செவ்வாய், 28 ஜூலை, 2009

காவஸ்கர் மற்றும் பாய்காட் ஓர் ஓப்பீடு (75-வது இடுகை)


சமீபத்திய செய்தி: கிரிக்கெட் மட்டை ஆட்டத்தில் தனக்கு கவாஸ்கரை விட .5% நுணுக்கம் அதிகமாக உள்ளதாக பாய்காட் கூறியுள்ளார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது மற்றும் இந்தக் கருத்து ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று பார்ப்போம்.பாய்காடே சொல்லி இருப்பது போல காவஸ்கருக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.இரண்டு பேரும் வலதுகை துவக்க ஆட்டக்காரர்கள், தங்கள் ஆட்ட இழப்பை எந்த நேரத்திலும் விரும்பாதவர்கள்."சுயநல வாதிகள்" என்ற குற்றச் சாட்டு இருவருக்கும் பொதுவானது.காவஸ்கர் அளவுக்கு நாசுக்காக ஒரு விஷயத்தை சொல்லுவதற்கு பாய்காட்டுக்குத் தெரியாது.பொதுவாக தனிமை விரும்பிகள்.

பந்தை தூக்கி காற்றில் அடிக்காமல் விளையாட வேண்டும் என்பது காவஸ்கரின் கொள்கையாக இருந்தால், தன்னை நோக்கி வீசப்படும் எல்லா பந்துகளையும் தடுத்து விளையாடினால் போதுமானது என்று நினைத்தவர் பாய்காட்."ரசேல் வெல்ச் (அழகான அமெரிக்க நடிகை) அல்லது லார்ட்ஸ் மைதானத்தில் 100 ஓட்டங்கள் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் லார்ட்ஸ் மைதான 100 ஓட்டங்களையே தேர்ந்தெடுப்பேன்" (என்ன ரசனை இந்த மனிதருக்கு!)என்று பாய்காட் கூறியதிலிருந்து அவரின் கிரிக்கெட் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது.காவஸ்கரின் ஈடுபாடு மற்றும் ஒழுக்கம் பாய்காடை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பது நாமெல்லோருக்கும் தெரிந்தது தான்.

மல்கொம் மார்ஷல் கான்பூர் டெஸ்ட் பந்தயத்தில் வீசிய ஓர் ஓவர் காவஸ்கருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால், ஹோல்டிங் போட்ட ஓர் ஓவரில் இரண்டு பந்துகளில் அடி வாங்கி, இரண்டு பந்துகளைத் தடுத்து விளையாடி,ஆறாவது பந்தில் ஸ்டம்புகள் எகிறியது பாய்காட்டிற்கு மறக்க முடியாத அனுபவம்.ஆனால் இருவரும் அடுத்த வந்த டெஸ்ட் பந்தயங்களில் அதே பந்து வீச்சாளர்களை எதிர்த்து சதம் அடித்தது அவர்களுடைய மகத்துவத்தை நிலைநாட்டுகிறது என்றால் மிகையாகாது.

காவஸ்கர் 60 ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் சாதனை செய்தார் என்றால்,பாய்காட் கிட்டதட்ட 10 மணி நேரம் விளையாடி இந்தியாவிற்கு எதிராக ஓர் அருமையான மட்டையாளர்கள் விளையாடும் களத்தில் 246 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது மறக்க முடியாதது.

விளையாடும் காலங்களில் ஆகட்டும் இல்லை இப்போது கிரிக்கெட் வர்ணனையாலர்களாக பணி புரியும் போதாகட்டும் "சர்ச்சைகளை உருவாக்குவதிலும்,அதில் சிக்கி மிக லகுவாக வெளியே வருவதிலும்" ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

இப்படி பல விஷயங்கள் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு எழுதிக் கொண்டே போகலாம்.ஆனால் கட்டுரையின் முதல் கேள்விக்கு பதில் என்ன என்று பார்ப்போம்.



1. இருவரும் விளையாடும் போது திறமையான மற்றும் உறுதியான தடுப்பு முறையைக் கையாண்டாலும்,காவஸ்கர் பாணி விளையாட்டு மிகவும் நளினமாக இருக்கும்.அவருடைய "கவர் டிரைவ்" கண்ணிற்கு ஒரு மறையாத விருந்தாக இருக்கும்.பாய்காடின் விளையாட்டு மிகவும் தட்டையானது.

2. எத்தனை நேரம் விளையாடினாலும் பாய்காடின் விளையாட்டின் தன்மையில் எந்த மாறுதலும் இருக்காது.போட்டி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரி "எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல்" தான் விளையாடுவார். உதாரணமாக நியூசிலாந்தில் இங்கிலாந்து வேகமாக ஓட்டங்களை எடுத்து வெற்றி பெறவேண்டிய நிலையில் இவர் எப்போதும் போல் கட்டைப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.ஐயேன் போதம் பாய்காடை "ரன் அவுட்" செய்து ஆட்டமிழக்கச் செய்தது நினைவிருக்கலாம்.அதே நேரத்தில் காவஸ்கர் ஒவ்வொரு 25 ஓட்டங்களுக்கு பிறகு ஆட்டத்தில் செய்யும் மாறுதல்கள் அற்புதம்.

3. டெஸ்ட் போட்டிகளில் இவர்களுடைய ஓட்டங்களின் எண்ணிகையில் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.ஆனால் ஓட்டங்கள் எடுத்த முறை தான் மிகவும் வித்தியாசம்.குறிப்பாக காவஸ்கருக்கு பந்துகளைக் கணித்து அடிப்பதற்கு பாய்காடை விட அதிக நேரம் இருந்தது. அதனால் காவஸ்கர் தான் நினைத்த இடத்தில பந்தை திசை திருப்ப முடிந்தது. ஆட்டத்தின் நுணுக்கம் மிகவும் நன்றாக இருந்ததால் தான் இது சாத்தியமாகியது

4. காவஸ்கரின் டெஸ்ட் பந்தயங்களில் அடிக்கும் வேகம் (strike rate): 62.28
பாய்காடின் டெஸ்ட் பந்தயங்களில் அடிக்கும் வேகம் : 53.56


பொதுவாக பாய்காட் ஒரு புத்திசாலி(intelligent) ஆட்டக்காரர்.ஆனால் காவஸ்கர் ஒரு தந்திரமிக்க புத்திசாலி (clever) ஆட்டக்காரர்.

என்னைப் பொறுத்த வரை இருவரும் மிகப் பெரிய துவக்க ஆட்டக்காரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் காவஸ்கர் தான் கிரிக்கெட் ஆட்டத்தின் மட்டை பிடிப்பதில் நுணுக்கம் பாய்காட்டை விட அதிகம் கொண்டவர் என்று மேற்கூறிய காரணங்களைக் கொண்டு கணிக்கிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது என் 75 வது இடுகை. இது வரை என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் எல்லோருக்கும் என் நன்றிகள்.

7 கருத்துகள்:

  1. //இது என் 75 வது இடுகை. //

    வாழ்த்துக்கள்!
    மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //இது என் 75 வது இடுகை//
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //சமீபத்திய செய்தி: கிரிக்கெட் மட்டை ஆட்டத்தில் தனக்கு கவாஸ்கரை விட .5% நுணுக்கம் அதிகமாக உள்ளதாக பாய்காட் கூறியுள்ளார்.//

    அதற்குப் பெயர்தான் தல .., தன்னம்பிக்கை

    பதிலளிநீக்கு
  4. நன்றி சூர்யா கண்ணன் மற்றும் வரதராஜன்.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் சுரேஷ். பாய்காடின் தன்னம்பிக்கைக்கு அளவே இல்லை.ஒரு வித்தியாசமான மனிதர்.தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்து சரியான கருத்துத்தான்!! ஆதாரங்களுடன் விளக்கம் அருமை!!

    பதிலளிநீக்கு
  7. நன்றி தேவன் மாயம் தங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு