சனி, 31 டிசம்பர், 2011

2011 ஒரு பார்வை

மேலும் ஓராண்டு முடிகிறது. உலகத்தில் பல மாறுதல்கள். பின்லேடன், கடாபி  மற்றும் கிம் ஜான் II கதைகள் இந்த ஆண்டில்  முடிவுக்கு வந்தது ஒரு தற்செயலான நிகழ்வு?




ஒபாமா மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக பட்சி சொல்கிறது. எதிர்கட்சி வேட்பாளர்களின் வலுவின்மை முக்கிய காரணியாகத் தெரிகிறது.












இந்தியாவைப் பொறுத்தவரை மன்மோகன் சிங்கைப் பற்றி "நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என முடித்துக் கொள்ளலாம்.

அன்னா ஹசாரே நடவடிக்கைகள் பற்றி எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. அதை நோக்கித் தான் அவர் செயல்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.





சுப்பிரமணிய சுவாமி தான் ஒரு விதத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்தில்  இந்த ஆண்டின் ஹீரோ என்றால் மிகையாகாது. தப்பித்துக் கொண்டே வந்த கருணாநிதி குடும்பத்தின் ஒரு நபரை சிறையில் அடைக்க முடிந்தது எதிர்பாராதது. சிதம்பரம் கதி அடுத்த ஆண்டு தெரியும்.

தமிழ் நாட்டில் கருணாநிதி தோல்வி நல்ல விஷயம் தான். ஆனால் அதன் பலன் மற்றும் ஜெயாவின் நடவடிக்கைகள்  பொறுத்திருந்து பார்க்க வேண்டியது.



கணிதத்தில் கென் ஓனோ  கண்டறிந்த பிரிவினைகள் (Partitions) குறித்த உண்மைகள் இந்த ஆண்டின் ஒரு பெரிய மைல் கல்லாகும். இதைப் பற்றிய என் கட்டுரையை இங்கே படிக்கலாம்.



இந்த ஆண்டிற்கான இயற்பியல் நோபெல் பரிசு எனக்கு மிகவும் உவப்பான விஷயத்திற்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதை தமிழில் மிக அழகான கட்டுரையாக அருண் நரசிம்மன் அவர்கள் எழுதியுள்ளதை இங்கு படிக்கலாம்.

எகிப்து, துனிசியா மற்றும் சிரியாவில் நடந்த புரட்சியில் இன்றுள்ள தொழில் நுட்பமான டிவிட்டர், முகப் புத்தகம் (Face book) மற்றும்  இணையம்   ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. மகிழ்ச்சியளிக்கக் கூடியது.



உலகக் கோப்பை இந்திய வெற்றி சந்தோஷமான நிகழ்ச்சி. அதை விட ராகுல் டிராவிட் இந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது தான் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்வு.



சங்கீதத்தைப் பொறுத்த வரை அபிஷேக் ரகுராம் என்ற இளைஞரின் பாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. எதிர் காலத்தில் கர்நாடக சங்கீத உலகில் இவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு மனமார வாழ்த்துக்கள்.

இந்த வருட தமிழ்  சினிமா  இசையோ, படங்களோ நான் பார்த்த, கேட்ட வரையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

என் சொந்த அனுபவத்தைப் பொறுத்த வரையில் பெரிய சாதனைகள் எதுவும் இல்லை. பெரிய அளவில் இணையத்தில் எழுதவும் முடியவில்லை. சரக்கு இல்லை என்றும் கூறலாம். படித்த சில புத்தகங்களைப் பற்றி எழுதலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சொல்வனம் ந. பாஸ்கர் அவர்களின் உதவியாலும், உற்சாகத்தாலும் சொல்வனம் இணைய இதழில் நான்கு கட்டுரைகள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. பாஸ்கருக்கு என் நன்றிகள் பல.

பனிரெண்டு வருடம் போர்ட் (Ford) நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு வெளியேறும் நேரம் வந்த போது மிகவும் வலித்தது. எத்தனை நண்பர்கள். விதவிதமான அனுபவங்கள். அந்த நிறுவனத்திற்கும், அங்கு என்னுடன் பணியாற்றியவர்களுக்கும்  என்றும் கடமைப் பட்டுள்ளேன்.

இந்த சமயத்தில் என் பதிவுகளை தொடர்ந்து படித்து ஆதரவு தந்து வரும் முகம் தெரியாத என் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

எல்லோருக்கும் 2012 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



5 கருத்துகள்: