புதன், 22 செப்டம்பர், 2010

சா.கந்தசாமியின் சாயாவனம் - அழிவைச் சித்தரிக்கும் அழியாத ஆக்கம்


சுமார் நாற்பத்தைன்பது வருடங்களுக்கு முன் சுற்றுச் சூழலை சமூக மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து ஓர் உயர்வான ஆக்கத்தை உருவாக்கும் எண்ணம் சா.கந்தசாமி அவர்களுக்கு எப்படித் தான் தோன்றியதோ? அதிலும் அவருடைய இருபத்தைந்து வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சமூகத்தில் அன்று நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் மரபான பண்ட மாற்று முறையிலிருந்து பணம் என்ற பேய் எப்படி மெதுவாக தன் பலத்தை பரப்ப ஆரம்பித்தது என்பதை சாயாவனம் துல்லியமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது.ஓர் அழிவை அழியாத சித்திரம் ஆக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

"ஒரு புளியன் தோப்பை அழித்து சர்க்கரை ஆலை கட்டப்படுகிறது" என்று கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதனின் பேராசை, அகங்காரம், இலக்கை அடைந்தே தீரும் வெறி, அப்பாவி மக்களின் எண்ண ஓட்டங்கள், மனிதர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் என்ற பல விசயங்களை மனதில் ஒருவிதமான நெருடலோடு படிக்கும் படி கதையை கட்டமைத்துள்ளார் நாவலாசிரியர் என்றால் மிகையாகாது.

வெளிநாட்டில் இருந்து சாயவனத்திற்கு வரும் சிதம்பரம் தான் புளியன் தோப்பை வாங்கி சர்க்கரை ஆலை கட்ட முற்படும் கதையின் நாயகன். அதற்காக அவன் மேற்கொள்ளும் சமாதானங்கள், அவனுக்குள் நிகழும் அற வீழ்ச்சி, அவனுடைய எண்ணங்கள் நிறைவேற, நிறைவேற முற்றிலும் மறந்து போகும் மனிதாபிமானம் என்று கதைப் பின்னப்பட்டுள்ளது. இதில் சிவனாண்டித்தேவர் சிதம்பரத்திற்கு பெரிதும் உதுவுகிறார். காடு எரியூட்டப் படுவதை சிறிது கூட ஆர்வம் குறையாமல் படிக்கும் படி எழுதியுள்ளார். சிதம்பரத்தின் மன நிலையையும், அற வீழ்ச்சியையும் அணையில் நீர்மட்டம் போன்ற சித்தரிப்புக்கு ஒப்பிடலாம்.

செட்டியார் வீட்டிற்க்குச் சென்று நெய்த புடவையை எடுத்து வந்து நெல் விளையும் போது கொடுக்கும் ஓர் இணக்கம், "பெண்ணிற்கு ஒரு தங்கக் கூண்டிலிருந்து மற்றொரு தங்கக் கூண்டிற்கு செல்லும்" நிகழ்ச்சியாக அந்தக் காலத்துக் கல்யாணத்தை பற்றிய விவரிப்பு, காங்கிரஸ் மாநாடு பற்றிய செய்தி, பண்ட மாற்று முறைக்கு பதிலாக பணப் புழக்கத்தை கையாளத் தெரியாத மற்றும் விரும்பாத ஊர் மக்கள், ஆலைக்கு கரும்பு வேண்டும் என்பதற்காக கரும்பைப் பயிரிட ஊக்குவிக்கும் சிதம்பரத்தின் செயல்பாடுகள், தன் இறந்த தாயைப் பற்றி அவளுடைய பால்ய சிநேகிதி பேசும் போது கூட சிறுதும் உணர்ச்சி காட்டாத சிதம்பரத்தின் மன ஓட்டம் என்று பல நிகழ்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர் எந்த இடத்திலும் ஒரு முடிவைச் சொல்லாமல், வாசகர்களின் கற்பனையில் காட்சிகளை விரிவடையச் செய்வது மற்றும் நாவல் முழுவதும் மறைத்து கிடக்கும் படிமங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் ஆவல் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் இது. தமிழின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக எந்தக் காலத்திலும் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காலச்சுவடின் கிளாசிக் பதிப்பில் அழகாக நாவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சிகரம் வைத்தார் போல் பாவண்ணன் அவர்களின் முகவுரை அற்புதம்.
மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டும் ஒரு நாவல் சாயவனம்.

சனி, 4 செப்டம்பர், 2010

ஓர் ஆசிரியரின் நினைவாக.... II

வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிமிட அனுபவம் மறக்க முடியாத சுவையான இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வலிமையுள்ளது. எனக்கு அப்படி ஓர் அனுபவம் ஓர் ஆசிரியரின் மூலம் கிடைத்தது. அவரின் நினைவாகத் தான் இந்த இடுகை.

நான் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலையில் கணிதத்தை சிறப்புப் படமாக எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். தமிழும், ஆங்கிலமும் கட்டாயம் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். அந்த வகுப்புகளில் ஐம்பது மாணவர்கள் இருப்பார்கள். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே பெரிய ஈடுபாடுடன் தமிழும், ஆங்கிலமும் கற்றோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அது பெரிய தவறு என்று உணர்ந்த போது காலம் கடந்து விட்டது. அதிலும் ஆங்கிலத்தை விட தமிழ் கற்பதில் ஓர் அக்கறையின்மை இயல்பாகவே மாணவர்களிடையே இருந்தது என்றால் மிகையாகாது.

இரண்டாம் ஆண்டில் பேராசிரியர் லூர்து அவர்கள் தமிழ் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். அவர் புத்தகங்கள் வாங்குவதிலும், படிப்பதிலும் நிகரில்லாதவர். அவருடைய வருமானத்தில் கணிசமான தொகையை புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பதாகக் கூறுவார். பட்டிமன்றங்களில் விருப்பமில்லாமல் அவர் கலந்து கொண்டது கூட இதற்குத் தான் என்ற பேச்சு உண்டு. ஒரு முறை "Future Shock" என்ற புதிதாக வாங்கிய புத்தகத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ஒரு நாள் வகுப்பில் புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறினார். ஒரு கதையின் முடிவில் புதுமைப்பித்தன் "அங்கே சிருஷ்டித் தொழில் நடக்கிறது" என்று முடித்ததைப் பற்றி சிலாகித்தார். அப்போதெல்லாம் குமுதம், கல்கி,விகடன் வாசிப்புத் தான் இருந்தது. லூர்து அவர்கள் அறிமுகப்படுத்தலில் நூலகத்திலிருந்து புதுமைப்பித்தனைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தி.ஜா,வண்ணநிலவன், ல.ச.ரா என்று அருமையான இலக்கியத்தை நோக்கிச் செல்லும் அனுபவம் வாய்த்தது. அது தொடர்ந்து இன்று ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் வரை கொண்டு சேர்த்திருக்கிறது. உண்மையான இலக்கிய அனுபவம் எது என்பதும் லூர்து அவர்கள் திறந்து வைத்த வாசல் மூலம் அறிய முடிந்தது. பேராசிரியர் லூர்து அவர்கள் இன்று நம்முடன் இல்லை எனினும், அவருக்கு என் நன்றியைச் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. உண்மையாக அவர் பாடத்திட்டத்தில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை (அதற்கு முழு பொறுப்பு நான் தான்). ஆனால் இன்று ஓரளவு இலக்கிய வாசகனாக இருப்பதற்கு வழிகாட்டி பேராசிரியர் லூர்து அவர்கள் என்பதை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறேன்.