வியாழன், 21 மே, 2009

ராபர்ட் பிராஸ்டின் நெருப்பும்,பனிக்கட்டியும்

ராபர்ட் பிராஸ்டின் (Robert Frost) இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆசையை நெருப்பிற்கும்,வெறுப்பை பனிக்கட்டிக்கும் உவமையாக கொடுத்திருக்கிறார் என்பது என் கணிப்பு.உணர்ச்சிகள்,ஆசைகள் தான் நெருப்பாகிறது இங்கு இந்தக் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணங்களும், புரிபடும் அர்த்தங்களும் வெவ்வேறு வகையாக இருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பாகும்.



உலகம் நெருப்பில் முடியும் என்பது சிலர் கூற்று

பனிக்கட்டியில் முடியும் என்பது சிலர் கூற்று.

நான் சுவைத்த ஆசைகளிலிருந்து

நெருப்பை விரும்புவர்கள் பக்கமே இருக்கிறேன்.

இரண்டு முறை உலகம் முடிவிற்கு வருமானால்,

வெறுப்பைப் பற்றி போதுமான அளவு எனக்குத் தெரியும்

நான் நினைக்கிறேன் பனிக்கட்டியும் அழிவிற்கு மிகச் சிறந்தது

என சொல்ல முடியும்

மேலும் அதுவே போதுமானதும் கூட.




மனிதனுக்கு பல விதமான ஆசைகள்.சில ஆசைகள் விருப்பங்களாக வந்து போகும்.மற்றும் சில ஆசைகள் நிராசைகளாகப் போய் விடும். அப்போது ஏமாற்றம்,கோபம் அதனால் வன்முறை என்று அழிவுப் பாதைக்கு போகும் வாழ்க்கை.சில சமயம் ஆசையின் காரணமாக உடம்பு கொதிக்கும்,நரம்பு புடைக்கும்.ஆனால் சில ஆசைகள் மனதில் கொழுந்து விட்டு எரியும்.அந்த எரியும் ஆசைகள் தான் மனிதனின் அழிவிற்கு காரணமாகிறது. இந்த ஆசைகளைத் தான் நெருப்பாக சித்தரிக்கிறார் பிராஸ்ட்.

வெறுப்பு என்று வந்து விட்டால் மனம் படும் பாடு சொல்லி முடியாது.வெறுப்பின் விளைவு ஆத்திரம்.ஆத்திரம் வந்தால் புத்தி பேதலிக்கிறது.அழிவை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகிறது.கறுப்பர்,வெள்ளையர்,ஜாதி,மதம் மற்றும் இனம் என்ற பெயரில் தான் மனித குலத்தில் எத்தனை எண்ணிலடங்காத வெறுப்புக்கள் உலா வருகின்றன.அதனால் ஏற்படும் சண்டைகள்,சச்சரவுகள் சொல்லி முடியாது.வெறுப்பினால் மனம் பனிக்கட்டி போல் இறுகி விடுகிறது. உதவி செய்ய மனம் வராது.அதனால் தான் பிராஸ்ட் வெறுப்பை பனிக்கட்டிக்கு உவமை ஆக்குகிறார் போல் உள்ளது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். மேலும் இந்தக் கவிதையைப் படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பின்னூட்டம் இட்டு பகிர்ந்து கொள்ளலாமே?

Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.

1 கருத்து: