செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் - 2


உயிரோசை இதழில் வெளியானது

முதல் முறையாக சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத ஓர் ஆட்சி மொரார்ஜி தலைமையில் 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி மத்தியில் பதவி ஏற்றது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள்.அவசர நிலை அத்து மீறல்களை ஆராய ’ஷா’ கமிஷன் அமைக்கப்பட்டது. அவசரத்தில் ஏற்பட்ட இந்தக் கூட்டணி நீண்ட நாளைக்குத் தாக்குப் பிடிக்கவில்லை.கட்சிக்குள் கௌண்டமணி-செந்தில் ரேஞ்சுக்கு சண்டை நடந்தது. மேலும் ஷா கமிஷன் விசாரணை,இந்திரா காந்தியை சிறையில் அடைத்தது எல்லாமாக அவர் மேல் மக்கள் மத்தியில் பரிதாபம் ஏற்பட வாய்ப்பானது. பத்திரிகையைத் திறந்தால் ஜனதா கட்சியின் உட்கட்சிச் சண்டை அல்லது இந்திரா காந்தி அவசரநிலைக் கொடுமைகள் பற்றிய விசாரணைதான் செய்தியாக இருந்தன. சரண் சிங்கின் பதவி ஆசையால் சொற்ப ஆயுளில் ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சரண் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். இந்த நேரத்தில் தமிழ் நாட்டை ஆண்டு வந்த எம்.ஜி.ஆரின் ஒரே குறிக்கோள் கருணாநிதியை எதிர்ப்பதுதான். அதற்காக மொரார்ஜி மற்றும் சரண் சிங் அரசை ஆதரித்தார். கருணாநிதியும் தன் மேல் உள்ள சர்க்காரிய கமிஷன் கண்டறிந்த ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்தார். மொரார்ஜி முடியாது என்று கூறிவிட்டார். இந்திரா மதுரைக்கு வந்த போது தி.மு.க வினர் கடுமையான வன்முறையில் ஈடுபட்டார்கள். 1979ஆம் ஆண்டு மத்தியில் கூட இந்திராவை எதிர்த்து மிகக் கடுமையான பேட்டியை கருணாநிதி கொடுத்தார்.

ஜனதாவின் உள்கட்சிச் சண்டையை இந்திரா காந்தி மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சரண் சிங் அரசை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கூறிவிட்டு,பாராளுமன்றம் சரண் சிங் தலைமையில் கூடுவதற்கு முன்பு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றார். சரண் சிங் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் விலகிச் சென்றதால் காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் தி.மு.க தேவைப்பட்டது. கருணாநிதிக்கும் ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பிக்க இந்திரா உதவுவார் என்று நினைத்தார்.


"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என்று தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் ஜனதா மற்றும் இடது சாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.எம்.ஜி.ஆர் தனக்கு அசைக்க முடியாத மக்கள் ஆதரவு இருப்பாக நினைத்தார். ஆனால் அவர் அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் அவருக்குக் கிடைத்த ஒரே தோல்வியாக அமைந்தது 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல். தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தமிழ் நாட்டில் அமோக வெற்றி பெற்றது. அகில இந்தியாவில் இந்திரா காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திரா மீண்டும் 1980ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். இந்திராவும் ஆட்சிக்கு வந்தார். கருணாநிதியும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்தார். இருவர் கனவும் நிறைவேறியது. கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் இருந்த வரையில் தேர்தலில் கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றி இந்தத் தேர்தலில்தான் கிடைத்தது.








1980ஆம் ஆண்டு இந்திரா பதவி ஏற்ற போது பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. முதல்முறையாக இந்தியா ஐ.எம்.ஃப் இடமிருந்து கடன் வாங்கியது. ஆர்.வெங்கட்ராமன் தான் மத்திய நிதி அமைச்சராக இருந்து இந்தக் கடனை வாங்க முற்பட்டார்.1982ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகள் இந்தியாவில் நடந்தன. தனி காலிஸ்தான் கேட்டு பிண்டரன்வாலே தலைமையில் நடந்த எழுச்சியை ஒடுக்க சீக்கிய பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது இந்திரா காந்தியின் முடிவுக்கு முக்கிய காரணமானது. தனக்கு காவலுக்கு இருந்த காவலாளிகளாலே இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.






இந்திரா காந்தி வெளிநாட்டில் இந்தியாவின் மதிப்பை அதிக அளவு உயர்த்தினார் என்றால் மிகையாகாது. ஆனால் உள்நாட்டில் அவர் எந்த விதமான எதிர்ப்பையும் தாங்கக் கூடியவராக இல்லாது இருந்தது ஒரு பெரிய குறை தான். கவர்னர்களையும்,முதல்வர்களையும் தன் விருப்பத்திற்கு மாற்றி வந்தார். ஜனாதிபதி பதவி ஒரு அலங்காரப் பொருளாக ஆக்கப்பட்டது. மிகத் துணிச்சலானவர். முடிவுகள் எடுப்பதில் தயக்கம் கட்டாதவர். ஒரு சிறந்த அரசியல் வாதியாக இருந்தார் என்பது மறுக்க முடியாதது. தலைவர்கள் முடிவு எடுப்பதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று முடிவுகளின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த முடிவைச் செயல்படுத்தி அதனை எதிர் கொள்வது. மற்றொரு வகை விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்துப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவை செயல் படுத்துவது. இந்திரா காந்தி முதல் வகையைச் சேர்ந்தவர். எத்தனை குறைகள் இருந்தாலும் இன்று இந்த அளவு இந்தியா முன்னேறி இருப்பதற்கு இந்திரா காந்தியின் பங்கு மறுக்க முடியாதது. இந்திரா காந்திக்குப் பிறகு அவரைப் போல ஒரு சக்தி வாய்ந்த,மக்களால் கவரப்பட்ட,துணிவான பிரதமர் இது வரை இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான்.





இதற்கு நடுவில் தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.கவும் காங்கிரசும் நெருக்கமாயின. எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரசும்,அண்ணா தி.மு.கவும் 1984ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

இந்திரா காந்தியின் மறைவு மற்றும் எம்.ஜி.ஆரின் மோசமான உடல்நிலை போன்றவற்றால் வீசிய அனுதாப அலையில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் அப்போது அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதி தேர்தலில் ஜெயித்தால் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் எம்.ஜி.ஆரிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகக் கூறி ஓட்டுக் கேட்டார். ஏழு ஆண்டு தண்டனை போதாதா என்றும்,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடினார். ஆனால் பலன் இல்லை. ராஜீவ் காந்தி பிரதமராகவும்,எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழக முதல்வராகவும் பதவி ஏற்றனர்.





ராஜீவ் காந்தியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மை அவரது ஆட்சிக்கு கூடிய விரைவில் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தியாவை நவீன மயமாக்க முற்பட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார் எனலாம். ஆனால் போபர்ஸ் ஊழல்,இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது,ஷா பானு விவகாரத்தில் கொண்டு வந்த சட்டத் திருத்தம்,ராம ஜன்ம பூமி கோவில் பிரச்சினையில் எடுத்த தப்பான முடிவு காங்கிரஸ் மற்றும் ராஜீவின் மீது கடுமையான எதிர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது..





தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக