புதன், 26 நவம்பர், 2008

அமெரிக்க தேர்தல் களம்

உயிரோசை இதழில் வெளியானது

தண்ணி டாங்கர் லாரி ஏறி நசிங்கிய தகர டப்பா போல அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் இருக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறும் தேர்தல் திருவிழா மற்றொரு புறம். அமெரிக்க ஊடகங்கள் பசிக்கி நல்ல தீனி. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஓபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளராக மெக்கைனும் போட்டியிடுவது தெரிந்ததே. தனி நபர் தாக்குதல்களும், எதிர்மறை விளம்பரங்களும் முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம், ஓர் இனச்சேர்க்கை, கருக்கலைப்பு,வெளிநாட்டு கொள்கை,ஈராக்குடனான யுத்தம், சுற்றுபுறச் சூழல் மற்றும் உடல் நல பாதுகாப்பு (ஹெல்த் கேர்) தேர்தலின் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கயுள்ளது. புஷ்ஷின் எட்டு ஆண்டு கால கைங்கர்யம் ஈராக் மீது போர் மற்றும் வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உபரியாக இருந்த அமெரிக்க பட்ஜெட்டில் பெரிய துண்டு (டெபிசிட்) விழுமாறு செய்தது தான். ஒரு பக்கம் புஷ்ஷால் ஏற்பட்ட சுமை, மறுபக்கம் வங்கிகள் கண்மூடித்தனமாக வீட்டுக் கடன்கள் வழங்கி திரும்பப் பெற முடியாமல் போனதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற இரண்டு பிரச்சனைகளையும் ஒரு சேர சமாளிக்கும்படியான பொருளாதார திட்டத்தை அறிவிக்க வேண்டிய பரிதாப நிலையில் வேட்பாளர்கள். பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள பொருளாதாரச் சிக்கலில் இருந்து அமெரிக்காவை மீட்பது குறித்து இரண்டு வேட்பாளர்களும் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரத் திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்கள்.

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவை குறைப்பது முதலானவைகள் பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மெகைன், அரசாங்கத்தின் செலவினைக் குறைக்க முடியுமா என்பது சந்தேகம் தான். மேலும் மெகைனின் வரி கொள்கை 60% மக்களுக்கு அனுகூலமாகவும், 1% மக்களுக்கு அதிக வரி கட்டும் படியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிகப் படியான சலுகை அளிப்பதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வீட்டுக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் பல மக்கள் அவதியால் வீட்டை மீண்டும் கடன் வாங்கிய வங்கியிடமே விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிர்ணயிக்கப் பட்ட வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் படியான கடன் வழங்கப்படும் என்றும், இது 2 லட்சம் முதல் 3 லட்சம் மக்களுக்கு பயன்படும் என்று மெகைன் கூறுகிறார்.

ஓபாமாவின் வரிக் கொள்கை முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. 20 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வரித் தள்ளுபடி செய்து காசோலையாக மக்களுக்குக் கொடுப்பது, வீட்டுக் கடன் செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு 10 பில்லியன் டாலர் நீதி ஒதுக்கீடு செய்வது, புஷ் செயல்படுத்திய வரிச் சலுகையை பணக்காரர்களுக்கு (250000 டாலாருக்கு மேல் வருமானம் உள்ளவர்கள்) ரத்து செய்வது, எரிபொருள் நிறுவனங்கள் மேல் "விண்ட்பால்" வரி விதித்து, கிட்டதட்ட ஆயிரம் டாலர் வரை குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு"அவசர எரிபொருள் தள்ளுபடி" என்ற பெயரில் வழங்குவது போன்றவைகள் முக்கியமானவைகளாகும்.ஓபாமாவின் வரிக் குறைப்புத் திட்டத்தால் 80% மக்களுக்கு நன்மையும், 17% அதிக வருமானமுள்ள மக்கள் கூடுதல் வரி செலுத்தும் படியும் நேரிடும் என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து.

