செவ்வாய், 23 டிசம்பர், 2014

இயக்குநர் கே.பாலசந்தர் நினைவில் ..

இயக்குநர் கே.பாலசந்தர் ஒரு முழுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து சென்றுள்ளார். இருந்தாலும் ரொம்பவுமே வருத்தமாக இருக்கிறது அவர் படைப்புகள்  எனக்கு மிகவும் பிடிக்கும்.குறிப்பாக தப்புத் தாளங்கள், அவர்கள், நிழல் நிஜமாகிறது.அவர் படங்களின் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். வி.குமார், M.S விஸ்வநாதன்  , இளையராஜா மற்றும் A.R. ரஹ்மான் வரை எல்லா இசை அமைப்பாளர்களையும் நன்றாக பயன்படுத்தியிருப்பார். நிழல் நிஜமாகிறது சினிமாவில் இரண்டே பாடல்கள் தான். தேன் சுவை. உன்னால் முடியும் தம்பி பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. டூயட்டிலும் சௌக்கியமான இசை.

தப்புத் தாளங்கள் சினிமாவில் ரஜினியின் தம்பி சரிதாவைப் பார்த்து விட்டு போன செய்தி ரஜினிக்குத் தெரிந்தவுடன் வரும் காட்சியில் , ரஜினியும் ,சரிதாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். ஒரு காட்சியில்  வந்தாலும் கமல் அசத்தியிருப்பார்.   "நாய் வித்த காசு குறைக்கும்' இது" நினைவிருக்கிறதா?



அவர்களில் ரஜினியை சாடிஸ்ட் ரோலில் மிளிர வைத்திருப்பார் கே.பி. நிழல் நிஜமாகிறதில் கம்பன் ஏமாந்தான் பாடலில் கமல் நடிப்பும், இலக்கணம் மாறுதோ பாடலில் சுமித்ரா நடிப்பும் இன்றும் கண்களில் நிற்கிறது. ஆனாலும் ஷோபா எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுருப்பார்.

பாமா விஜயம் சினிமாவில் நடுத்தர வர்க்கத்தினரின் பகட்டை வெளிப்படுத்தியிருந்த விதம் அற்புதம்.

நாகேஷை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக பரிமளிக்க வைத்ததில் கே.பி யின் பங்கு மிக முக்கியம்.

சின்னத்திரையில் "இரயில் சிநேகம்" என்ற தொடரில் டைட்டில் பாட்டாக வந்த "அந்த வீணைக்குத் தெரியாது அதை செய்தவன் யாரென்று" சஹானா ராகப் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். எல்லா பிரபலங்களுக்கும் அவர்கள் துறையில் கோலோச்சும் கால கட்டம் உண்டு. கே.பி யும் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாத் துறையில் கோலோச்சினார்.இன்று அவர் நம் மத்தியில் இல்லை என்பது வருத்தம் தான். 

திங்கள், 22 டிசம்பர், 2014

இராமானுஜன் - 127

இராமானுஜனின் பிறந்த நாளான டிசம்பர் 22 ஆம் தேதி அவரின் கணிதப் பங்களிப்பின் ஒரு துளியைப் பற்றி இங்கு பார்ப்போம்.


(நன்றி: http://filmzznwzz.blogspot.com/2011/12/happy-birthday-srinivasa-ramanujan.html)
குழந்தைகளுக்கான ஒரு சிறிய புதிருடன் தொடங்குவோம். குழந்தையிடம் ஒரு இயல் எண்ணை (சிறிய எண்ணாக இருந்தால் நல்லது) நினைத்துக் கொள்ளச் சொல்லவும். அந்த எண்ணுடன் 9 யைக் கூட்டச் சொல்லவும். கூட்டி வந்த விடையை இரண்டால் பெருக்கி, கிடைக்கும் எண்ணிலிருந்து 4 யை கழித்த பின் இரண்டால் வகுக்கச் சொல்லவும்.இறுதியில் முதலில் நினைத்துக் கொண்ட எண்ணை கழித்தால் 7 என்ற எண் எப்போதுமே விடையாகக் கிடைப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக 15 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம்.
15+9 =24
24X 2= 48
48-4 44
44/2= 22
22-15 = 7

இதில் பெரிய புதிர் ஒன்றுமில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஓர் எண் பிடித்தமானதாக இருக்கும். எம்.ஜி.யாருக்கு இராசியான எண்  9 என்பார்கள் என நினைவு. 7 என்ற எண் எனக்கு மிகவும் பிடித்த எண். அலெக்ஸ் பெல்லோஸ் என்பவர் உலகளவில் பிடித்தமான எண் கண்டறிய நடத்திய ஓட்டெடுப்பில் 7 வெற்றி பெற்றுள்ளதை இங்கு காணலாம்.

சரி இராமனுஜனுக்கும் 7 என்ற எண்ணுக்கும்  என்ன தொடர்பு?  இரண்டு இயல் எண்களை எடுத்துக் கொள்வோம். அந்த எண்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை ஒரு வர்க்க எண்ணாக(square number) இருக்குமா? பள்ளி நாட்களில்  படித்த "பிதகோரஸ்" தேற்றம் நினைவிற்கு வர வேண்டுமே? உதாரணத்திற்கு 3^ 2+4^ 2= 5^ 2.(3^ 2 எனில் 3X 3)  இதுபோல் ஒரு கணிதக் கோவை (mathematical expression) எப்போது வர்க்க எண்ணைக் கொடுக்கும் என்ற கேள்வி மிகவும் பழமையானது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் இதற்கான விடை அறிந்திருந்தனர்.

இராமானுஜன் 1913 ஆம் ஆண்டு 2^n - 7 என்ற கோவை எந்த n மதிப்புக்களுக்கு ஒரு வர்க்க எண்ணைக் கொடுக்கும் எனக் கண்டறிந்தார்.
n = 1,3,4,5,15 என்ற நான்கு மதிப்புக்களுக்கு மட்டும்  தான்  2^n - 7 ஒரு வர்க்க எண்ணாக இருக்கும் என்ற அனுமானத்தை முன்வைத்தார்.
அதாவது
 2^ 3-7 = 1 (1 இன் வர்க்கம்)
2^ 4-7 = 9 (3 இன் வர்க்கம்)
2^ 5-7 = 25 (5 இன் வர்க்கம்)
2^ 15-7 = 32768-7=32761 (181 இன் வர்க்கம்)

இதை 1948 ஆம் ஆண்டு நார்வேவைச் சேர்ந்த கணிதவியலாளர் நெகால் இதனை நிரூபித்தார். இதில் சுவையான விஷயம் என்னவென்றால்

2^n - D (D என்பது பொதுவான இயல் எண்ணைக் குறிக்கிறது)என்ற கோவை அதிக பட்சம் இரண்டு இயல் எண்களின் n மதிப்பிற்குத் தான் வர்க்க எண்ணாக  இருக்கும் என்ற முடிவு தான் இராமானுஜன் ஆராய்ந்த 2^n - 7 என்ற கோவை தனித்தன்மையானது எனத் தெரிய வந்தது.

 2^n - D என்ற கோவையில் D=7 க்கு மட்டும் நான்கு n மதிப்புக்களுக்கு வர்க்க எண்ணைக் கொடுக்கிறது.

இதிலிருந்து .இந்த மஞ்சுல் பார்கவா வீடியோவில் நுழைந்தால் சுவையான கணிதத்திற்குள் செல்லலாம்




                   

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மிச்சிகன் தமிழ் சங்கம் - தமிழ்நாடு அறக்கட்டளை இணைந்து நடத்திய நாடகம்

சென்ற ஞாயிறு டிசம்பர் 14 ஆம் தேதி மிச்சிகன் தமிழ் சங்கமும்  - தமிழ்நாடு அறக்கட்டளையும்  இணைந்து நடத்திய நகைச்சுவை நாடகம் பஞ்சதந்திரம்  காண  துணைவியாருடன் சென்றிருந்தேன். தமிழ்நாடு அறக்கட்டளை செய்து வரும் மகத்தான பொதுச் சேவைக்கு நிதி சேர்க்கும் முகமாக இந்த நாடகம் நடத்தப்பட்டது. பஞ்சதந்திரம் நாடகம் அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அறிவித்தார்கள்.

இந்த நாடகத்தை சந்திரமௌலி எழுதியுள்ளார்கள். டெட்ராய்டில் இதைத்  தயாரித்து, இயக்கியவர் பழகுவதற்கு இனிமையானவரும் மற்றும் மரியாதைக்குரியவருமான டாக்டர் வெங்கடேசன் .அம்புஜா வெங்கடேசன்  குரலில் தெளிவான தமிழில் ஒலித்த கதைக்களத்துடன் நாடகம் தொடங்கியது. நாடகத்தில் நடித்த எல்லா நடிகர்களையும் என்னால் இனம் காண முடியவில்லை.ஒரு நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் பஞ்சாபிகேசனைச் சுற்றி கதை நகர்கிறது.பஞ்சபிகேசனாக நடித்தவர் நன்றாகச்  செய்திருந்தார். டாஸ்மாக், போலி சாமியார்கள் (குறிப்பாக நித்தியானந்தா?) போன்ற சமீப கால தமிழ்நாடு செய்திகளையும், ஆப்பிள், அண்ட்ராயிட், கூகிள்  என தற்கால பங்களிப்புகளையும் மற்றும் 70 களின் ஆனந்தவிகடன் ஜோக்குகளையும் வைத்து ஒரு நகைச்சுவை நாடகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தொழில்முறை இல்லாத ஒரு குழுசெய்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

பஞ்சபிகேசன் மனைவியாக நடித்தவரின் டயலாக் டெலிவரி தொழில் முறை நடிகரை ஒத்திருந்தது. டாஸ்மாக் கடை முதலாளியாக வந்த ராக்கெட் ராஜா (சதீஷ்) மற்றும் அவர் அல்லக்கையாக நடித்தவர்(தேசிகன் ) அமர்களம்.என்ன சிங்கம் சூரியா - அனுஷ்கா போல உயரம் கொஞ்சம் பிரச்சனை. தேசிகன் ரொம்பவுமே குனிய வேண்டியதாகி விட்டது. சாமியார் (ஆனந்த்) மற்றும் அவரின் சிஷ்யகோடி (வெங்கடேசன்) பட்டையும் (நெற்றியில் தான்) கொட்டையுமாக வந்தது அந்த சிவபெருமானின் திருவிளையாடல் தானோ ? என்ன தான் முகத்தை மறைத்தாலும் இன்னொரு சிஷ்யகோடி சேதுராமன் என்பதை  உடல்மொழி காட்டிக் கொடுத்து விட்டது.ஒரு நல்ல பொழுது போக்கு.ஒர்  உயர்ந்த நோக்கத்திற்காக தங்கள் பங்களிப்பைக் கொடுத்த அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகளை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். இடைவேளையில் நண்பர்கள் சிலருடன் உரையாடியது  ஆனந்த அனுபவம்.

தமிழ்நாடு அறக்கட்டளை கொடையாகக் கிடைக்கும் பணத்தை நல்ல முறையில் தமிழ்நாட்டில் பயன்[படுத்துவதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது. இது போல் கொடுக்கும் நன்கொடைகள் ஜாதி, மதம் மற்றும் இனம் தாண்டி தேவையானவர்களுக்கு சென்றைடைவதே இதன் சிறப்பு.


நாடகத்திலிருந்து:

"நான் சாமியார் கிட்ட ஏழு ஜென்மமும் நீங்களும், நானும் புருஷனும், பெண்டாட்டியாகவும் இருக்கணும் அப்படின்னு வேண்டிண்டேன்.நீங்க என்ன வேண்டிண்டேள்?" பஞ்சாபிகேசன் மனைவி

"நான் இதுவே ஏழாவது ஜென்மமா இருக்கணும்னு  வேண்டிண்டேன்" பஞ்சாபிகேசன்.

"எல்லா உடம்பிற்கும் ஹார்ட்வேர் ஒன்னு தான் ஆனால் ஆபரேடிங் சிஸ்டம் தான் வேறு" சாமியார்.

பி.கு : சமூக ஊடகங்களில் இருந்து தப்பித்தோம் என நினைத்து கொண்டிருக்கும் போதே , நாடக அரங்கிலும் லிங்கா குறித்த அரட்டை தொடர்ந்து காதில் விழுந்த வண்ணம் இருந்தது. நல்லா தான் இருந்தது .. லாஜிக் பார்க்கக் கூடாது ஒரு பெண்மணி. நாங்க லாஜிக் எல்லாம் கழட்டி வைத்து விட்டுத் தான் போனோம். அப்படியும் பிடிக்கலை.மற்றொருவர். 65 வயதில் அனுஷ்கா, சோனாக்ஷி தேவையா என சற்று பொறாமையுடன் கூடிய எரிச்சலுடன் சில ஆண்கள். அந்த அனுஷ்காவிற்காக இன்னொரு தடவை பார்க்கலாம்.என்று சொன்னவர் என் இனம் போல.