் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது.இப்போது நடந்து வரும் ஈரானுடனான நிழல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நினைத்தால் இது நடக்கும். அமெரிக்கா வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும் ஹிலாரி க்ளின்டன் இந்த பிரச்சனையை அணுகும் முறை இஸ்ரேலின் இந்த முடிவை தீர்மானிக்கும்.

புஷ் ஆட்சியின் கடைசி நாளன்று இஸ்ரேல் அமெரிக்காவுடன் "வேவு பார்க்க தேவையான உபகரணங்களை அளிப்பது மற்றும் காஸாவின் நிலம்,கடல் எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேல்,எகிப்து முதலிய நாடுகளுக்கு தேவையான பயிற்சிகளை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டது" என்று ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.அதாவது ஒபாமா பதவி ஏற்பதற்கு முன்பு காஸா மீது தாக்குதலையும் நடத்தி ஆக்ரமித்துக் கொண்டு, ஒரு ஒப்பந்தத்தையும் அமெரிக்காவுடன் செய்து கொண்டதைப் பார்க்கும் போது பெரிய அளவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் திட்டமிட்டு இதை செய்தது போல் தெரிகிறது.

இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதிலிருந்து அதற்கு நிம்மதி கிடையாது.பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது,ரஷ்யாவும்,அமெரிக்காவும் தான் இஸ்ரேலை முதலில் அங்கீகரித்தன.அரபு நாடுகள் இதை யூதர்களின் ஒரு ஆக்ரமிப்பாகவே கருதின.பின்பு பல நாடுகள் இஸ்ரேலை ஒப்புக் கொண்ட போதும், அரபு நாடுகள் குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு இது யூதர்களின் ஆக்ரமிப்பு என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. அதனால் தான் ஹமாஸ்,ஹெசபெல்ல போன்ற அமைப்புகள் மற்றும் ஈரான்,சிரியா போன்ற நாடுகள் கடுமையாக இஸ்ரேலை எதிர்ப்பதோடல்லாமல் அதனை அழிக்கவும் நினைக்கிறது.அதே நேரத்தில் இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன் ராணுவத்தை மிகவும் வலிமையாக வைத்துக் கொண்டு,மத்திய கிழக்கு பகுதியையே மிரட்டி வருகிறது.அமெரிக்கா மற்றும் இரோப்பிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு இஸ்ரேலுக்கு முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது,அதே நேரத்தில் இஸ்ரேலை ஒழிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இதற்கு முடிவு தான் என்ன?மத்தியக் கிழக்குப் பிரச்சனையைப் பற்றி சொல்லாத யோசனைகள் கிடையாது,எழுதாத புத்தகங்கள் இல்லை.ராணுவ நடவடிக்கையோ,தீவிரவாதமோ இதற்கு தீர்வு ஆகாது.இஸ்ரேல் தான் பாலஸ்தீனிய பகுதியில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப் பட்ட பலர் தான் இன்று காஸா பகுதியில் உள்ளார்கள்.அவர்களுக்கு அந்த மனவருத்தம் இருப்பதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும்.வெஸ்ட் பேங்க்(West bank) மற்றும் காசாவிலும் சுதந்திரமான அரசு அமையவும், மக்கள் நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் மக்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பதை முற்றும் நிறுத்தி விடுவார்கள்.இல்லை என்றால் இப்படி சண்டை போட்டே வாழ்க்கையை நடத்துவதைத் தவிர இஸ்ரேல் மக்களுக்கு வேறு வழி இல்லை.

அதே போல் பாலஸ்தீனியர்களும்,அரபு நாடுகளும் பழமையும்,சரித்தரமும் பேசிக்கொண்டிருக்காமல்,இன்றுள்ள நிலையை பற்றி சிந்திக்க வேண்டும்.இஸ்ரேல் என்பது இன்று ஒரு நிஜம்.அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் சேர்ந்து அமைதியான,சுமுகமான் வாழ்க்கை வாழ நினைக்க வேண்டும்.இதெல்லாம் சொல்வது சுலபம் என்று தெரிகிறது.இது ஒரு நாளில் நடந்து விடாது.அதற்கான சூழ்நிலையை இஸ்ரேல்,அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகள் உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் இஸ்ரேல் தாக்குவதும்,அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவதும்,ஐ.நா.சபை தீர்மானங்கள் இயற்றுவதும்,உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதும்,மனித உரிமைக் குழுக்கள் போர்க்கொடி தூக்குவதுமாக காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.பாலஸ்தீனியர்களும்,இஸ்ரேலும் சேர்ந்த ஒரு நாடாக இருப்பது ஒரு தீர்வு என்றாலும்,அதில் நடைமுறை சிக்கல்கள் நிறையவே இருக்கும். அதனால் இரண்டு தனிப்பட்ட,சுதந்திரமான நாடுகள் தீர்வு தான் ஒரே வழி.இதை விட்டு ஒருவரை ஒருவர் அழிக்க நினைப்பது உலக நிம்மதியையும் சேர்த்து கெடுப்பதில் தான் போய் முடியும்.

வெள்ளி, 16 ஜனவரி, 2009

நினைவில் எம்.ஜி.ஆர்

1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.
தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.

கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.

அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.
பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்.
எம்.ஜி.யாரை கடவுள் போல் நினைத்த ஏழை மக்களுக்கு அவர்கள் எதிர் பார்த்ததில் பத்து சதவிகிதமாவது நன்மை செய்திருப்பாரா என்பதற்கு சமூகவியலாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

செவ்வாய், 9 டிசம்பர், 2008

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

மும்பை நகரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவது ஆண்டிற்கு ஒரு முறை வரும் நிகழ்வு போல் ஆகி விட்டது. இந்திய அரசின் மெத்தனப் போக்கு, பொறுப்பின்மை மற்றும் அலட்சியத்திற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு. தீவிரவாதம் தான் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நாட்டின் முக்கியப் பிரச்சனை என்று கூறி வந்த பிரதமர் நிர்வாகத் திறமையில்லாத சிவராஜ் படேலை உள்துறை அமைச்சராக தொடர்ந்து வைத்திருந்தது மன்னிக்க முடியாத குற்றம். கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கைகள் இருந்தும் அதனை உதாசீனப் படுத்தியதின் விளைவு ௨00கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்சேதம். நாட்டின் பாதுகாப்புப் படை (NSG) சம்பவ இடத்திற்கு வருவதற்கு 10 மணி நேரம் தாமதம், தொலை நோக்கி (telescopic) துப்பாக்கி இல்லாததால் பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினரே தாக்கும் அபாயம்,மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகளின் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இழந்து வெறுப்பு மேலிட்டது. அதனை கேரளா முதலமைச்சர் விவகாரத்தில் தெளிவாக காண முடிந்தது.மேடைக்கு மேடை இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்று முழங்கிய உள்துறை பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கடைசியில் பெரிய நாமம் போட்டது தான் மிச்சம்.

மும்பை போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவு இல்லாதது பெரிய அதிசியம் தான். தீவிரவாத தாக்குதல்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய பயிற்சி, சந்தேகப் படும் நபர்களைக் கண்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அணுகு முறை முதலியவைகள் விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாக முயல வேண்டும்.மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பிணைக் கைதிகளை வைத்து மூன்று நாட்களுக்கு ஆடிய வெறியாட்டம் உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை கையாளும் முறையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல நாடுகளின் தவறான வெளிநாட்டுக் கொள்கை, சந்தர்ப்பவாதம் காரணமாக மிகவும் சிக்கலாகி விட்ட இந்த தீவிரவாத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாக இந்த நூற்றாண்டில் ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. எனவே இந்தியா தன்னுடைய உள்நாட்டு பாதுகாப்பில் மிக அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.குறிப்பாக உளவுத் துறையை பலபடுத்துதல், பலவிதமான உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் பிரதானமானது. மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும் பரிதாப நிலை தான்.தீவிரவாதமே கொடுமை என்றால் அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களை என்ன செய்ய. அவர்களுடன் ஓர் ஆக்கப்பூர்வமான உரையாடலில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்கள் ஈடுபட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துவது தீவிரவாத எதிர்ப்பை வலுப்படுத்த உதவும்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் தொலைக் காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த தாக்குதலுக்கு "வெளிநாட்டு சக்திகள்" தான் காரணம் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது இன்று விசாரணையில் உண்மையாகிவிட்டது. பாகிஸ்தான் பல்முனை தாக்குதலுக்கு உள்ளான ஒரு பரிதாபமான நாடக உள்ளது. அதன் மேற்குப் பகுதியில் தலிபான்களால் தொல்லை. கிழக்கில் காஷ்மீர், பிரச்சனை. உள்நாட்டில் அடிக்கடி நடக்கும் வன்முறைகள். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இன்றுள்ள சிவில் அரசாங்கம் நேரடியான ஈடுபட்டதற்கு சாட்சி இருப்பதாக தெரியவில்லை. இந்த ஈனச் செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு அதனுடைய உளவுத் துறை தலைவரை இந்தியா அனுப்ப முதலில் சம்மதித்தது. ஆனால் இன்னும் உள்நாட்டு விவகாரத்தில் வலுவான ஆளுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் ராணுவ எதிர்ப்பால் பாகிஸ்தான் அரசு பின்வாங்கியது.பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவுத் துறைக்கு தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று. இராணுவம் ஆதரித்த தீவிரவாத இயக்கம் தான் மும்பை தாக்குதலை திட்டமிட்டு அதனை செயல் படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் வலுக்கிறது. இராணுவம் தனக்கு எந்த பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று உடனே அறிவித்து அதை செயல் படுத்தினால் இந்திய பாகிஸ்தான் உறவு வலுப் பெற உதவும். இந்தியா தன்னிடம் கிடைத்த தடயங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். எல்லா லக்ஷர் தோய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களையும் மூட வேண்டும். அந்த இயக்கம் வேறு எந்த பெயரிலும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக பாகிஸ்தான் மக்கள் இந்த தீவிரவாத இயக்கங்களையும் முழுவதும் நிராகரிப்பது அவசியம். பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இதுவரை இந்தியா அரசு மிகவும் பொறுப்பான முறையில் நடந்து கொண்டுள்ளது. பாகிஸ்தானின் சிவில் அரசு மிகவும் வலுவிழந்து உள்ளது. அதற்கு மேலும் நெருக்கடி கொடுப்பது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தானின் பொருளாதரத்தை மனதில் கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பதால் தன் நாட்டிற்கே பெரிய தீங்கிழைக்கிறோம் என்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத் துறையும் உணர வேண்டியது அவசியம். இறுதியாக இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்த தீவிரவாத கெடுதலை முறியடிக்க வேண்டும்.

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

புதன், 26 நவம்பர், 2008

இலங்கை தமிழர்களின் அவல நிலை

இலங்கையில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்துள்ள போரினால் பலவிதமான கேள்விகளும், யோசனைகளும் முன்வைக்கப் படுகின்றன.
தேசியம் மற்றும் தேச பக்தி என்பது தேவையானதா, எல்.டி.டி ஒரு தீவிரவாத இயக்கமா அல்லது விடுதலைக்குப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுவா போன்ற சர்ச்சைகள் நடை பெறுகின்றன. மேலும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த போருக்கு எதிரான தமிழர்களின் கொந்தளிப்பின் காரணம் "மூலப் படிம உணர்வா" (உயிரோசையில் தமிழவன் எழுதிய "தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு" நினைவிருக்கலாம்) என்ற விவாதம் நாகர்ஜுனன் அவர்களின் வலைத்தளத்தில் ஓர் உயர் தளத்தில் (higher dimension) நடக்கிறது. இதைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு உகந்த நேரம் இது தான். கட்டாயமாக ஓர் அறுபடாத நூலிழை போல் தமிழ் உணர்வு என்ற சக்தி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இழையோடுகிறது. ஆனால் இந்த சக்தியை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்ல தன்னலமற்ற, வியாபார நோக்கமில்லாத தலைமைத் தேவைப் படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று இல்லை. எதிர் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. காலம் பதில் சொல்லும்.

இந்தியாவின் ஆங்கில இதழ்கள் மற்றும் விடுதலிப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் என்.ராம், சோ, ஜெயலலிதா, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை அரசியல் பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. எனவே அதனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு நேர்மாறாக முழுமையாக சமூகப் பிரச்சனையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால் எல்லோரும் ஓத்துப் போகும் ஒரே அம்சம் இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் எல்லா உரிமைகளுடனும் நலமாக வாழ வேண்டும் என்பது தான். இதற்கு இரண்டே தீர்வு தான் உள்ளது. ஒன்று தமிழ் ஈழம். இன்றைக்கு இது சாத்தியமா?

பல இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களுக்காகவும், தனி ஈழம் கேட்டும் போராடிய நிலையில், விடுதலிப் புலிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். நீண்டகால போர், தவறான அணுகுமுறை, எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கைகள், தீவிரவாத குழு என்ற முத்திரை, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சுமை, கிழக்குப் பகுதியில் புலிகளின் மத்தியில் ஏற்பட்டப் பிளவு போன்ற காரணங்களினால் இன்று வலுவிழந்து நிற்கின்றனர் விடுதலைப் புலிகள். அதே நேரத்தில் இராணுவம் பெரிய அளவில் வெற்றி அடைந்து வரும் இன்றைய நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்து தமிழ் ஈழம் வழங்குவது ஒரு கனவாகத் தான் இருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தேவைப்படும் ராஜ தந்திரம் இல்லாமல் ஆயுத போராட்டத்தை மட்டும் வைத்து தனி நாடு அடைந்து விடலாம் என்ற புலிகளின் எண்ணம் மிகவும் தவறானது. 2000ம் ஆண்டு நடந்த போரில் புலிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றும், இலங்கை ராணுவமும், அரசும் பின்னடைவில் இருந்த நேரத்தில் நார்வே மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் குறைந்த பட்சம் இலங்கையில் ஒன்றிணைந்த (fedaral) தனி தமிழ் மாநிலம் பெற்றிருக்க வாய்ப்பிருந்தது. அதையும் தவற விட்டார்கள். உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் துணை இல்லாமல் தனி நாடு அடைவது என்பது கனவாகவே முடிந்து விடும் என்று புலிகளின் தலைமை உணர வேண்டும். அதற்கான தீவிர அரசியல் முயற்சியில் ஈடுபடுவது தான் புலிகளுக்கு இன்றுள்ள ஒரே வழி. முதற் கட்டமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடையாளத்தை உடைத்து, இந்திய அரசு அங்கீகரிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். புலிகளின் இன்றைய செயல் பாடுகளில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது.இதற்கு தமிழ் நாட்டில் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவலாம். ஆனால் அதற்கு முன்பாக புலிகள் தங்கள் இயக்கத்தின் மேல் மற்றவர்களுக்கு உள்ள நம்பகத் தன்மையை மேம்படுத்த வேண்டும்.

தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டை எழுதுவதற்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது. பண்டாரநாயக இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு சிங்கள இன வெறி என்ற விஷ விதையை விதைத்ததின் பலன், இன்று ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் மற்றும் சிங்கள ராணுவத்தினரின் உயிர்கள் அறுவடையாகின்றன. அதற்கு பிறகு இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் மறைமுகத் திட்டத்தை M.S.S. பாண்டியன் என்ற சமூகவியல் அறிஞர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியதில் (http://timesofindia.indiatimes.com/SUBVERSE_Change_course_in_Lanka/rssarticleshow/3630071.cms) இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றுள்ள இலங்கை அதிபர் ராஜ்பக்ஷே அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் முரட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.தமிழர் பிரச்சனை போரினால் தீர்க்கப் பட முடியாத ஒன்று என்று இன்னும் அவருக்கு உறைக்கவில்லை. இவருடைய குறிக்கோள் போரில் வெற்றி பெற்று(?) அரசியல் தீர்வு என்ற பெயரில் கிழக்குப் பகுதியில் வெள்ளையன் தலைமையில் ஏற்படுத்தியது போல இலங்கையின் வடக்கில் பெயரளவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை உண்டாக்குவதுதான்.புலிகளை வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் ஆதரவற்ற தமிழர்கள் மேல் அடக்குமுறையை ஏவி விட ராஜபக்சே நினைத்தால், அது வரலாற்றில இலங்கை அரசு இழைத்த மிகப் பெரிய தவறாகிவிடும். தமிழர்கள் எதிர் பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் அமையாவிட்டால், இனப் பிரச்சனை மீண்டும் தலை தூக்க நீண்ட நாள் ஆகாது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக 30% பணவீக்கத்துடன் திணறிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் இந்த போர் தொடர்ந்தால் ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் என்று கோரும் ராஜ்பக்ஷே, அதே சமயத்தில் ஒரு பரந்த, தமிழர்கள் ஏற்கத்தக்க, தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளிக்கக் கூடிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

இந்த போரினால் மீறப் பட்டுள்ள மனித உரிமைகள் மனித சமுதாயத்தையே தலை குனிய வைக்கும் அளவிற்கு உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மனித உரிமை சங்கம் (UTHR-J) அக்டோபர் 28ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் போர் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலை உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. இதை பார்த்து கண்ணீர் வடிக்க தமிழ் உணர்வு தேவையில்லை. மனிதாபிமானமே போதுமானது. இந்த நேரத்தில் இந்திய அரசின் கடமை மிகவும் முக்கியமானது. இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?

என்னதான் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கருதினாலும், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடவேண்டும். விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி அவதியுறும் இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் தனக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி உலக நாடுகளின் மூலமாக இந்த இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க இது தான் சரியான தருணம்.மேலும் இந்திய அரசாங்கம் எப்போதுமே இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தான் வெளிநாட்டுக் கொள்கையில் கடைபிடிக்கிறது. ஆனால் புலிகளுடன் நேரடி தொடர்பு வேண்டாம் என்ற பட்சத்தில், பல தரப்பு பேச்சு வார்த்தை (multilateral talks) நடத்த முன் வரலாம். சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் கொண்ட ஒரு குழு அமைத்து சிங்கள மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயலலாம். அதில் "தமிழ் ஈழமா அல்லது ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றிணைந்த தமிழ் மாநிலமா?" என்ற தீர்வுக்கு வரலாம். அதை விட்டு இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை போருக்கு தீர்வாகாது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, போரினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை இலங்கை அரசும், புலிகளும் உடனடியாக கை விட வேண்டும். மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். மூன்று லட்சம் தமிழ் மக்கள் குறைந்த பட்ச தேவையான உணவு, உடை,இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. உலக நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இன்று இருந்தால் இந்த அல்லல் படும் தமிழ் மக்களைப் பார்த்து என்ன பாடியிருப்பாரோ?

உயிரோசை இதழில் வெளியானது.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=577

