திங்கள், 31 அக்டோபர், 2011

கந்த ஷஷ்டி அனுபவங்கள்

நெல்லையில் வாழ்ந்தால் திருச்செந்தூர் முருகன் கந்த ஷஷ்டி விழா ஒரு சமுதாய நிகழ்வாக நம்முடன் உறவாட முடியாமல் இருக்க முடியாது. தீபாவளி முடிந்த கையுடன் ஷஷ்டித் திருவிழா தொடங்கி விடும். முருகன் மீது தீராத அன்பும், நம்பிக்கையும் கொண்ட பெரும் திரளான மக்கள் தீபாவளி முடிந்த வளர் பிறையில் முதல் ஆறு நாட்கள் விரதமிருந்து அந்த செந்திலாண்டவனை மனதார ஆராதிக்கத் தொடங்கி விடுவார்கள்.


நானும் என் பங்குக்கு கல்லூரி நாட்களில் ஷஷ்டி விரதமிருந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. ஷஷ்டி அன்று திருச்செந்தூர் சென்று சூர சம்ஹாரம் பார்த்து வந்தது ஒரு நீங்காத நினைவு. பாளையங்கோட்டையில் பஸ் பிடித்து திருச்செந்தூர் செல்ல முடியாது. ஏனெனில் வரும் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழியும். ஓட்டுனர் அங்கு ஒரு மனித ஜென்மம் இருப்பதாகக் கூட நினைக்க மாட்டார். அதனால் ஜங்ஷன் (பழைய பேருந்து நிலையம்) சென்று, அடித்துப் பிடித்து கிடைக்கும் பேருந்தில் ஏறி, திருச்செந்தூரில் இறங்கினால் சாரை, சாரையாக மக்கள் கூட்டம் கடற்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். கடற்கரையில் மணலைப் பார்க்க முடியாது. மக்கள் தலைகளைத் தான் பார்க்க முடியும்.



முதலில் யானை முகம் மற்றும் சிங்க முகம் சம்ஹாரம் முடிந்த பிறகு, சூரனின் முக சம்ஹாரம் நடக்கும். பிறகு மரமாக சேவல்கள் அமர்ந்திருக்க வலம் வர, அந்த மரத்தைச் சாயத்த பிறகு சேவல்கள் பறப்பதுடன் சூர சம்ஹார நிகழ்ச்சி முடியும் என நினைவு. உடனே வேகமாக ஓடி, நெல்லை செல்லும் பேருந்தைப் பிடித்து வீடு வந்தால், அங்கு அம்மா வாசலில் காத்திருக்கும் தருணம் இன்றும் கண் முன் நிற்கிறது. குளித்து விட்டு வந்தால், அம்மா சுடச், சுட கொடுக்கும் தோசையின் சுவைக்கு ஈடு ஏதேனும் உண்டா அதுவும் நாள் முழுக்க எதுவும் உண்ணாத பட்சத்தில்?

எல்லோரும் கைவிடும் போதும், மானசீகமாக கூடவே இருக்கும் அந்தக் கந்தனை மறக்க முடியுமா? தமிழ் நாட்டில் இருக்கும் முருகத் தலங்களை பார்த்தாகி விட்டது. ஒரு முறை கதிர்காமம் செல்ல விருப்பம். நிறைவேறுமா?

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பார்த்தது, கேட்டது, ரசித்தது -3




முன்பெல்லாம் தொலைக்காட்சியில் சில மாதங்கள் ஆன சினிமா தான் காட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது சில நாட்களே ஆன படங்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். அதிலிருந்தே அந்தப் படங்களின்  வெற்றியைத் தெரிந்து கொள்ளலாம். பயணம் என்ற சினிமாவை டிவியாரில் பதிவு செய்து பார்த்தேன். எப்போதும் போல் பிரகாஷ் ராஜ படத்தில் இடம் பெறும் அதே நடிகர்கள்.நாகார்ஜுன் மட்டும் புதிது. படம் பாட்டு  கீட்டு என்றெல்லாம் இல்லை. விறுவிறுவென்று இரண்டு மணி நேரம் ஆங்கிலப் படம் போல ஓடியது. சினமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் பிருதிவிராஜ்  கடத்தப் பட்ட விமானத்தில் மாட்டிக் கொள்ள, அவர் சினிமாவில் பேசிய பன்ச் வசனங்களை வைத்து அவரைக் கலாய்ப்பது மிக அருமை. ஒரு முறை பார்க்கலாம். மசாலா படங்களுக்கு இது எவ்வளவோ தேவலாம். இது போன்று ஒரு படம் எடுக்க நிச்சியம் தைரியம் வேண்டும். அதற்காக பிரகாஷ் ராஜை பாராட்டலாம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கே.பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்தது ஒரு நல்ல நிகழ்வு. அவருடைய பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் படம் முழுவதும் நன்றாக இல்லை என்றாலும் சில காட்சிகள் அற்புதமாக இருக்கும். குறிப்பாக "அவர்கள்" படத்தில் கமலும், சுஜாதாவும் நெருங்கி வரும் போது, ரஜினி தன் முன்னால் மனைவியான சுஜாதாவிடம் அன்பு காட்டுவது போல் நடித்து ஏமாற்றுவது, தப்பு தாளங்கள் படத்தில், விலை மாதுவான  சரிதாவை ரஜினி காதலிக்க தொடங்கியவுடன், ரஜினி சரிதவை சந்தேகப்படுவது என்று எழுதிக் கொண்டே போகலாம். பாலச்சந்தரின் பல பேட்டிகள் வந்திருந்தாலும், தமிழ் மகன் அவர்களின் இந்த பேட்டி நன்றாக இருந்தது. படித்துப் பாருங்கள்.





xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கடந்த இருபது வருடத்தில் பொறியியல் அல்லது கணணியியல் படித்தவர்கள் கட்டாயம் "C" Language படிக்காமல் இருந்திருக்க முடியாது. ஓர் அருமையான கணணி மொழி. அதை படித்தது ஒரு சுவையான அனுபவம். அதனை கற்பிப்பது மேலும் சுவை சேர்க்கும் அனுபவம்.அதை உருவாக்கிய டென்னிஸ் ரிட்சி (Dennis Ritchie)சமீபத்தில் காலமானார். இவர் Bill Gates அல்லது Steve Jobs போன்று பெரிய அளவில் பெயரும். புகழும், பணமும்  பெறவில்லை. பலருக்கு இவரை  தெரிந்திருக்கக் கூட  வாய்ப்பில்லை. ஆனால் இவர் செய்தது கணணி உலகில் ஒரு பெரிய புரட்சி என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் நினைவாக அவருடைய புத்தகத்தில் இரண்டு பக்கங்கள் படித்து அவருக்கு மானசீக அஞ்சலி செலுத்தினேன்.அவர் மரணத்தைப்  பற்றி படிக்க சுட்டிகள்.


http://news.yahoo.com/dennis-ritchie-computer-programming-pioneer-dies-185648035.ஹ்த்ம்ல்

http://www.computerworld.com/s/article/9220823/Dennis_Ritchie_father_of_Unix_and_C_programming_language_dead_at_௭௦

http://siliconangle.com/blog/2011/10/13/dennis-ritchie-rip-computer-science-pioneer-and-father-of-the-c-programming-language/