சனி, 4 செப்டம்பர், 2010

ஓர் ஆசிரியரின் நினைவாக.... II

வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிமிட அனுபவம் மறக்க முடியாத சுவையான இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வலிமையுள்ளது. எனக்கு அப்படி ஓர் அனுபவம் ஓர் ஆசிரியரின் மூலம் கிடைத்தது. அவரின் நினைவாகத் தான் இந்த இடுகை.

நான் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலையில் கணிதத்தை சிறப்புப் படமாக எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். தமிழும், ஆங்கிலமும் கட்டாயம் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். அந்த வகுப்புகளில் ஐம்பது மாணவர்கள் இருப்பார்கள். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே பெரிய ஈடுபாடுடன் தமிழும், ஆங்கிலமும் கற்றோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அது பெரிய தவறு என்று உணர்ந்த போது காலம் கடந்து விட்டது. அதிலும் ஆங்கிலத்தை விட தமிழ் கற்பதில் ஓர் அக்கறையின்மை இயல்பாகவே மாணவர்களிடையே இருந்தது என்றால் மிகையாகாது.

இரண்டாம் ஆண்டில் பேராசிரியர் லூர்து அவர்கள் தமிழ் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். அவர் புத்தகங்கள் வாங்குவதிலும், படிப்பதிலும் நிகரில்லாதவர். அவருடைய வருமானத்தில் கணிசமான தொகையை புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பதாகக் கூறுவார். பட்டிமன்றங்களில் விருப்பமில்லாமல் அவர் கலந்து கொண்டது கூட இதற்குத் தான் என்ற பேச்சு உண்டு. ஒரு முறை "Future Shock" என்ற புதிதாக வாங்கிய புத்தகத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ஒரு நாள் வகுப்பில் புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறினார். ஒரு கதையின் முடிவில் புதுமைப்பித்தன் "அங்கே சிருஷ்டித் தொழில் நடக்கிறது" என்று முடித்ததைப் பற்றி சிலாகித்தார். அப்போதெல்லாம் குமுதம், கல்கி,விகடன் வாசிப்புத் தான் இருந்தது. லூர்து அவர்கள் அறிமுகப்படுத்தலில் நூலகத்திலிருந்து புதுமைப்பித்தனைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தி.ஜா,வண்ணநிலவன், ல.ச.ரா என்று அருமையான இலக்கியத்தை நோக்கிச் செல்லும் அனுபவம் வாய்த்தது. அது தொடர்ந்து இன்று ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் வரை கொண்டு சேர்த்திருக்கிறது. உண்மையான இலக்கிய அனுபவம் எது என்பதும் லூர்து அவர்கள் திறந்து வைத்த வாசல் மூலம் அறிய முடிந்தது. பேராசிரியர் லூர்து அவர்கள் இன்று நம்முடன் இல்லை எனினும், அவருக்கு என் நன்றியைச் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. உண்மையாக அவர் பாடத்திட்டத்தில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை (அதற்கு முழு பொறுப்பு நான் தான்). ஆனால் இன்று ஓரளவு இலக்கிய வாசகனாக இருப்பதற்கு வழிகாட்டி பேராசிரியர் லூர்து அவர்கள் என்பதை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறேன்.

8 கருத்துகள்:

  1. ஆசிரியர் தினத்தில் தன்னை ஒரு இலக்கிய வாசிப்பாளனாக உருவாக்கிய ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. புத்தகப் பாடத்தைத்தவிர இன்னும் எத்தனையோ அறிந்துகொள்கிறோம் ஆசிரியர்களிடமிருந்து.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல நினவுகளை மீட்டுருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி சரவணன். வழிகாட்டிய ஆசிரியர்களை நினவு கூறுவது ஒவ்வொருவரின் கடமை இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. நிச்சியமாக சந்திரா. தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி யோகேஷ்.

    பதிலளிநீக்கு
  7. பேராசிரியர் தே. லூர்து மாணவர்களை ஈர்த்த ஆசிரியர் மட்டுமல்ல, ஆழங்காட்பட்ட ஆய்வாளரும் கூட. நாட்டார் வழக்காற்றிற்றுறைக்கு அவர் அளித்திருக்கும் கொடைகள் அளப்பரியன. அவரைப் பற்றிய பதிவிட்டதற்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி யரலவழள அவர்களே.

    பதிலளிநீக்கு