வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மூன்று விரல் - இரா.முருகன்

வேலையில்லாத் திண்டாட்டம் 1970 மற்றும் 80களில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், இருந்தது என்பதை மறக்க முடியாது. பாலச்சந்தரின் "வறுமையின் நிறம் சிகப்பு" மற்றும் பாரதிராஜாவின் "நிழல்கள்" இந்தக் கருத்தை பிழியப்பிழிய மக்கள் முன் வைத்தன. அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பேட்டியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு "திறமையுள்ளவர்களுக்கு இன்றும் வேலை கிடைக்கிறது" என்று பதிலளித்ததாக நினைவு. அப்போதெல்லாம் வங்கியில் வேலை கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டசாலி, புண்ணியவான் என்று பாராட்டு கிடைக்கும், கூடவே பெண்ணும் கிடைக்கும், கூடவே பணம், பொருள், வாகனம் இத்யாதி இத்யாதி.


ஆனால் 90 களில் நிலைமை முற்றிலும் மாறியது.எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற இருளில் இளைஞர்களுக்கு கணினி உலகம் விடிவெள்ளியாய் உதித்தது. கணிதம், அறிவியல், பொறியியல்,தமிழ், தெலுங்கு என எது படித்திருந்தாலும் கணினி உலகம் எல்லோரையும் பாகுபாடில்லாமல் அணைத்துக் கொண்டது."Trespassers will be appointed" என்ற கார்ட்டூன் பார்த்ததாக நினைவு. வருமானம் அதிகம். வெளிநாட்டுப் பயணம்.வெளிநாட்டு வாழ்க்கை என்று யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது.


ஆனால் அந்த கணினி உலகின் மறுபக்கம் பலருக்கும் தெரியாதது. அதுவும் ஒரு இருள்தான்.அந்த இருண்ட பகுதியைப் பேசுபொருளாகக் கொண்டதுதான் இரா.முருகனின் மூன்று விரல்கள் நாவல். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களின் மன அழுத்தங்கள், மனிதாபிமானம் இல்லாமை, குறிப்பிட்ட வேலை நேரம் என இல்லாமல் தொடரும் வேலை பளு, தன் ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் போதுநிறுவனங்கள் காட்டும் அலட்சியப் போக்கு போன்ற சகல பிரச்சனைகளையும் இந்தப் புதினம் தொட்டுச் செல்கிறது.

கணினி உலகில் கோவர்தன் கார்டன் எனவும்,ஸ்ரீராம் ஸ்ரீ என மாறுவது போல் சுதர்சன் சுதாவாகிறான் இங்கு. ஏதேதோ தொழில்கள் செய்யும் ரங்கா மென்பொருள் செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறான். அதில் வேலை பார்க்கும் சுதா இங்கிலாந்து பயணம். அங்கு சந்தியா என்ற மலேசிய தமிழ் பெண்ணின் சந்திப்பு காதலில் முடிகிறது. இங்கிலாந்திலிருந்து சுதா இந்தியா திரும்பி வருமுன் அவன் வேலை பார்க்கும்கம்பெனி வேறு ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. விமான சந்திப்பில் ஏற்பட்ட ஒரு தொடர்பின் விளைவு சுதாவின் வேலை மாற்றத்தில் முடிகிறது.

பிரபந்தம் படித்துக்கொண்டு அம்மா பேச்சைக் கேட்டு வாழ்ந்து வரும் அப்பா என சுதாவின் குடும்பம் ஊரில். பெற்றோரைச் சந்திக்க வருகிறான் சுதா. நண்பரின் மகளான புஷ்பவல்லியை திருமணம்செய்து வைக்க எத்தனிக்கும் பெற்றோர். சுதாவைத் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் புஷ்பவல்லி. தன் சந்தியாவுடனான காதலை வெளிப்படுத்த சுதாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் அம்மாவுக்கு வரும் ஹார்ட்அட்டாக் எனச் செல்கிறது கதை.

புது வேலையில் தன் குழுவின் தலைவனாகத் தாய்லாந்து செல்கிறான் சுதா. அங்கு அவனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதையொட்டி ஏற்படும் மனஅழுத்தங்கள் என்று விலாவாரியாக எழுதிச்செல்கிறார் ஆசிரியர். குறிப்பாக ராவின் கைது விவகாரம், அதே சமயம் திருமணம் செய்துகொள்ளுமாறு வரும் புஷ்பவல்லியின் தொலைபேசி போன்ற சுதாவின் சங்கடங்களையும், அதை அவன் எதிர்கொள்ளும் விதமும் மிக அழுத்தமாக இரா.முருகனால் சொல்லப்பட்டுள்ளன. புஷ்பவல்லியையும் திருமணம் செய்துகொள்ளாமல், சந்தியாவையும் செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர விபத்தில் இழக்கிறான் சுதா. பிறகு தன்னுடன் பணிபுரியும் வேறு பெண்ணை மணந்து அமெரிக்காவில் குடியேறுகிறான். இன்னொருவனைத் திருமணம் செய்து கொண்டுவசிதியாக வாழும் புஷ்பவல்லியை அங்கு சந்திக்கிறான்.

மூன்று விரல்கள் என்பது கணினியின் கீபோர்டிலுள்ள Ctrl+Alt+deleteஐக் குறிக்கிறது. பல சமயங்களில் விண்டோஸில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு காரணம் அறிய முடியாது. ஆனால் தீர்வோ ஒன்றுதான். எல்லா பிரச்சனைகளுக்கும் சகல ரோக நிவாரணி Ctrl+Alt+deleteஐ இரண்டு முறை பயன்படுத்துதல். அது கணினியின் நினைவில் இருக்கும் எல்லாவற்றையும் அழித்து தன்னைப் புதிப்பித்துக்கொண்டு செயல்படத் துவங்கும். அதுபோல் இந்த நாவலில் சுதா, புஷ்பா என பலர் வாழ்க்கையிலும் நிகழ்வுகள் வந்து செல்கின்றன. இதைப் பொதுவாக எந்த மனித வாழ்க்கைக்கும் பொருத்திக் கொள்ளலாம். எல்லாருக்கும் எப்போதும் மூன்றுவிரல்கள்தான் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொண்டு தொடர உதவுகின்றன - Control+Alter+Delete.

இரா முருகன் சுஜாதாவின் நடையைப் பின்பற்ற முயன்றுள்ளார். வெகுசில இடங்களில் அது நன்குபொருந்தி வந்துள்ளது. மென் பொருள் தொழிலில் இருப்பவர்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ஆற்றல் உறிஞ்சப்படுகிறது என்பதை நன்கு கூறியுள்ளார். ஆனால் இன்னும் அழுத்தமும், ஆழமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பல இடங்களில் கதை மாந்தர்களின் எண்ணங்களும், செயல்களும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளன. சிக்கல்கள் தீர்க்கும் இடங்கள் இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கலாம்.

இந்த நாவல் சினிமாவாக வந்துள்ளதா எனத் தெரியவில்லை. வரவில்லை எனில் ஆச்சரியம்தான். ஒரு சினிமாவிற்குத் தேவையானவை எல்லாம் இந்தக் கதையில் உள்ளன. கணினி தொழில்நுட்பம் சார்ந்த, முற்றிலும் புதிதான வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தும் நாவல்களில் இது முதன்மையான ஒன்று.

மூன்று விரல் - இரா.முருகன்கிழக்கு பதிப்பகம்368 பக்கங்கள். விலை ரூ. 150/-இணையத்தில் வாங்க: கிழக்கு / உடுமலை

இந்தக் கட்டுரை இந்த புத்தகங்கள் விமர்சிக்கும் http://omnibus.sasariri.com/2012/09/blog-post_4125.html தளத்தில் பதியப்பட்டது.

2 கருத்துகள்: