செவ்வாய், 25 நவம்பர், 2008


மனக்கிறுக்கல்கள்


சுஜாதாவைப் பற்றி அவர் எழுதிய இன்றும் ரசிக்கத்தக்க விஷயங்களை த.ம.இ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நண்பர் திரு. ராஜராமனிடம் கூறி விட்டேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது, எதை எழுதுவது, எதை விடுவது என்ற சிந்தனைக்குப் பிறகு கிடைத்தவை இவைகள். சுஜாதா தவிர வேறு சில விஷயங்களும் இதில் இடம் பெறலாம். எனக்குப் பிடித்தவைகள் என் கருத்துகளுடன் இங்கு இடம் பெறுகின்றன. உங்கள் மாறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் பயனுளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


முதலில் வணக்கத்துடன் ஆரம்பிப்போம். "கவிதை ரசனை என்பதே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான்" என்று எங்கேயோ படித்ததாக நினைவு என்கிறார் சுஜாதா.

"வணக்கம்" என்ற புவியரசு 1989ல் எழுதிய கவிதையை உதாரணமாகக் கொடுத்திருக்கிறார்.

"கோவை முகப்பில் உங்களை வரவேற்றும்
வாலான்குளக் கோட்டை மேட்டுப்
பாலத்து முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டு வரக் காத்திருக்கும்
நகர்சுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷோப் முதலாளிக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவர்களின் புதிய கான்டேசா கார்களுக்கும் வணக்கம்."

இதை படிக்கும் போது பட்டுகோட்டையார் எழுதிய

"காடு விளைஜென்ன மச்சான்
கையும் காலும் தானே மிச்சம்"

என்கிற கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்த கவிதைகளில் இடதுசாரி கருத்துக்களை "சிவப்பு" சாயம் இல்லாமல் அழகாகக் கூறி உள்ளார்கள். இந்தியா இத்தனை முன்னேறிய பிறகும் இந்த கவிதைகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறது.

"பெரும்பாலான மனிதர்கள் முப்பது வயது வரை இடதுசாரி சிந்தனையுடன் தான் வாழ்கிறார்கள்" என்று படித்ததாக நினைவு. இது உண்மைதானா?

சீனக் கவிதை

அடுத்தது சீனக் கவிதைகளைப் பற்றி பார்ப்போம்.

சைனீஸ் கவிதைகளைப் பற்றி சுஜாதா:

"சைநீசில் கவிதைகளுக்கு நன்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்று சேர்க்கிறது" என்று ஜப்பானியக் கவிஞர் கூறியதாக எழுதி உள்ளார்.

உதாரணத்திற்கு இந்த கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.

"சியோடவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்
மூத்தவளுக்கு இருபது வயது இளையவள் பதினெட்டு
ஒரு படைவீரன் கத்தியால் கொள்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொள்கிறார்கள்."


இந்த கவிதையை படித்தவுடன் பாரதியின் கற்பனையில் உதித்த இந்த பாடலை நினைவு கூறாமல் இருக்க முடியாது.
"சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ"


கண்ணையும்,பெண்ணையும் வைத்து எதிர்மறையாக கண்ணதாசன் கற்பனையில்

"கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே"

கண்ணைக் கொடுத்தாலே கவிஞர்கள் கடல் உள்ள வரை கவிதை படைப்பார்கள். பெண்ணையும் கொடுத்தால் கற்பனைக் குதிரையை நிறுத்த முடியாது.

சுஜாதா முயற்சித்த சீனக் கவிதை:

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்க்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல் எனுக்கும் ஒரு சீனக் கவிதை எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. விளைவு இதோ:

எட்டு வயது வேலன் பந்து விளையாடினான்.
பசிக்கு பழைய சோறு சாப்பிட்டான். படுத்து உறங்கினான்
இளமையில் கல் என்பது தமிழ் முதுமொழி
விடியலில் வேலன் வேலைக்கு புறப்பட்டான் தந்தையுடன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxx
நீல. பத்மநாபன்

நீல. பத்மநாபன் அவர்களுக்கு காலம் கடந்து "சாகத்ய அகாடமி" விருது கிடைத்துள்ளது. இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுவது வயதான இவர் திருவனந்தபுரத்தில் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பது வயதில் இவர் எழுதிய "தலைமுறைகள்" என்ற நாவல் மிகவும் பிரபலமானது. க.நா. சு. இந்த நாவலை இந்தியாவிலேயே தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளார். "உறவுகள்", "தேரோடும் வீதி", "இலையுதிர் காலம்" போன்ற நாவல்களும், நூற்றி ஐம்பது சிறு கதைகளும் எழுதி உள்ளார். இவருக்கு பரிசு கொடுத்து "அகாடமி" பெருமை சேர்த்துக் கொண்டது.