
நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைத்தளத்தில் எழுதுவதால் பழைய விஷயங்களைப் பற்றிய (காந்தி செத்துட்டாரா போன்ற) சில குறிப்புகளும் இருக்கும். பொறுத்தருளவும்.
இந்தியா கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தென் ஆப்பிரிக்கா கால் இறுதியில் தோற்றது பெரிய ஏமாற்றம். இந்தியா, தென் ஆப்பிரிக்கா இறுதி ஆட்டம் இருந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சாகிர் கான் பந்து வீச்சு மிகவும் அருமை.மற்றபடி யுவராஜ் அந்த காலத்து ரவி சாஸ்திரி மாதிரி பாட்டிங் மற்றும் பெளலிங்கில் திறமையை வெளிபடுத்தினார். மொகாலி அரை இறுதி ஆட்டத்தில் ஒரு கிரிக்கெட் ரசிகர் காட்டிய வாசகம் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. "Indians have only two religions. Cricket and Cinema. why to fight". கிட்டத்தட்ட ஆள் நடமாட்டம் இல்லாத திநகர் ரங்கநாதன் தெருவை படமெடுத்து மின்னஞ்சலில் நண்பர் அனுப்பியது இதை நிரூபிப்பதைப் போல் இருந்தது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் ஒரு வழியாக முடிந்தது. எல்லோரும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஹீரோ "வடிவேலு" போல. ஆனால் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார். தி.மு.கவிற்கு வடிவேலுவை நம்பும் நிலைமையா? "எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி" என்கிற நிலைமை தான் தமிழக வாக்களர்களுக்கு. ஆனால் இதில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமை. எல்லாம் தலையெழுத்து. முடிவுகள் வந்த பிறகு என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கனிமொழி உள்ளே, தயாளு அம்மா வெளியே. காங்கிரஸ் "கூதுகலமாக உள்ள குடும்பத்தில் குழப்பத்தை உண்டாகி விட்டது". சட்டசபை தேர்தல் முடிவுகள் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக வந்தால் மந்திரி சபை பேரம் பேச உதவும். இல்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக மத்திய அரசை தி.மு.க ஆட்டி வைத்ததிற்கு கொஞ்சம் பழி வாங்க உதவலாம். கருணாநிதிக்கு முன்ன போனால் கடி, பின்னால் போனால் உதை. இந்த தள்ளாத வயதில் இதெல்லாம் தேவையா? ஆசை யாரை விட்டது. ஜெயித்தால் சமாளித்து விடுவார். தோற்றாலோ "இலங்கை" பிரச்னையை கையில் எடுத்துக் கொள்வார்.அவருக்கு தெரியாத வித்தையா?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சென்ற ஞாயிறு cleveland இல் நடை பெறும் தியாகராஜ ஆராதனா சென்றிருந்தேன். பாலமுரளி, சுதா ரகுநாதன் மற்றும் ரவிகிரண் ஒன்றாக இணைந்து வழங்கிய இசைக் கச்சேரி. பாலமுரளிக்கு எண்பது வயதானாலும், குரலில் சிறிது கூட நடுக்கம் இல்லை. நன்றாக பாட முடிகிறது. முக்கியமான பாட்டு கல்யாணியில் "சுந்தரி". பாலமுரளியின் மிகவும் புகழ் பெற்ற பாட்டு. சுதாவும், ரவியும் மரியாதை கலந்து பாலமுரளிக்கு ஈடு கொடுத்து பாடினார்கள். ஆனால் மொத்தம் பாடியது இரண்டு மணித்துளிகள் தான். இன்னும் கொஞ்ச நேரம் பாடியிருக்கலாம். நல்ல, வித்தியாசமான அனுபவம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சமீபத்தில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" மற்றும் கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்" படித்தேன். வழமையான சுஜாதா பாணி புத்தகம் கனவுத் தொழிற்சாலை. தயாரிப்பாளர்,நடிகர், நடிகை, துணை நடிகைகள், வளரும் இயக்குனர்,பாடலாசிரியர் என்று எல்லோரையும் வைத்து பின்னப்பட்ட கதை. இறுதியில் ஹீரோ அருண் தயாரிக்கும் சினிமா வெற்றி பெறுகிறது. ஆனால் அவனால் அதற்கான காரணம் அறிய முடியவில்லை. இன்றும் சினிமா உலகம் அப்படித் தான் உள்ளது. இந்த புத்தகத்தில் நடிகை லக்ஷ்மி, இயக்குனர் மகேந்திரன் மற்றும் சுஜாதா "ஒரு கலந்துரையாடல்" இடம் பெறுகிறது. அது ஓரளவு சுவையாக இருந்தது. ஒருமுறை படிக்கலாம்.

கலாப்ரியா அவரது இளமைக் காலத்து நினைவுகளை நினைவின் தாழ்வாரங்கள் புத்தகத்தில் மிக அழகாகத் தொகுத்தளிதிருக்கிறார். சிறிது சிறிதாக அவரது குடும்பம் வறுமை பிடிக்குள் செல்வதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி இருக்கிறார். அண்ணா இறந்த போது அவர் நண்பர்களுடன் மெட்ராஸ் சென்றதில் ஆரம்பிக்கறது அவர் நினைவுகள். 60 மற்றும் 70 களில் வந்த அனைத்து சினிமாக்களை பற்றியும் நிறைய தகவல்கள் கொடுத்துள்ளார். நீங்கள் திருநெல்வேலிக்காரராக இருந்தால் நிச்சியம் படிக்காமல் இருக்காதீர்கள். நெல்லையப்பர் கோவில், தேர், பார்வதி, ரத்னா, ராயல் திரை அரங்குகள் என்று உங்களை நெல்லை டவுனில் கொண்டு சேர்த்துவிடும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக