திங்கள், 10 செப்டம்பர், 2012

தகழியின் குணவதி - தமிழில் சு.ரா


புனைவுகளைக் கொண்டு  மனிதனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அவை சார்ந்த சிக்கல்களையும், முரண்பாடுகளையும் வாசகனின் கண் முன்பு நிறுத்தும்போது எழுத்தாளன் இலக்கியத்தின் உச்சத்தை நோக்கிச் செல்கிறான். அவனது எழுத்தின் ஆழத்தைப் பொறுத்து படைப்பின் நிரந்தரத்தன்மையும், எழுத்தாளனின் இடமும் உறுதி செய்யப்படுகின்றன. வெகு சில எழுத்தாளர்களே சிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்கள் என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை என்பதில்  எந்த சந்தேகமுமில்லை.

தகழியின் இரண்டாவது புதினமான "பதிதபங்கஜம்" 1934 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதனை சு.ரா தமிழில் "குணவதி" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இதில், தகழி ஒரு விலைமாதுவின் மன ஓட்டத்தையும், உணர்ச்சிப் போராட்டங்களையும் ஆழமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
"சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை. மனம் திறந்து கூறுவதாக இருந்தால் அவள் ஒரு பேரழகி." எனத் துவங்குகிறது குணவதி.. இந்த குணவதியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ரதீசன், அவளைக் கண்டு மனவேதனைப்படும் வினயன் இவர்களின் மன ஓட்டம்தான் கதையின் களம்.

பலரும் குணவதியின்  குரலின் இனிமையிலும், நடனத்தின் நளினத்திலும் அவளது அழகின் சுவையிலும் தோய்ந்து களிக்கிறார்கள், அவள் மட்டுமே மன வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. ரதீசன் குணவதியின் மன நிலையையோ, அவள் கடந்து செல்லும் துன்பத்தையோ சிறிதும் கண்டுகொள்ள மறுக்கிறான். ரதீசனுக்கு குணவதி பணம் செய்யும் ஒரு இயந்திரம்குணவதியின் துன்பத்தைக் கண்டு மனமுருகி அவள் மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறான் ரதீசன். எத்தனையோ ஆண்கள் குணவதியை அனுபவித்துச் சென்றிருந்தாலும், அவளிடம் வினயன்  காட்டும் பரிவில்தான் உண்மையான அன்பின் இயல்பை உணர்கிறாள் குணவதி. அவளது மென்மையான கரங்களைப் பற்றி "நீ தேவடியா இல்ல..." எனக் கூறுகிறான் வினயன். தன மீது பரிவு காட்டுவும் ஓருயிர் இந்த உலகத்தில் இருப்பதை குணவதியால்  நம்ப முடிவதில்லை.

ஊரில் இருப்பவர்கள் குணவதியைப் பார்க்கும் பார்வையில் அவள் கூசிப் போகிறாள். அதே சமயம் அவளிடம் ஒரு சிறுமி வந்து நாலு காசு வேண்டும் எனப் பிச்சைக் கேட்கிறாள். அப்போது குணவதி தனக்கு எப்படி இந்த மரியாதை வந்தது என  நினைத்துப் பார்க்கிறாள்தான் அணிந்திருக்கும் நகையே இதற்குக் காரணம் என மடிவு செய்கிறாள். இதைப் போன்ற பல நுணுக்கமான உணர்வுகளை மிக அழகாக எழுதிச் செல்கிறார் தகழி.

மற்றொரு சமயம் ஒரு பெண் குணவதியிடம் தன் கணவன் எங்கே என வினவுகிறாள். தன்  சாகப்  போகும் மகளைப் பார்க்கத் தன் கணவன் வர வேண்டும் என்று மன்றாடுகிறாள். ஆனால் குணவதிக்கோ அவள் எந்த ஆணைத் தன் கணவன்என்று சொல்கிறாள்  என்றே தெரிவதில்லை. தன் கணவனை மயக்கி தன் குடும்பத்தின் இந்த பரிதாபக நிலைக்குக் காரணமாக இருக்கிறாள் என்று குணவதியை சபிக்கிறாள் அவள். தன் செயல்களுக்கு இப்படிப்பட்ட பின்விளைவுகள் இருப்பதை அப்போதுதான் உணர்கிறாள் குணவதி. தன்மீதே அவளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

எத்தனையோ ஆண்களின் துளைக்கும் கண்களையும், உடல் பசியின் விருந்தாகவும்உணர்ச்சியற்று  வாழ்ந்து வரும் குணவதிக்கு வினயனின் பார்வையும், நடத்தையும் வேறு உலகை அவள் கண் முன் நிறுத்துகின்றன. வினயனும் குணவதியும் நெருங்கி வருகிறார்கள். குணவதி உண்மையான காதலையும், அன்பையும் தன் வாழ்வில் முதல் முறையாக, அனுபவிக்கிறாள். குணவதியைத் தூங்க வைத்து அவளுக்கு விசிறியும் விடுகிறான் வினயன். இந்த அன்பின் விவரணை தகழியின் மொழியில் சிறப்பாக உள்ளது. குணவதியைத் தன்னுடன் வந்து விடும்படி அழைக்கிறான் வினயன்..

குணவதி, தான் இனி இந்தத் தொழிலைச் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரதீசன் அவளின் அனைத்து நகைகளையும் பெற்றுக் கொள்கிறான். குணவதியை கட்டாயப்படுத்தி பெருவியாதி பிடித்தவனின் இச்சைக்கு இரையாக்குகிறான். அதன் பிறகு குணவதி தன்னைப் பார்க்கவோ, நெருங்கவோ வினயனை அனுமதிப்பதில்லை. வினயன் குணவதியின் நிலையை உணர்ந்து ரதீசன்மீது தீராக் கோபம் கொள்கிறான். குணவதியின் அத்தனை துன்பங்களுக்கும் பழி வாங்க ஒரே வழி ரதீசனைக் கொல்வதே  என்ற எண்ணம் வினயனது உள்ளத்தில் மேலோங்குகிறது. அதை நிறைவேற்றுகிறான். மிகுந்த அன்புடனும், நெருக்கத்துடனும் இருக்கும் தன் தாயிடம் கூட இதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.

தலை துண்டிக்கப்பட்டு ரதீசன் இறந்ததை நினைத்து குணவதி வருந்துவதைப் பார்த்து வினயன் ஆச்சரியமடைகிறான். ரதீசன் சுயநலத்திற்காக குணவதியைப் பயன்படுத்திக் கொண்டாலும், அவன் கொலை செய்யப்பட்டது தவறு எனக் கூறுகிறாள். அந்தக் கொலையை செய்தது வினயன் எனத் தெரிந்தவுடன் மிகவும் வருந்துகிறாள். அவனை போலீசில் சென்று உண்மையை ஒப்புக் கொள்ளச் சொல்கிறாள். வினயனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

அவன் சிறையிலிருந்து விடுதலையாகி திரும்பி வந்து பார்க்கும் சமயம் குணவதியின் வீட்டில் யாரும் இருப்பதில்லை. தாயும் இறந்துவிட்டாள் என்று அறிகிறான். அவளது இறுதி காலத்தில் யாரோ ஓர் இளம் பெண் அருகிலிருந்து அவளுக்கு சேவை செய்திருக்கிறாள் எனப் பிறர் சொல்லக் கேள்விப்படுகிறான். குணவதியைத் தேடி ஊர் ஊராக அலைந்தும் அவளைக் காணும் ஏக்கம் நிறைவேறாமல் நிராசையில் முடிகிறது அவனது வாழ்வு.

இந்தப் புனைவை தகழி எழுதியவிதம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஓரு  துளையிடும் கருவியைக் கொண்டு இதயத்தைத் துளைத்ததைப் போன்ற ஓர் உணர்வு. பெண்களின் துயரமும், தியாகமும் தொடந்து இலக்கியத்திற்கான ஒரு பொருளாக அமைகிறது. கண்ணீரைப் பின்தொடர்தலில் எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் "இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப்பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே அதனால் மானுட சாரமாக கண்டடையப்படுகிறது". இது இந்த தகழின் நாவலைப் படிக்கும் போது நன்கு உணர்ந்தேன்.

மலையாளம் தெரிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சு. ரா வின் அழகான மொழியாக்கத்தில் தமிழில் படித்து அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதையை படித்து மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது.

குணவதியை எழுதி இன்று ஏறக்குறைய 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.அன்று இருந்த பெண் குலத்தின் நிலைமையும் இன்றைய நிலையும் வேறானவை. இன்றும் பெண்களுக்கான சுதந்திரம் முழுதும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. சிலருக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், ஆணாதிக்கம் முழுவதும் நீங்கி விட்டது எனக் கூற முடியாது. இன்றுள்ள பெண் குணவதி போலில்லாமல் நிச்சயம் ரதீசனின் கொடுமையை எதிர்க்கலாம். இந்தப் புதினம் அந்தக்கால விழுமியங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இன்றும் பெண்களை போகப் பொருளாக நடத்துபவர்கள் இல்லாமல் இல்லை. இன்றும் குணவதியின் மன உளைச்சலும், துன்பமும் அனுபவிக்கும் பெண்கள் இருப்பதால் இன்றும் இந்தப் புதினம் அதன் காலத்தைக் கடந்து இயல்பு நிலையையே பேசுகிறது. என்ன ஒன்று, குணவதி போன்ற பெண்களின் மனநிலை, அவர்களை இலக்கியப் படைப்புகள் அணுக வேண்டிய  முறை முதலானவை குறித்த நம் எதிர்பார்ப்புகள் மட்டுமே முழுமையாக மாறியிருக்கின்றன

இறுதியாக நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி:

"வினயனுடன் தான் கொண்டிருந்த உறவை தன்னுடைய மனதின் அடி ஆழத்திலிருந்து இழுத்து மேலே கொண்டுவர அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவளின் காதல் அங்கு அடைபட்டுக் கிடந்தது. அந்த நோயாளி மனிதனுடன் உறவு கொண்ட ஓயறகு தான், அது உள்ளே தள்ளப்பட்டு விட்டது. அது கூட வினயனுடன் அவன் கொண்ட தீவிர காதலால் தான். ......
வினயனின் இரக்கம் கலந்த முத்தத்தை பெறவும், பார்க்கும் நிமிடங்களில் மனதில் மகிழ்ச்சிப் பொங்கி நிற்கவும், கடவுளின் இதயத்தைப் போல கருதி பாதுகாப்பான அவன் நெஞ்சின் மேல் தலையை வைத்து உறங்கவும் அவள் ஆசைப் பட்டது இருந்த இடம் தெரியாமல் அடங்கிப் போனது."
"உங்க குணவதி ஒரு தீராத நோயைக் கொண்டவள்"
"அய்யோ ...அது எப்படி?"
"ரதீசன் ஒருவனை அழைச்சிட்டு வந்தான். அவன் என் கூட படுத்தான்"
"உன் பாதத்தில் நான் கொஞ்சம் விழட்டுமா? கதவைத் திற."
"என்  பாதத்திலேயா ?"
"இல்ல கஷ்டங்கள் அனுபவிக்கற மனித உலகத்தையே உன் மூலம் நான் பார்க்கிறேன். அதற்கு முன்னால் ....."

2 கருத்துகள்: