வியாழன், 24 பிப்ரவரி, 2011

கோபிகிருஷ்ணனின் "தூயோன்" சிறுகதை

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்கிறேன். படித்து மகிழுங்கள்.

தூயோன் - கோபிகிருஷ்ணன்










தமிழினி வெளியீடு. விலை ரூ.40 /=

நன்றி: தமிழினி

கோபிகிருஷ்ணனின் "தூயோன்" சிறுகதைகள் தொகுப்பு


எழுத்தாளர் ஜெயமோகன் திண்ணையில் கோபிகிருஷ்ணன் மறைந்த போது எழுதிய ஓர் இரங்கல் கட்டுரை மூலம் தான் கோபிகிருஷ்ணனின் முதல் அறிமுகம். பிறகு எழுத்தாளர் எஸ்.ரா.வின் கோபிகிருஷ்ணன் பற்றிய ஓர் அருமையான கட்டுரை அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கக் கிடைத்தது. அவரின் ஜெமோ,எஸ்.ரா கட்டுரைகள் படிக்கக் கிடைக்காமல் இருந்திருந்தால் ஒரு நல்ல எழுத்தாளரின் படைப்புக்களைப் படிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.அவருடைய தூயோன் சிறுகதைகள் தொகுப்பு நண்பர் திருமூர்த்தி (இவர் எஸ்.ரா.வின் பரம விசிறி. எஸ்.ரா.வின் சமீபத்திய "துயில்" நாவல் வெளியீட்டில் அதை இ.பா.விடமிருந்து பெற்றுக் கொண்ட வாசகர்) உபயம். அவருக்கு நன்றிகள்.

சமுதாயத்தைப் பற்றிய கூர்ந்த கவனிப்பும், யதார்த்தமும் கலந்தது தான் கோபியின் படைப்புகள். இந்தத் தொகுப்பில் 22 கதைகள் உள்ளன.இவர் கதைகள் அனைத்தும் 4 அல்லது 5 பக்கங்கள் கொண்டவைகள் தான். கடவுள் நம்பிக்கை இல்லாமை அல்லது அதைக் கிண்டலடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துதல், அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், பொருளாதார சிக்கல்கள், மனதில் நொடியில் தோன்றி மறையும் சலனங்கள், பெண் குழந்தையின் மீது பாசம் போன்றவைகள் தான் இவரின் கதைக் கருக்கள். முக்கியமாக இவர் எந்த ஸ்தாபனத்திற்கும் எதிரானவர் போல் உள்ளது. இவருக்கு வேலை இடத்தில நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் செல்லும் இயல்பில்லாததால், தொடர்ந்து வேலையைத் துறந்து வேறு வேலை சேருவதோ, இல்லை வேலை வாங்கித் தருவதாக வந்தால் அவர்கள் தொல்லை தான் தர வருகிறார்கள் என்று கதை மாந்தர்கள் மூலம் சித்தரிக்கிறார். இந்தத் தொகுப்பை மிகவும் ரசித்துப் படித்தேன்.

தூயோன், புயல்,வயிறு,உடைமை மற்றும் ஒரு பேட்டியின் விலை முப்பத்தைந்து ரூபாய் கதைகள் எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. அதிலும் புயல் கதையில் ஒரு பெண் வேலைக்குச் சென்று வருவதைப் (அந்தக் காலத்தில்) பற்றி உள்ள சிக்கல்களை மிக அழகாக விவரித்துள்ளார். தூயோன் கதை படித்தால் நம் வாழ்வில் மனிதபிமானமில்லாமல் கடந்து சென்ற சில நொடிகள் கட்டாயம் நினைவிற்கு வரும்.

தூயோன் கதை அடுத்த பதிவில்

தமிழினி வெளியீடு. விலை ரூ.40 /=

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பசுவய்யா (சு.ரா) "வருத்தம்" கவிதை - பகிர்வு


இன்று கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்து சு.ரா.வின் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன். இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதை ஏதோ செய்கிறது. 1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டக் கவிதை.நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவிதையை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்.

சுந்தர ராமசாமி கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், விலை.ரூ.175 /=.

உலகக் கோப்பை - நினைவுகளில் III


வாழ்வில் ஆச்சிரியம் கலந்த சந்தோஷம் கைகூடி வரும் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அப்படிப் பட்ட ஒரு நாள் தான் இந்தியா 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற நாள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத "பொன்" நாள். அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்பதல்லாம் இன்று வரலாற்றின் மற்றொரு பகுதி. இப்போது மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய வெற்றிக்கான காரணிகளையும் மற்றும் வேறு சில முக்கிய நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

1. இங்கிலாந்தில் போட்டி நடை பெற்றது.

2. இந்திய அணியின் ஒரு நாள் போட்டி மனப்பான்மையில் கபில் தேவினால் கொண்டு வரப்பட்ட மாறுதல்கள்.

3.மதன் லால்,பின்னி,அமர்நாத் மற்றும் பல்விந்தர் சந்து முதலான மித வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சில் இங்கிலாந்தின் தட்ப வெப்ப நிலை மிகவும் உதவியது.

4. யஷ்பால் ஷர்மா வெஸ்ட் இண்டீசுடனான முதல் போட்டியில் மிக அருமையாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தார்.

5. கபில் தேவின் ஆட்டமிழக்காத 175 ஓட்டங்களும், இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை அவுட் ஆக்க 20 அடிகள் ஓடி அவர் பிடித்த கேட்சும் மறக்க முடியாதவைகள்.




6. சந்தீப் பாட்டில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 32 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.



7. இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அடித்த 38 ரன்கள் என்றுமே உலகக் கோப்பை இறுதி
ஆட்டத்தில் விளையாடிய ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

8. சந்துவின் பந்து வீச்சில் கிரீனிட்ஜ் இறுதி ஆட்டத்தில் தவறாக கணித்து விளையாடி ஆட்டமிழந்தது ஓர் அதிசியம் தான்.

9. இரண்டு உலகக் கோப்பைகள் வெல்வதற்கு காரணமாக இருந்த வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், இந்த முறை அதன் தோல்விக்கு காரணமானார்.



10.மொஹிந்தர் இந்த தொடர் முழுவதும் நல்ல மட்டையாளராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் பரிமளித்தது இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

11.இதைத் தவிர ரிச்சர்ட்ஸ் பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டத்தில் அடித்த 80 ரன்கள் இந்தக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டம் என்றால் மிகையாகாது.




12. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது கபில் தேவின் விடா முயற்சி, அணிக்கு கொடுத்த உத்வேகம் மற்றும் சிறப்பாக அணியை வழி நடத்தி சென்ற விதம்.

இதுவரை நடந்த உலகக் கோப்பையைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் 2011 உலகக் கோப்பைப் போட்டியே ஆரம்பமாகப் போகிறது. அதனால் இந்தத் தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2003 ஆண்டு தான் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அது மட்டமான பந்து வீச்சினால் நடவாமல் போனது. இந்த முறையாவது இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதா? நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இந்தியா ஆட்டத்தில், இந்தியா வெற்றி பெற்றாலும் நன்றாக விளையாடவில்லை. மேலும் இதைப் பற்றி வரும் பதிவுகளில் ஆராய முயற்சிப்போம்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை - நினைவுகளில் II


முதல் மற்றும் இரண்டாவது உலகக் கோப்பைகளுக்கு நடுவே கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான பல நிகழ்வுகள் நடந்தேறின. முதலாவது ஆஸ்திரேலியாவின் "Packer " என்ற ஆசாமி பிரபல கிரிக்கெட் வீரர்களை வாங்கி "Packer Series" என்ற ஒரு நாள் போட்டிகளை நடத்த முடிவு செய்தார். இதற்கு உலகக் கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளிக்கவில்லை. பாக்கர் சீரிஸில் கலந்து கொள்ளும் வீரர்களை அதிகாரப் பூர்வ கிரிக்கெட் விளையாட்டுகளில் விளையாடுவதிலிருந்து நீக்கியது உலகக் கிரிக்கெட் கவுன்சில். அதனால் விவியன் ரிச்சர்ட்ஸ், லில்லி போன்ற பல மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இரண்டு வருடங்கள் அதிகாரப் பூர்வ கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம். இரண்டாவது முக்கிய மாற்றம். இரவு-பகல் (Day-Night) கிரிக்கெட் மற்றும் "சொட்டு நீளம் டோய்" என் பளிச் வெள்ளை உடைகள் போய், விதவிதமான உடை அணிந்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆட ஆரம்பித்தார்கள்.

நல்ல வேலையாக இந்த சண்டையெல்லாம் இரண்டாம் உலகக் கோப்பை 1979 இல் நடை பெறுவதற்கு முன்பே தீர்ந்தது. இந்த முறையும் இங்கிலாந்திலேயே போட்டி நடை பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் அணி க்ரோப்ட், ஹோல்டிங், ராபர்ட்ஸ்,கார்னர் என்ற மிக பலம் பொருந்திய பந்து வீச்சாளர்களின் அணிவகுப்புடன், ரிச்சர்ட்ஸ், க்ரிநிட்ஜ், லாயத் என பிரபல மட்டையாளர்களுடன் களம் இறங்கியது. அவர்கள் தான் கோப்பையை இந்த முறையும் வெல்வார்கள் என்று எல்லோரும் எதிர் பார்த்தது போல் நடேந்தேறியது.

பாகிஸ்தான் அணியும் மிகவும் பலம் பொருந்தியதாக இருந்தது. ஆனால் செமி பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் செம அடி. இங்கிலாந்தின் மைக் ப்ரியர்லி கிரிக்கெட் வரலாற்றில் அணித் தலைவராக, பேட்டிங்கை விட, மிகவும் புகழ் பெற்றவராக அறியப்படுகிறார். அவர் திறமையாக அணியை வழி நடத்தி நுசிலாந்து அணியை இங்கிலாந்த் மிகக் குறுகிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி காண உறுதுணையாக இருந்தார். ஆனால் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் இவர் பாச்சா பலிக்கவில்லை.

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்சின் சதம் மறக்க முடியாத ஒன்று. இங்கிலாந்தின் ஹென்றிக் துல்லியமான பந்து வீச்சிற்கும், சிக்கனதிற்கும் பெயர் போனவர். அதனால் அவரை இறுதி ஓவர் போட வைத்தார் மைக். ரிச்சர்ட் ஆன் சைடில் விளையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அதனால் இறுதி பந்தை வலது ஸ்டம்புக்கும் வலப்பக்கம் போட முடிவு செய்தார் ஹென்றிக். ஆனால் இதை எதிர்பார்த்த ரிச்சர்ட் வலது பக்கம் வேகமாக நகர்ந்து ஆன் சைடில் ஆறு ரன்கள் எடுத்தது நினைவிலிருந்து என்றும் நீங்காத நிகழ்ச்சி. முதல் இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வெல்ல ஒரு முக்கியப் பங்கு வகித்தார். எத்தனையோ மட்டையாளர்கள் வந்தாலும் "விவியன் ரிச்சர்ட்ஸ்" ஒரு வித்தியாசமான ஆளுமையாக வரலாற்றில் என்றும் இருப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.




இரண்டாவது உலகக் கோப்பையில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதிற்கில்லை. குண்டப்பா விஸ்வநாத் (இந்திய கிரிக்கெட்டில் மிகவும் அழகாக விளையாடும் திறமை கொண்டிருந்த மட்டையாளர்) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்து வீச்சாளர்களை அவர் மிக அனாயசமாகக் கையாண்டார். அந்த உலக கோப்பைப் போட்டியில் மிகவும் சிலாகிக்கப் பட்ட இன்னிக்ஸ்களில் இதுவும் ஒன்று. அந்த சம்பவங்களை இன்று நினைத்துப் பார்த்து பகிர்ந்து கொள்ளும் போது அன்றை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பஷீரின் பால்யகால சகி - காதலின் ருசி

பால்யகால சகி மலையாள எழுத்தாளர் பஷீரின் மற்றுமொரு குறுநாவல். தமிழில் குளச்சல் மு. யூசுப் மொழிபெயர்த்துள்ளார். பாவண்ணன் மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: "வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை" என்ற திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

"இளம்பருவத்துத் தோழி – நாவலின் கையெழுத்துப் பிரதியை பத்தாண்டுகளுக்கும் மேலாக தன்வசமே பஷீர் வைத்திருந்ததாக ஒரு குறிப்பு நூலில் உள்ளது. கிட்டத்தட்ட ஐந்நூறு பக்கங்களுக்கும் மேலாக எழுதிய நாவலை ஏழுமுறைக்கும் மேலாக அதைத் திருத்தித்திருத்தி எழுதி எழுபது பக்கங்களாகக் குறைத்தார் பஷீர்."

இதை 500 பக்க நாவலாக எழுதி இருந்தால் கூட இந்த அளவு உணர்ச்சிகரமாகவும், அழகுணர்ச்சியுடனும் அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒருவித குழந்தைதனத்துடனும், மெல்லிய நகைச்சுவை உணர்வுடனும் கதையைத் தொடங்குகிறார். பின்பு அது காதலாக மலர்ந்து, இறுதியில் நிறைவேறாமல் முடியும் போது பஷீரின் உழைப்பும், படைப்பின் அழியாத் தன்மையும் கைகூடிருப்பது தெளிவாகிறது.

கதை என்றால் பணக்கார வீட்டில் பிறந்த மஜீதும், ஏழ்மையிலுள்ள சுகராவும் இளமைக் கால நண்பர்கள். அந்த நட்பு காதலாகிறது. ஆனால் தந்தையின் கோபத்தால் வீட்டைவிட்டு வெளியேறும் மஜீத் பல துன்பங்களுக்கு ஆளாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் போது வீட்டின் நிலைமை தலிகீழாகி உள்ளதையும், சுகரா திருமணமாகி சுகமில்லாது வாழ்வதையும் அறிந்து செய்வதறியாது வருந்துகிறான். அந்த காதல் மட்டும் மஜீத் மற்றும் சுகராவின் மனங்களில் நீங்காமல் இருக்கிறது. மஜீத் குடும்பத்தைக் காப்பாற்றவும், சுகராவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அவனுக்கு சுகராவின் மரணச் செய்தி கிடைக்கிறது.

இந்த படைப்பைப் படித்து அன்று இரவெல்லாம் உறக்கமில்லை. எப்படி மோகமுள் பாபுவும், யமுனாவும் அந்தரங்கமாக என்னுடன் வாழ்கிறார்களோ அதே போல் பஷீரின் மஜீதும், சுகராவும் என் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பல விஷயங்களை வாசகனின் கற்பனைக்கு பஷீர் விட்டுச் சென்றுள்ளார். மஜீத் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் போது சுகரா ஏதோ சொல்ல வந்து, அது இன்றுவரை சொல்லாமலே உள்ளது. மற்றொரு இடத்தில குடும்பம் வறுமையில் இருக்கும் போது ஒரு பணக்கார கொடை வள்ளலான முஸ்லீம் ஒருவரை சந்தித்து உதவி கேட்கிறான். ஆனால் அவர் ஒரு ரூபாய் கொடுக்கிறார். இந்த இடத்தில ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு கொடை வள்ளலால் அத்தனை ஏழைகளுக்கும் உதவ முடியுமா? அந்த மாதிரி எதிர் பார்க்க முடியுமா? இதற்கும் ஒரே பதில் என்றும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.

பஷீரின் இந்த புனைவு ஓர் அழியாத காவியம் என்றே கூறலாம். இந்த படைப்பில் குறையே இல்லையா என்று கேட்கலாம். இதிலுள்ள நிறைகளைப் பார்க்கும் போது, ஒரு வாசகனாக எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. அதெல்லாம் விமர்சகனின் கவலை. படித்ததில்லை என்றால் நிச்சியம் படித்துப் பார்க்கவும்.

காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ.60/

உலகக் கோப்பை - நினைவுகளில்


புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், கிரிக்கெட் மீதான காதல் தொடர்கிறது. அதுவும் அந்த நாட்களில் கிரிக்கெட்டே மனதை ஆக்கிரமித்த நீங்காத நினைவுகள். ஐந்து நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் நடை பெற்று வந்த காலத்தில், புயலென நுழைந்தது தான் ஒரு நாள் கிரிக்கெட். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டம் மழையினால் தடை பட்டதால், அதை ஒரு நாள் ஆட்டமாக மாற்றியதில் தோன்றிய சிந்தனை தான் ஒரு நாள் உலகக் கோப்பை பிறக்கக் காரணமானது.

Prudential என்ற கம்பெனி தான் முதல் உலகக் கோப்பையை 1975 ஜூனில் நடத்தியது. வரலாற்றில் சிறப்பான கேப்டன்கள் மிகவும் அபூர்வம். Ian Chappell ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவர் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலியா தான் முதல் உலகக் கோப்பையை வெல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாப்பல் மிக பிரமாதமாக ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தியும் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.

அந்த காலத்தில் தொலைக் காட்சி இல்லாததால் தட்டினால் கேட்கும் ரேடியோவில் தான் ஆட்டத்தின் வர்ணனை கேட்க முடியும். அந்த சுகமே தனி. அன்றிருந்த வருணனையாளர்கள் ஆட்டத்தை நேரில் பார்க்கும் உணர்ச்சியைக் கொடுப்பார்கள். அப்போது 60 ஓவர்கள் ஆட்டம். அதனால் விளையாடுவது மிகவும் கடினம். விக்கட்டும் விழாமல் அடித்தும் ஆட வேண்டும். முதல் உலகக் கோப்பையில் மிகச் சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்கு இடையே நடந்த இறுதி ஆட்டம் தான். Clive Lloyd அடித்த 102 ரன்கள் மற்றும் விவியன் ரிச்சர்ட்சின் அருமையான பீல்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணிகள். Ian Chappell எழுதிய "சப்பலி" என்ற புத்தகத்தில் இந்த இறுதி ஆட்டத்தைப் பற்றி மிக அழகாக வருணித்திருப்பார்.

எந்த அளவுக்கு இந்த இறுதி ஆட்டம் மனதில் நிற்கிறதோ அதே அளவு நம் காவஸ்கர் 60 ஓவர் விளையாடி 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததும் நினைவில் நிற்கிறது. காவஸ்கர் ஆட்ட வரலாற்றில் இது ஒரு பெரிய கரும் புள்ளி. குறிப்பாக அதற்கு முந்தைய ஆண்டு லீட்சில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் காவஸ்கர் அடித்த 101 ஓட்டங்கள் அவர் விளையாடிய முதல் ஐந்து சிறந்த இன்னிங்க்ஸ்களில் ஒன்று என்றால் மிகையாகாது. மற்ற படி இந்தியாவும் முதல் உலகக் கோப்பையில் கலந்து கொண்டது என்பதைத் தவிர இந்திய ஆட்டத்தைப் பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

1979 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பஷீரின் மதில்கள் - அன்பின் மணம்



மலையாள எழுத்தாளர் பஷீரின் மதில்கள் குறுநாவல் எழுத்தாளர் நீல.பத்மநாபன், கவிஞர் சுகுமாரன் மற்றும் கவிஞரும், எழுத்தாளருமான சுந்தர ராமசாமி ஆகிய மூன்று பெரிய ஆளுமைகளால் தமிழிலில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த படைப்பு எத்தனை உன்னதமானதாக இருக்கக் கூடும் என்று யூகிப்பது கடினமில்லை. மிகுந்த எதிர் பார்ப்போடுதான் படிக்க ஆரம்பித்தேன். சோடைபோகவில்லை. பஷீர் மீது விமர்சகர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்களோ, ஒரு வாசகனாக எனக்குப் பிடித்த எழுத்தாளுமைகளில் இவரும் ஒருவராகிறார்.

1942 ஆம் ஆண்டு சிறைச்சாலை அனுபவத்தை அணையாகத் தேக்கி வைத்து 1965 -இல் ஓர் அருமையான புனைவாகத் தந்திருக்கிறார் பஷீர். சிறைச்சாலையில் கதையின் நாயகன் நுழையும் போது "பெண்ணின் மணம்" ஒரு குறியீடாக அறிமுகமாகிறது. வார்டன்களின் தில்லுமுல்லுகள், கைதிகளின் கைவரிசை என்று சம்பவங்களின் நீட்சியாக செல்லும் கதையில் ஒரு பெண் அறிமுகமாகிறாள். அவர்களை ஒரு பெரிய மதில் சுவர் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இருவருக்கு இடையேயான அன்பின் கரங்கள் நீண்டு கொண்டே போகிறது. இருவரும் எப்படியாவது சந்தித்து விடுவது என்று முடிவு செய்கிறார்கள். அந்த இடத்தில கதையை இலக்கியமாக்கிருக்கிறார் கதாசிரியர்.

புனைவு முழுவதும் சிறை வாழ்க்கையின் சந்தோசச் சித்தரிப்புகள். அன்பின் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது. அஹிம்சையின் சுவையை அனுபவிக்க முடிகிறது. படித்தால் புரியும். நல்ல இலக்கிய அனுபவம் வேண்டுமென்றால் கட்டாயம் படிக்கவும். இதனை மொழி பெயர்ப்பு செய்துள்ள கவிஞர் சுகுமாரனின் நடை அற்புதம். இதை அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப் படமாக எடுத்திருக்கிறாராம். காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ.50/=.

புத்தகத்திலிருந்து ஒரு சில வரிகள்:

கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.

அவள் கேட்டாள் "பேரென்ன?"

நான் பேரைச் சொன்னேன். தண்டனைக் காலம். என்னுடைய தொழில், நான் செய்ததாகச் சொல்லப்படும் ராஜத் துரோகக் குற்றம் எல்லாவற்றையும் சொன்னேன். வாழ்கையில் செய்த தவறுகளைப் பற்றி அவளும் சொன்னாள்.

அவளுடைய அழகான பெயர் - நாராயணி.
அவளுடைய அழகான வயது - இருபத்திரண்டு.

நான் சொன்னேன்: "நாராயணி, நாம ரண்டு பெரும் ஒண்ணாத் தான் ஜெயிலுக்குள்ளே வந்திருக்கோம்"

"அப்படியா?' நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு கேட்டாள். "எனக்கு ஒரு ரோஜாச் செடி கொடுப்பீங்களா?'

நான் கேட்டேன் "இங்கே ரோஜாச் செடியிருக்குன்னு நாராயணிக்கு எப்படித் தெரியும்?"
நாராயணி சொன்னாள் "ஜெயிலாச்சே! இங்கே ரகசிய மொண்ணுமில்லே ..... எல்லோருக்கும் தெரியும்."

...............
நாராயணி மறுபடியும் கேட்டாள்: "ஒரு ரோஜாச்செடியக் குடுப்பீங்களா?"

"நாராயணி" நான் இதயம் பிய்த்து போகிற சக்தியுடன் உரக்கக் கத்தினேன்.

"இந்த புவனத்திலிருக்கிற எல்லா ரோஜாச் செடிகளையும் உனக்குத் தரேன்."