அமெரிக்க தேர்தல் களம்

உயிரோசை இதழில் வெளியானது

தண்ணி டாங்கர் லாரி ஏறி நசிங்கிய தகர டப்பா போல அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் இருக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறும் தேர்தல் திருவிழா மற்றொரு புறம். அமெரிக்க ஊடகங்கள் பசிக்கி நல்ல தீனி. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஓபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளராக மெக்கைனும் போட்டியிடுவது தெரிந்ததே. தனி நபர் தாக்குதல்களும், எதிர்மறை விளம்பரங்களும் முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம், ஓர் இனச்சேர்க்கை, கருக்கலைப்பு,வெளிநாட்டு கொள்கை,ஈராக்குடனான யுத்தம், சுற்றுபுறச் சூழல் மற்றும் உடல் நல பாதுகாப்பு (ஹெல்த் கேர்) தேர்தலின் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கயுள்ளது. புஷ்ஷின் எட்டு ஆண்டு கால கைங்கர்யம் ஈராக் மீது போர் மற்றும் வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உபரியாக இருந்த அமெரிக்க பட்ஜெட்டில் பெரிய துண்டு (டெபிசிட்) விழுமாறு செய்தது தான். ஒரு பக்கம் புஷ்ஷால் ஏற்பட்ட சுமை, மறுபக்கம் வங்கிகள் கண்மூடித்தனமாக வீட்டுக் கடன்கள் வழங்கி திரும்பப் பெற முடியாமல் போனதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற இரண்டு பிரச்சனைகளையும் ஒரு சேர சமாளிக்கும்படியான பொருளாதார திட்டத்தை அறிவிக்க வேண்டிய பரிதாப நிலையில் வேட்பாளர்கள். பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள பொருளாதாரச் சிக்கலில் இருந்து அமெரிக்காவை மீட்பது குறித்து இரண்டு வேட்பாளர்களும் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரத் திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்கள்.

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவை குறைப்பது முதலானவைகள் பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மெகைன், அரசாங்கத்தின் செலவினைக் குறைக்க முடியுமா என்பது சந்தேகம் தான். மேலும் மெகைனின் வரி கொள்கை 60% மக்களுக்கு அனுகூலமாகவும், 1% மக்களுக்கு அதிக வரி கட்டும் படியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிகப் படியான சலுகை அளிப்பதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வீட்டுக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் பல மக்கள் அவதியால் வீட்டை மீண்டும் கடன் வாங்கிய வங்கியிடமே விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிர்ணயிக்கப் பட்ட வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் படியான கடன் வழங்கப்படும் என்றும், இது 2 லட்சம் முதல் 3 லட்சம் மக்களுக்கு பயன்படும் என்று மெகைன் கூறுகிறார்.

ஓபாமாவின் வரிக் கொள்கை முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. 20 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வரித் தள்ளுபடி செய்து காசோலையாக மக்களுக்குக் கொடுப்பது, வீட்டுக் கடன் செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு 10 பில்லியன் டாலர் நீதி ஒதுக்கீடு செய்வது, புஷ் செயல்படுத்திய வரிச் சலுகையை பணக்காரர்களுக்கு (250000 டாலாருக்கு மேல் வருமானம் உள்ளவர்கள்) ரத்து செய்வது, எரிபொருள் நிறுவனங்கள் மேல் "விண்ட்பால்" வரி விதித்து, கிட்டதட்ட ஆயிரம் டாலர் வரை குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு"அவசர எரிபொருள் தள்ளுபடி" என்ற பெயரில் வழங்குவது போன்றவைகள் முக்கியமானவைகளாகும்.ஓபாமாவின் வரிக் குறைப்புத் திட்டத்தால் 80% மக்களுக்கு நன்மையும், 17% அதிக வருமானமுள்ள மக்கள் கூடுதல் வரி செலுத்தும் படியும் நேரிடும் என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து.

வெளிநாட்டுக்கு வேலையை அனுப்பாத அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற ஓபாமாவின் கூற்றுக்கு, உலக அளவில் போட்டியிடும் வாய்ப்பை அமெரிக்க கார்பரேட் நிறுவனங்கள் இழந்து விடும் என்று மெகைன் மறுதலிக்கிறார். ஈராக்கில் இருந்து பதினாறு மாதங்களில் ராணுவத்தை திரும்ப அழைப்பது என்ற ஓபாமாவின் நிலையால் அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பது கடினம். செல்வத்தைப் பரவலாக்குவது என்ற ஓபாமாவின் கூற்றை நாட்டை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்ல முயல்கிறார் என்று மெகைன் கடுமையாக சாடுகிறார். சோசலிசம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் சோர்ந்து போயுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்று சேர்க்க மெகைனின் இந்த பிரச்சாரம் உதவலாம். நடுத்தர மக்களைப் பற்றி மெகைன் கவலை படவில்லை என்பது ஓபாமாவின் கட்சி. உடல் நல காப்பீடு மக்களின் உரிமை என்று ஓபாமாவும், இல்லை அது மக்களின் பொறுப்பு என்று மெகைனும் வாதிடுகிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கொள்கைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன. வெளிநாட்டு விவகாரத்தில், "பொறுக்கி" நாடுகள் என்று புஷ் விளித்த வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது ஓபாமாவின் நிலைப்பாடு. மெகைன் கிட்டத்தட்ட புஷ்ஷின் வெளிநாட்டு கொள்கையையே தொடர்ந்து கடை பிடிப்பவராக தெரிகிறது.

ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "நீல மாநிலங்கள்" என்றும், குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "சிவப்பு மாநிலங்கள்" என்றும் பிரித்திருக்கிறார்கள். கடைசி கட்ட பிரச்சாரமாக இரண்டு வேட்பாளர்களும் சிவப்பு மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். ஜோ பைடேன் என்ற அனுபவமிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓபாமாவும், அனுபவக்குறைவான, கிறிஸ்துவ மதத்தில் அதிதீவிர ஈடுபாடு கொண்ட சாரா பாலின் என்பவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக மெகைனும் தேர்தெடுத்து உள்ளார்கள். .அமெரிக்காவின் இந்த கஷ்ட நிலைக்கு புஷ்ஷின் கொள்கைகளைகளே காரணம் என்றும், அதை மெகைன் முழுவதும் ஆதரித்தவர் என்றும், அவர் ஜனாதிபதி ஆனால் அதே கொள்கைகளை தொடர்ந்து கடை பிடிப்பார் என்றும், அது நாட்டுக்கு மிகவும் கெடுதல் என்றும் மீண்டும் மீண்டும் ஓபாமா கூறியதால் எரிச்சல் அடைந்த மெகைன், மூன்றாவது நேரடி விவாதத்தில் "நான் புஷ் இல்லை" என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே மூன்று நேரடி விவாதங்கள் (debate) நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் ஒபாமா வெற்றி பெற்றதாக நடுநிலை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மெகைன் எரிச்சலுடனும், உணர்ச்சிவசப்பட்டும் இருந்த நிலையில், ஓபாமா பொறுமையுடனும், நிதானமாகவும் விவாதத்தை அணுகியது பாராட்டக் கூடியதாக இருந்தது. ஒரு விமர்சகர் கூறியது போல் "90 நிமிட விவாதத்திற்குப் பிறகும் கூட ஓபாமா தலையில் ஐஸ் கட்டியை வைத்தாலும் உருகாத அளவிற்கு சாந்தமான மனநிலையில் இருந்தார்" என்பதே உண்மை. ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ஒபாமாவுக்கே அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. புஷ் நிர்வாகத்தில் அங்கம் வகித்த காலின் பொவெல் கூட ஓபாமாவை ஆதரித்துள்ளது குறிப்பிடத் தக்கது. என்னதான் ஓபாமா முன்னணியில் இருந்தாலும், 60% தீவிர கிறிஸ்துவர்கள் உள்ள இந்த நாட்டில், ஏறத்தாழ அனைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை வாக்குச் சாவடிக்கு வரவைக்க மேகினால் முடிந்தால், ஓபாமா வெற்றி பெறுவது கேள்விக்குறி ஆக வாய்ப்புள்ளது. . ஓபாமா வெற்றி பெற்று சரித்திரம் படைப்பாரா? ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அது முள்ளின் மேல் படுத்த சுகத்தைத் தான் கொடுக்கப் போகிறது இந்த பதவி என்பது நிதர்சனமான உண்மை.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=408