வெளிநாட்டுக்கு வேலையை அனுப்பாத அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற ஓபாமாவின் கூற்றுக்கு, உலக அளவில் போட்டியிடும் வாய்ப்பை அமெரிக்க கார்பரேட் நிறுவனங்கள் இழந்து விடும் என்று மெகைன் மறுதலிக்கிறார். ஈராக்கில் இருந்து பதினாறு மாதங்களில் ராணுவத்தை திரும்ப அழைப்பது என்ற ஓபாமாவின் நிலையால் அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பது கடினம். செல்வத்தைப் பரவலாக்குவது என்ற ஓபாமாவின் கூற்றை நாட்டை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்ல முயல்கிறார் என்று மெகைன் கடுமையாக சாடுகிறார். சோசலிசம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் சோர்ந்து போயுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்று சேர்க்க மெகைனின் இந்த பிரச்சாரம் உதவலாம். நடுத்தர மக்களைப் பற்றி மெகைன் கவலை படவில்லை என்பது ஓபாமாவின் கட்சி. உடல் நல காப்பீடு மக்களின் உரிமை என்று ஓபாமாவும், இல்லை அது மக்களின் பொறுப்பு என்று மெகைனும் வாதிடுகிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கொள்கைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன. வெளிநாட்டு விவகாரத்தில், "பொறுக்கி" நாடுகள் என்று புஷ் விளித்த வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது ஓபாமாவின் நிலைப்பாடு. மெகைன் கிட்டத்தட்ட புஷ்ஷின் வெளிநாட்டு கொள்கையையே தொடர்ந்து கடை பிடிப்பவராக தெரிகிறது.

ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "நீல மாநிலங்கள்" என்றும், குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "சிவப்பு மாநிலங்கள்" என்றும் பிரித்திருக்கிறார்கள். கடைசி கட்ட பிரச்சாரமாக இரண்டு வேட்பாளர்களும் சிவப்பு மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். ஜோ பைடேன் என்ற அனுபவமிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓபாமாவும், அனுபவக்குறைவான, கிறிஸ்துவ மதத்தில் அதிதீவிர ஈடுபாடு கொண்ட சாரா பாலின் என்பவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக மெகைனும் தேர்தெடுத்து உள்ளார்கள். .அமெரிக்காவின் இந்த கஷ்ட நிலைக்கு புஷ்ஷின் கொள்கைகளைகளே காரணம் என்றும், அதை மெகைன் முழுவதும் ஆதரித்தவர் என்றும், அவர் ஜனாதிபதி ஆனால் அதே கொள்கைகளை தொடர்ந்து கடை பிடிப்பார் என்றும், அது நாட்டுக்கு மிகவும் கெடுதல் என்றும் மீண்டும் மீண்டும் ஓபாமா கூறியதால் எரிச்சல் அடைந்த மெகைன், மூன்றாவது நேரடி விவாதத்தில் "நான் புஷ் இல்லை" என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே மூன்று நேரடி விவாதங்கள் (debate) நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் ஒபாமா வெற்றி பெற்றதாக நடுநிலை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மெகைன் எரிச்சலுடனும், உணர்ச்சிவசப்பட்டும் இருந்த நிலையில், ஓபாமா பொறுமையுடனும், நிதானமாகவும் விவாதத்தை அணுகியது பாராட்டக் கூடியதாக இருந்தது. ஒரு விமர்சகர் கூறியது போல் "90 நிமிட விவாதத்திற்குப் பிறகும் கூட ஓபாமா தலையில் ஐஸ் கட்டியை வைத்தாலும் உருகாத அளவிற்கு சாந்தமான மனநிலையில் இருந்தார்" என்பதே உண்மை. ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ஒபாமாவுக்கே அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. புஷ் நிர்வாகத்தில் அங்கம் வகித்த காலின் பொவெல் கூட ஓபாமாவை ஆதரித்துள்ளது குறிப்பிடத் தக்கது. என்னதான் ஓபாமா முன்னணியில் இருந்தாலும், 60% தீவிர கிறிஸ்துவர்கள் உள்ள இந்த நாட்டில், ஏறத்தாழ அனைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை வாக்குச் சாவடிக்கு வரவைக்க மேகினால் முடிந்தால், ஓபாமா வெற்றி பெறுவது கேள்விக்குறி ஆக வாய்ப்புள்ளது. . ஓபாமா வெற்றி பெற்று சரித்திரம் படைப்பாரா? ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அது முள்ளின் மேல் படுத்த சுகத்தைத் தான் கொடுக்கப் போகிறது இந்த பதவி என்பது நிதர்சனமான உண்மை.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=408

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக