சனி, 29 செப்டம்பர், 2012

அனிதா இளம் மனைவி - சுஜாதா


குமுதத்தில் வந்த நைலான் கயிறு சுஜாதாவின் முதல் தொடர்கதை. சுஜாதா எழுதிய அடுத்த தொடர்கதை அனிதா. அன்றிருந்த எஸ்.ஏ பி குமுதம் அனிதா என்ற பெயரை "அனிதா - இளம் மனைவி" எனப் பெயரிட்டு வெளியிட்டது. கொலை - கொலையாளி யார்? இதுதான் கதைக்கரு. தமிழில் இதைப் போன்ற கதைகளை இறுதிவரை சுவை குறையாமலும், சஸ்பென்ஸுடனும் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் எவருமில்லை என நினைக்கிறேன்.
 
ஷர்மா - கொலை செய்யப்பட்டவர் - கடுமையான உழைப்பாளி.- ஏகப்பட்டச் சொத்து. 
அனிதா - ஷர்மாவின் 29 வயதான இளம் இரண்டாவது மனைவி. 
மோனிக்கா - ஷர்மாவின் ஒரே மகள் - தன் அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்தவள் - ஹாஸ்டலில் வளர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறாள்.
பாஸ்கர் - ஷர்மாவின் செக்ரடரி 
கோவிந்த் -  விசுவாசமான வேலையாள் 
வசந்த் இல்லாத கணேஷ் - வக்கீல் 
ராஜேஷ் - அவ்வப்போது வந்து போகும் இன்ஸ்பெக்டர் 
 
காரில் கோவிந்துடன் 14 ஆயிரம் (அந்த காலகட்டத்தில் பெரிய பணம்) எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் ஏற்படும் விபத்தில் ஷர்மா இறந்து போகிறார். இறந்த உடலில் சாட்டையால் அடித்த குறிகள் இருக்கின்றன. இறந்தது ஷர்மாதான் என அவரது இளம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள்.  கோவிந்தின் உடல் சம்பவ இடத்தில் இல்லை, அவன் காணாமலும் போய் விடுகிறான். எனவே அவன்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறான் என எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், அது விபத்தல்ல கொலையாகவே இருக்கும், என போலீஸுக்கும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்தான் இந்தக் கேஸை எடுத்து நடத்துகிறார். 
 

தாமத தகவல் கிடைத்து ஷர்மாவின் முதல் மனைவிவழி மகள் மோனிக்கா இந்திய வருகிறாள். அவளுக்கு அனிதாவைப் பிடிக்கவில்லை. நாய்க்குட்டியை  செயினில் கட்டிப் போடுவது போல் அனிதா தன் அழகால் தன் தந்தையைக் கட்டிவைத்து  விட்டாள் என அவளுக்குக் கோபம். மோனிக்காவுக்கும் அவள் தந்தை மீது எந்த பாசமும் இல்லை. அவள் ஷர்மாவின் சொத்தில் தன் பங்கைப் பெற்றுச் செல்ல முயல்கிறாள். ஆனால் ஷர்மா எழுதிய உயிலில் உள்ள பிரச்னையை முன்னிட்டு வக்கீல் கணேஷை சந்திக்கிறாள். கணேஷும் ஷர்மாவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து  துப்பறியும் வேலையைத் தொடங்குகிறான். 
 
அனிதா, மோனிக்கா, பாஸ்கர் என எல்லோரையும் விசாரித்துப் பார்க்கிறான் கணேஷ். எல்லோருமே பொய் சொல்கிறார்கள். கணேஷுக்கு எல்லோர் மீதும் சந்தேகம். கோவிந்தும் கிடைத்தபாடில்லை. அனிதா மற்றும் ஷர்மாவின் அறைகளை சோதனை செய்கிறான் கணேஷ். எப்படியோ கோவிந்தின் ஒரு புகைப்படத்தை கண்டெடுக்கிறான். சாட்டையால் அடித்த காயங்கள் இருப்பதால் யாரோ ஷர்மாவைப் பழிவாங்கவே கொலை செய்திருக்கிறார்கள் என கணேஷ் நினைக்கிறான். அனிதாவின் இளமை மற்றும் கொள்ளை கொள்ளும் அழகும் அவளது பாத்திரப்படைப்புக்கு உயிரூட்டி இந்தக் கதையில் ஒரு முக்கியமான முடிச்சுக்குக் காரணமாக இருக்கின்றது. கணவனின் சொத்தே தனக்குத் தேவையில்லை, நிம்மதிதான் முக்கியம் என மிக அதிகப்படியாகவே அனிதா சொல்வதால் அவள் மீது சந்தேகம் வலுக்கிறது. 
 
கணேஷுக்கு இந்த விவகாரத்தில் இருந்து விலகும்படி மிரட்டல் வருகிறது. பாஸ்கர் மீது சந்தேகமுற்று அவன் வீட்டுக்குச் செல்லும் கணேஷ் அங்கு பாஸ்கரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எதுவும் புரியாத புதிராக இருக்கிறது. இதை அனிதாவிடம் தெரிவிக்க கணேஷ் தொலைபேசும்போது அனிதா தனக்கு பயமாக இருப்பதாகவும், அவனிடம் எல்லா உண்மையையும் சொல்வதாகவும் கூறுகிறாள். அவள் வீட்டிற்கு வந்தால் அங்கு அனிதா இல்லை தொலைபேசி மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணேஷ் இறுதியில்  கொலையாளியைக் கண்டு பிடிக்கிறான். அது ஒரு எதிர்பாராத முடிவு, கணேஷுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.
 
சுஜாதாவின் எழுத்திலிருந்து சில வரிகள்:
 
"அனிதா அந்த அறையில் பாடிக் கொண்டிருந்தாள். சந்தன மணமும் ஷவரிலிருந்து பெருகும் இதமான வென்னீரும் மிக மென்மையான பதிந்த கற்களும், மிக மெதுவாக அவள் தன உடலைத் திரும்பித் திரும்பிச் சுடுநீரின் தொடுகையில் ஓர் அரை மயக்கத்தில் பாடிக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் துளிகள் அவள் உடம்பின் வளைவுகளில் சரிந்தன நேர்பட்டன தழைந்தன சொட்டின." 

சுஜாதாவின் இந்த வர்ணனைக்கு ஜெ. படம் வரைந்தால் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!.
 
சுஜாதா எழுதியவற்றில் மிகச்சிறந்த கதை இது எனக் கூறமுடியாது. அவரது நடைதான் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.  விஷுவல் ரைட்டிங்கை மிகச் சரளமாகக் கையாள்பவர் சுஜாதா. டெல்லியைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்திராகாந்தி, அந்தக்கால டெல்லியின் அமைப்பு, M.D. ராமநாதன் சௌக்க காலத்தில் வானொலியில் பாடுவது என சமகால நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிக் கொண்டு செல்கின்றன. இன்றைக்கு சுஜாதாவைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு என் இளமைக் காலத்தில் சுற்றித் திரிவது போல இருக்கிறது.  

இந்தக் கட்டுரை ஆம்னிபஸ் வலைத் தளத்தில் ஏற்கனவே பதிவாகியது.

2 கருத்துகள்:

  1. நல்ல நேர்த்தியாக எழுதப்பட்ட விமர்சனம் பாஸ்கர் லஷ்மண்.

    ஆம்னிபஸ்சுக்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி :))

    பதிலளிநீக்கு
  2. நன்றி கிரி. நீங்கள் பாரபட்சமில்லாமல் பல புத்தகங்களைப் பற்றி விமர்சனம் எழுதி வருகிறீர்கள். என்னால் முடிந்தது.

    பதிலளிநீக்கு