செவ்வாய், 21 ஜூலை, 2009

பூமியின் புவிஈர்ப்பு சக்தி சூரிய கிரகணத்தின் போது குறைகிறதா?


கிரகணம் என்று வந்தாலே பலவிதமான விஷயங்கள் ஊடகங்களில் காணப்படுகின்றன.அதிலும் சூரிய கிரகணம் என்றால் கேட்க வேண்டியதே இல்லை.ஜோசியக்காரர்கள் பாடு கொண்டாட்டம் தான். ஆனால் வானியல் அறிஞர்களுக்கு இது ஒரு மிக முக்கியத் தருணம் என்றால் மிகையாகாது. 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது தான் ஐன்ஸ்டைனுடைய தத்துவம் சோதனை மூலம் நீருபிக்கப் பட்டது என்பதை மறக்க முடியாது.

இந்த நூற்றாண்டில் நடக்கும் மிக முக்கிய மேலும் நீண்ட நேரம் காணப்படும் ஒரே கிரகணம் இது தான்.எனவே வானியல் அறிஞர்கள் வெகு நாட்களாக விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று சோதனை மூலம் முயன்று பார்க்க இருக்கிறார்கள்.குறிப்பாக சீனாவைச் சேர்த்த அறிவியலாளர்கள் தான் இதை மேற்கொள்ளப் போகிறார்கள்.

மாரிசே அல்லைஸ் (Maurice Allais) என்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அறிஞர் 1954 ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஊசல் குண்டின் (pendulum)தாறுமாறான செயல் பாட்டை வைத்து பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் மாறுதல் இருப்பதைக் கணித்தார்.அதாவது பூமியின் சுழற்சி மற்றும் புவிஈர்ப்பு சக்தியால் ஊசல் குண்டு ஊசலாட்டம் ஏற்படுகிறது.பாரிசில் சூரிய கிரகணம் ஆரம்பமான போது ஊசல் குண்டின் ஊசலாட்டத் திசையில் பலவந்தமான மாறுபாடு ஏற்பட்டதைக் கண்டார்.இந்த மாற்றம் பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் ஏற்படும் மாறுதலால் தான் என நினைத்தார்.ஆனால் அதற்குப் பிறகு நிகழ்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சூரிய கிரகணங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டும் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் இருக்கிறார்கள் வானியல் அறிஞர்கள்.




இந்த மாதிரி வித்தியாசமான ஊசல் குண்டு செயல் பாட்டிற்குக் காரணம் வெளிமண்டலத்தில்(atmosphere) ஏற்படும் தொல்லைகளால் அல்லது சோதனைக்கு உபயோகப்படுத்தும் கருவிகளால் இருக்கலாம் என்று பல அறிஞர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் இந்த முறை சைனாவில் கிட்டதட்ட 1800 மைல்கள் அகலத்தில் ஆறு இடங்களில் எட்டு நவீனக் கருவிகளை பயன் படுத்துவதால் இந்த சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் தெளிவான ஒரு முடிவு கிடைக்கும் என்று வானியல் அறிஞர்கள் நினைக்கிறார்கள்..

மேலும் இந்த சூரிய கிரகணம் 5 நிமிடங்களுக்கு முழுமையாக இருக்கும்.இதைப் போல் ஒரு சந்தர்ப்பம் இந்த நூற்றாண்டில் கிடைக்க வாய்ப்பில்லை.இந்த முறை ஒரு தீர்மானமான முடிவு கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

4 கருத்துகள்: